‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!-chief minister and dmk president m k stalin speech at the dmk muperum festival and coral festival - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 17, 2024 10:37 PM IST

‘நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிட்டதா எனக் கேட்டால்… இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை! நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது’

‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
‘நெருக்கடிக்கு இடையில் ஒற்றை இலக்கோடு பயணிக்கிறோம்’ முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

‘‘14 நாட்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு, கடந்த 14-ஆம் தேதிதான் சென்னைக்குத் திரும்பினேன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நானும் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களும் அமெரிக்காவுக்குச் சென்றோம். சென்றோம் என்று சொல்வதைவிட, வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்! பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளும் – பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் கிடைக்க இருக்கிறது! அதை எண்ணி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதேபோல எனக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு என்பது – இந்தியாவின் மற்ற மாநில மக்களும் சமூக ஊடகங்களில் வியந்து பேசும் அளவுக்கு ‘ரீச்’ ஆனது!

1966-ஆம் ஆண்டு என்னுடைய 13 வயதில் - கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வைத் தொடங்கி - 58 ஆண்டுகாலம் இயக்கத்துக்கும் – தமிழ்நாட்டுக்கும் உழைத்த உழைப்புக்கான அங்கீகாரம்தான் இன்று பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நான் தலைவராக இருப்பது. கறுப்பு சிவப்புக் கொடியும் - உடன்பிறப்புகளின் அரவணைப்பும் - தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலும்தான், என்னை இந்த அளவுக்கு உயர்த்தின! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவன் என்ற தகுதியை எனக்கு வழங்கியவர்கள், கழக உடன்பிறப்புகளான நீங்கள்தான்! தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற மாபெரும் தகுதியை வழங்கியவர்கள் தமிழ்நாட்டு மக்கள்! கழகமும் – தமிழ்நாடும் என் இரு கண்கள் என நான் செயல்பட்டு வரும் இந்த நேரத்தில், கழகம் பவள விழாவைக் கொண்டாடுவது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்!

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை - திராவிட மாதமாகவே நாம் கொண்டாடிக் கொண்டு வருகிறோம்! பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியார் பிறந்தநாள் - பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் - அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள் - ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாகத் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டாடத் தொடங்கினார். இந்த விழாக்களுக்கு மகுடம் வைத்தாற்போல, கழகத்தின் தீரர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பிப்பார். பவளவிழா ஆண்டான இந்த ஆண்டு முதல் எனது பெயரிலான விருது ஆறாவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது! ஆறாவது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தியவன் என்பதால் இது வழங்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை! விருதுகள் பெற்ற ஒவ்வொருவரும் - ஒவ்வொரு வகையில் பெருமைக்குரியவர்கள்.

விருது பெற்றவர்களுக்கு சிறப்பு

தந்தை பெரியார் விருதைத் பாப்பம்மாள் அவர்கள் பெற்றுள்ளார். உடல்நிலை காரணமாக அவரால் வர இயலவில்லை. என்றாலும், அவர் சார்பில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த விருதைப் பெற்றிருக்கிறார். பெரியாருக்கு, பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்களே பெண்கள்தான். அந்த வகையில், பெரியார் விருதை ஒரு பெண் பெறுவது மிக மிகப் பொருத்தமானது! கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, கழகத் தொண்டராகச் சேர்ந்து, கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுத்து, 108 வயதிலும் கழகத்தின் அடையாளமாக மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திருமிகு. பாப்பம்மாள் அவர்கள் விளங்குகிறார்.

அடுத்து, பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை - அறந்தாங்கி ’மிசா’ ராமநாதன் அவர்கள் பெற்றுள்ளார். மாணவர்களை இணைத்து 1964-இல் கழகத்துக்கான தன்னுடைய தொண்டைத் தொடங்கியவர் ராமநாதன் அவர்கள். மொழிப்போரில் கலந்துகொண்டார்! 1976-ஆம் ஆண்டு மிசா கைதியாக ஓராண்டுகாலம் சிறையில் இருந்ததோடு, கழகத்தின் எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுத்த, தியாகத்தின் அடையாளம்தான், நம்முடைய ராமநாதன் அவர்கள்!

