நாடாளுமன்றத்தில் மிரட்டிய நேருஜி; பளாரென்று பதிலடி தந்த பேரறிஞர் அண்ணா!
நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பதிலடி தந்த சி.என்.அண்ணாதுரையின் மொழிப்புலமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் குறித்த விவகாரம் பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திமுக தலைவர் அண்ணாவை மிரட்டும் தொனியில் 'Your Days Are Numbered' (உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார். அதற்கு சற்றும் அயராமல் உடனடியாக அண்ணா, 'My Steps Are Measured' (எனது அடிகள் உஷாராக வைக்கப்படுகின்றன), என்று பதிலளித்தார். இந்தப் பதிலை நேரு சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சியினர் அண்ணாவின் ஆங்கிலப் புலமையைக் கண்டு அசந்துபோய் கரகோஷம் எழுப்பி அண்ணாவை வாழ்த்தினர்.
திமுக தலைவராக இருந்த சி.என்.அண்ணாதுரையின் தமிழ் மொழி வளம் சிறப்பானது. அவரது பேச்சை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அந்தளவு சொல்வளம் நிறைந்ததாகவும் நகைச்சுவையும் கருத்தாழமும் அண்ணாவின் உரையில் இடம்பெற்றிருக்கும்.
ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். ஏ.ராமசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையனான ராபர்ட் கிளைவ் பின்பு இந்தியாவையே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக மாறினான் எனும்பொருளில் “He came to India as Robert Clive and became Robber Clive” என்று தன் பேச்சினூடே சொல்விளையாடல் நிகழ்த்தினார் இலட்சுமணசாமி முதலியார். அவையிலிருந்தோர் அனைவரும் இதனை மிகவும் ரசித்ததோடல்லாமல் அண்ணா இத்தொடரை எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் முதலியாருக்கு அருகில் நின்றிருந்த அண்ணாவையே விழி இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனராம்.
அண்ணாவோ, "திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்" என்று அநாயாசமாக அதனை மொழிபெயர்க்கவும் அனைவரும் வியப்பில் விழிவிரிய விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழிபெயர்ப்புத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.
இப்படி அண்ணாவின் மொழிப்புலமையைப் பற்றி ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்