அடுத்து, தலைவர் கலைஞர் பெயரிலான விருதைத் தலைவர் கலைஞர் அவர்களால் ’ஆழ்வார்’ என்றும்- என்னால் ’திராவிட ஆழ்வார்’ என்றும் அழைக்கப்படும் - நமது ஜெகத்ரட்சகன் அவர்கள் பெற்றுள்ளார். இதயத்தின் ஒரு பக்கத்தைக் கலைஞருக்கும் – இன்னொரு பக்கத்தை ஆழ்வார்களுக்கும் அர்ப்பணித்தவர் நமது ஜெகத்ரட்சகன் அவர்கள். பள்ளிக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்தவர். கல்லூரிக் காலத்தில் பெரியாரைச் சந்தித்த காரணத்தால் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அதனால்தான் இத்தனை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஜெகத்ரட்சகன் அவர்கள் தொடங்கினாரா என்று நமக்கு சந்தேகமாக இருக்கிறது! கல்வி நிலையங்கள், இலக்கியப் பணிகள் என இருந்தாலும் - அரசியலையே முழுமூச்சாகக் கொண்டு ‘கலைஞரே சரணம்’ எனப் பணியாற்றும் கலைஞர் பக்தர் இவர்! எத்தனையோ சோதனைகள், மிரட்டல்கள், நெருக்கடிகள் அவருக்கு வந்தன. இன்னமும் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அச்சமில்லாமல், யாரோடும் சமரசம் ஆகாமல், கழகமே துணை எனக் கம்பீரமாகச் செயல்பட்டு வரும் ஜெகத்ரட்சகன் அவர்கள். அதனால் அவருக்குக் கலைஞர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்து, பாவேந்தர் பாரதிதாசன் விருதைக் கவிஞர் தமிழ்தாசன் பெறுகிறார். மொழிப்போராட்டத்தில் பங்கெடுத்ததற்காகப் பள்ளி மாணவராகக் கைது செய்யப்பட்டவர். பள்ளியில் படிக்கும்போதே மரபுக் கவிதைகள் எழுதும் அளவுக்குத் திறன் அவருக்கு இருந்தது. உணர்ச்சிமிக்க கவிதைகளைத் தீட்டி வருபவர். இது எல்லாவற்றையும் விட, தொலைக்காட்சி விவாதங்களில் சிங்கமெனச் சீறி, கழகத்தின் கொள்கைகளை, நிலைப்பாடுகளை நிலைநிறுத்துபவர்! புரட்சி வாதங்களை வைக்கும் அவருக்குப் புரட்சிக்கவிஞர் விருதை வழங்கியிருக்கிறோம்!

என் இனிய தோழனுக்கு விருது

அடுத்து, பேராசிரியர் விருதை என் இனிய தோழன் வி.பி.ராஜன் பெறுகிறார். 1969-ஆம் ஆண்டே தனது கிராமத்தில் அண்ணா அறிவாலயம் என்ற படிப்பகம் தொடங்கியவர் வி.பி.ராஜன். 1972-ஆம் ஆண்டுமுதல் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய அவர் 1980-களில், நான் இளைஞரணியை வழிநடத்தத் தொடங்கிய காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். மேடைகளில் ஏறினால், எதிரிகளுக்கு B.P-யை எகிற வைப்பார் V.P! அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்கள் அவரைப் ‘புலிக்குட்டி’ என அழைத்தார். அவருக்கு இனமானப் பேராசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்து, என் பெயரிலான விருதை ஒன்றிய முன்னாள் அமைச்சர் என் அருமைச் சகோதரர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் பெறுகிறார். 1962-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது பள்ளிச் சிறுவனாக உதயசூரியனுக்கு வாக்கு கேட்டுத் தேர்தல் பரப்புரை செய்தவர் அருமைச் சகோதரர் பழனிமாணிக்கம் அவர்கள். மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர். மாணவர் தி.மு.க.வில் இணைந்து வேகமாகப் பணியாற்றியவர். ஆறு முறை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் – ஒன்பது ஆண்டுகள் ஒன்றிய அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகள் மூலமாகக் கழகத்துக்குப் பெருமை சேர்த்த பழனிமாணிக்கம் அவர்கள், எனது பெயரிலான விருதைப் பெறுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

விருது பெற்ற அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் – கழக அமைப்புகள் சார்பில், உடன்பிறப்புகள் சார்பில் வாழ்த்துகிறேன். உங்களைப் பார்த்து எங்களுக்கே விருது கிடைத்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறோம். ஆண்டுதோறும் விருதுகள் வழங்குகிறோம் என்றாலும், இது கழகத்தின் பவளவிழா ஆண்டில் வழங்கப்படும் விருது என்பதால், இதற்குக் கூடுதல் சிறப்பு இருக்கிறது. உங்களைப் போன்றவர்களின் உழைப்பால்தான் கழகம் இந்த உன்னதமான இடத்தை அடைந்துள்ளது.

கிளை கழகங்களின் அடித்தளம்

ஒரு இயக்கம் 75 ஆண்டுகாலம் நிலைத்து நிற்பதும் – ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாகக் காட்சி அளிப்பதும் சாதாரணமான சாதனை இல்லை. இதற்கு முழுமுதல் காரணம் நமது அமைப்புமுறைதான் என்பதை நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவேன். 1977-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகம் தோற்றபோது, “இத்துடன் தி.மு.க. முடிந்தது” எனச் சில ஊடகங்கள் எழுதினார்கள். அப்போது தலைவர் கலைஞர் சொன்னார்… “கருணாநிதியின் வாழ்வே முடிந்துவிட்டாலும்; கழகத்தின் வாழ்வு முடியாது என்ற அளவுக்கு வலிமை வாய்ந்த அமைப்புமுறையைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்" எனச் சொன்னார். லட்சம் கிளைக் கழகங்களைக் கொண்டது நமது தலைமைக் கழகம்! இன்றைக்கு நாங்கள் தலைமைக் கழகத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறோம் என்றால் – அதற்கு அடித்தளமாக இருப்பது அடித்தளத்தில் இருக்கிற கிளைக் கழகங்கள். அடிக்கட்டுமானம் ’ஸ்ட்ராங்காக’ இருந்தால்தான், மேல்கட்டுமானமும் வலிமையானதாக அமையும். அந்த அடித்தளத்தைப் பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் – இனமானப் பேராசிரியரும் – இன்னும் எத்தனை எத்தனையோ தலைவர்களும் உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தலைவர்கள் எத்தனையோ தளபதிகளை – போராளிகளை – வீரர்களை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள்.

தலைவன் – தொண்டன் என இல்லாமல் அண்ணன் - தம்பி என்ற பாச உணர்வுடன் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டது. உலகத்தில் எந்த அரசியல் இயக்கமும் உடன்பிறப்பு என்ற பாச உணர்வுடன் கட்டமைக்கப்படவில்லை. அந்தப் பாச உணர்வுதான் – நம் எல்லோரையும் இயக்குகிறது! திராவிடக் கொள்கையை ஊட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் – முதல்முறை கோட்டையில் கொண்டு வந்து முன்னேற்றக் கழகத்த நிலைநிறுத்தினார். அதைத் தொடர்ந்து நான்கு முறை நாட்டை ஆளும் வாய்ப்பை ஏற்படுத்திக் காட்டினார் தலைவர் கலைஞர். ஆறாவது முறை அரியணைக்குச் செல்லும் கடமையைச் செய்யும் கட்டளை என் தோளில் விழுந்தது. லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் துணையுடன் – பெரும்பான்மையான தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்று திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்!

இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில், நாம் எல்லோரும் இந்த இயக்கத்தில் பொறுப்புகளில் இருக்கிறோம்; இந்த இயக்கத்தில் தொண்டர்களாக இருக்கிறோம் என்பதுதான், நமக்கான வாழ்நாள் பெருமை! இந்த தருணத்தில் ஒரு முக்கியமான செய்தியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 25 வயதைக் கொண்டாடும் வெள்ளி விழா ஆண்டிலும் நமது கழகம் ஆட்சியில் இருந்தது. 50 வயதைக் கொண்டாடும் பொன்விழா ஆண்டிலும் கழகம் ஆட்சியில் இருந்தது. 75 வயதைக் கொண்டாடும் பவளவிழா ஆண்டில் – இப்போதும் கழகம் ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடும்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயம் ஆட்சியில் இருக்கும்.

பட்டியலிடப்பட்ட சாதனை

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேவை, இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது! கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளோம்…

  • தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினோம்!
  • பல்லாயிரம் ஆண்டு பழமை கொண்ட நம் தாய்மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தோம்!
  • ஆதிதிராவிடர் – பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் – பெண்கள் – உழவர்கள் – நெசவாளர்கள் என விளிம்புநிலை மக்களைக் – கல்வியில், வேலைவாய்ப்பில் உன்னத இடத்துக்கு உயர்த்தினோம்!
  • எத்தனையோ பள்ளிகள் – எத்தனையோ கல்லூரிகள் – எத்தனையோ பல்கலைக்கழகங்கள்! அத்தனையும் நாம் உருவாக்கியது.
  • சாலைகள், பாலங்கள், அணைகள், நவீன நகரங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள் என உள்கட்டமைப்பு வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கித் தமிழ்நாட்டை நோக்கி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம்! கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் எத்தனை சாதனைகள்…
  • மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை!
  • உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை!
  • பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம்!
  • பணிக்குச் செல்லும் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து!

- என ஒவ்வொரு தனிமனிதரையும் காக்கும் அரசாக நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. “இத்தனை திட்டங்கள் எந்த மாநிலத்திலும் இல்லை”-எனச் சொல்லத்தக்க வகையில் – “எந்த மாநில அரசும் ஒரு மாநிலத்துக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்து தந்ததில்லை” எனச் சொல்லும் அளவுக்குத் திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டை வளம்மிகுந்த மாநிலமாக மேம்படுத்தியுள்ளது. தொடர்ந்து வளப்படுத்தி வருகிறது.

நெருக்கடியில் தொடரும் பயணம்

நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிட்டதா எனக் கேட்டால்… இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை! நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையில்தான், தமிழ்நாட்டை எல்லா விதங்களிலும் முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கை என்பது, நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று! தலைவர் கலைஞர் எளிமையாகச் சொன்னார்…“நாம் கோட்டையில் இருந்தாலும் – அங்கே இருக்கும் புல்லை வெட்டக்கூட உரிமை இல்லை”என்று சொன்னார். இன்றைக்குக் க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஒரு அறிவிப்பைத்தான் இந்த பவள விழா செய்தியாகச் சொல்ல விரும்புறேன்…

குறைவான நிதிவளத்தைக் கொண்டே, நம்மால் இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதிவளம் கிடைத்தால், தமிழ்நாட்டை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்ட நம்மால் முடியும்! எனவே, எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்! மாநில உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகவும் இந்தியாவில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஒரே இயக்கம், நம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்!

நான் என்றால் நான் இல்லை

ஏனென்றால், மக்களுக்கு நாம் உண்மையாக இருக்கிறோம். அதனால்தான், மக்கள் எப்போதும் நம்முடன் இருக்கிறார்கள். மக்களும் நாமும் ஒன்றாக இருப்பதால்தான் வெற்றியும் நம்முடன் இருக்கிறது. நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்! உங்களால் நான் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்கப்பட்ட பிறகு, எதிர்கொண்ட எல்லாத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். நான் என்றால் தனிப்பட்ட ஸ்டாலின் இல்லை. ஸ்டாலின் என்ற ஒற்றைப் பெயருக்குள், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பும் - ஆற்றலும் அடங்கி இருக்கிறது. இந்த வெற்றிகள் எல்லாம், உங்கள் உழைப்பால் – உங்கள் தியாகத்தால் – உங்கள் செயல்பாடுகளால் – உங்கள் நடவடிக்கைகளால்தான் சாத்தியமாயின.

இதுவரை நடந்த தேர்தல்களைப் போலவே, அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஏதோ ஆணவத்தில் நான் இதைச் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் சொல்கிறேன். அதற்காக மெத்தனமாகவும் யாரும் இருந்துவிடக் கூடாது. இருக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எந்த இயக்கமாக இருந்தாலும் அதற்குக் கொள்கை தேவை. அதைச் செயல்படுத்தும் வீரர்கள் தேவை. வழிநடத்தும் தலைமை தேவை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தித்திக்கும் திராவிடக் கொள்கை இருக்கிறது. கொள்கையைக் காக்கும் படையாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கிறது. நமது தொடர் வெற்றிகள் மூலமாக நூற்றாண்டு விழாவை நோக்கி முன்னேறுவோம்! அடுத்து நமது இலக்கு 2026 தேர்தல். இதுவரை இப்படியொரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றதில்லை என 2026-இல் வரலாறு சொல்ல வேண்டும்! அந்த வரலாற்றை எழுதுவதற்கு நீங்கள் தயாரா? இந்த உணர்வு வெற்றிச் சரிதமாக மாற வேண்டும். அதற்கு இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்! உறுதியேற்போம்! உறுதியேற்போம்,’’ என்று

அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.