Chennai Day 2023: ‘மீனவ குப்பம் மெட்ராஸ் ஆன கதை!’ சென்னை தின சிறப்பு கட்டுரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Day 2023: ‘மீனவ குப்பம் மெட்ராஸ் ஆன கதை!’ சென்னை தின சிறப்பு கட்டுரை!

Chennai Day 2023: ‘மீனவ குப்பம் மெட்ராஸ் ஆன கதை!’ சென்னை தின சிறப்பு கட்டுரை!

Kathiravan V HT Tamil
Aug 22, 2023 05:15 AM IST

”தாமல் சென்னப்ப நாயக்கரின் மகன்கள் வெங்கடப்ப நாயக்கர் மற்றும் ஐயப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து மீனவ குப்பம் ஒன்றை 1639ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே நாளில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் வாங்கினார்”

சென்னை தினம் 2023
சென்னை தினம் 2023

இந்த நிகழ்வு நகரத்தின் தோற்றம் குறித்த கேள்விகளை எழுப்பது மட்டுமின்றி ஒரு சாதாரண மீனவ கிராமத்திலிருந்து சலசலப்பான பெருநகரத்திற்கு அதன் குறிப்பிடத்தக்க பயணத்தை நினைவூட்டுவதாகவும் உள்ளது. சென்னையின் பரிணாம வளர்ச்சி அதன் நெகிழ்ச்சி, தகவமைப்பு மற்றும் பல்வேறு கலாச்சார தாக்கங்களின் சென்னை மாநகரின் பன்முகத் தன்மைக்கு சான்றாக விளங்குகிறது.

ஆரம்பம்

சென்னையின் வரலாறு நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தையது. 1609ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் 1613ஆம் ஆண்டு சூரத்தில் தங்களது வணிகத்தை முதன் முதலாகத் தொடங்கினர். இதுவே ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் தொடக்கமாக அமைந்தது. 

இந்த நிலையில் ஆங்கிலேயர்களின் பார்வை கடற்கரைகள் சூழ்ந்த தென்னிந்தியாவின் பக்கம் திரும்பியது. தங்களது ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை விரிவு செய்ய ஆங்கிலத்தில் கோரமண்டல் எனவும் தமிழில் சோழ மண்டலக் கடற்கரை எனவும் அழைக்கப்பட்ட பகுதிக்கு வணிக ஆய்வினை ஆங்கிலேயர்கள் தொடங்கினர்.

ஆந்திராவின் மசூலிப்பட்டினம் பகுதியில் ஆங்கிலேயர்கள் வணிகத்தை மேற்கொண்டிருந்தாலும் ஆட்சியாளர்களின் போதய ஆதரவும் பெரிய லாபமும் கிடைக்காததால் வேறு இடத்தில் ஒரு வணிகக் கிடங்கை அமைத்து வணிகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இடம் தேடிய ’பிரான்சிஸ் டே’

முறையான வணிக கிடங்கு அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை ’பிரான்சிஸ் டே’ என்ற ஆங்கில வணிகரிடம் கிழக்கிந்திய கம்பெனி ஒப்படைத்தது. தொண்டை மண்டலத்தின் சோழ மண்டலக் கடற்கரையோரம் வெறும் மணல் திட்டாக இருந்த மீனவ கிராமம் ஒன்றை கண்ட ’பிரான்ஸிஸ் டே’ இந்த இடம் வணிகத்திற்கு ஏற்றதாக இருக்கும் என பரிந்துரைத்தார்.

தாமல் சென்னப்ப நாயக்கர் மகன்களிடம் நிலம் வாங்குதல்

இதனை அடுத்து தாமல் சென்னப்ப நாயக்கரின் மகன்கள் வெங்கடப்ப நாயக்கர் மற்றும் ஐயப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து 1639ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே நாளில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் வாங்கினார். இந்த நாளை மையமாகக் கொண்டே சென்னை தினம் என்ற பெயரில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

கிராமம் நகரமாதல் 

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு என்ற அந்த மீனவ கிராமம் நகரமாக மாற்றி வர்த்தக மையமாக தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றது. வணிகப் பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான கிடங்கினை கடற்கரைக்கு அருகே 1640 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கட்டி முடித்தனர். அன்றையதினம் புனித ஜார்ஜ் தினம் என்பதால் அந்த கிடங்கிற்கு புனித ஜார்ஜ் கோட்டை என பெயரிடப்பட்டது. இந்தக் கோட்டையை மையமாக கொண்டே ஆங்கிலேயர்களின் துணி ஏற்றுமதி வணிகம் நடந்தது.

கோட்டையும் குடியேற்றங்களும்!

கோட்டையில் ஆங்கிலேயர்கள் குடியேறினர். இந்த குடியேற்றம் விரைவில் கோட்டை பகுதிக்கு அப்பால் விரிவடைந்தது. பல உள்ளூர் வணிகர்களும், துபாஷி என அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்களின் மொழி பெயர்பாளர்களும் வெளியூர்களின் இருந்து அழைத்து வரப்பட்ட நெசவாளர்களும், கூலித்தொழிலாளர்களும் கோட்டைக்கு வெளிப்பகுதியில் தங்கள் குடியிருப்புகளை அமைத்தனர்.

’கருப்பர் நகரம்’

கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்து ’ஒயிட் டவுன்’(வெள்ளையர்கள் நகரம்) எனவும் கோட்டைக்கு வெளியே இடப்பக்கம் உள்ள பகுதிகள் ‘ப்ளாக் டவுன்’ (கருப்பர் நகரம்) எனவும் அழைப்பட்டது. 1906ஆம் ஆண்டு இந்தியா வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவாக கருப்பர் நகரத்திற்கு’ ஜார்ஜ் டவுன்’ என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

மெட்ராஸ் பிரசிடென்சியின் தலைநகர்

ஆரம்பத்தில் தமிழர்கள் மட்டுமே அதிக அளவில் குடியேறிய நிலையில் நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தெலுங்கு பேசும் வணிகர்களும் கூலித் தொழிலாளிகளும் குடியேற்றங்களை அமைத்தனர். போர்த்துக்கீசியர்கள், இஸ்லாமியர்கள், ஆர்மீனியர்கள், மார்வாடிகள், பார்சிக்கள், யூதர்கள் என பல இனக்குழுவினரும் சென்னையில் வேலை நிமித்தமாக குடியேற்றங்களை அமைத்தனர். காலப்போக்கில், சென்னை பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நிர்வாக மையங்களில் ஒன்றான மெட்ராஸ் பிரசிடென்சியின் தலைநகராக மாறியது.

’இந்தோ-சராசெனிக்’ பாணி கட்டடக்கலை

ஆங்கிலேயர்களின் கட்டுமானம் சென்னை நகரின் வடிவமைப்பை மாற்றியது. ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட அரசு அருங்காட்சியகம், உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் போன்ற சின்னச் சின்ன சின்னங்கள் பிரிட்டிஷ் மற்றும் இந்தோ-சராசெனிக் பாணி கட்டக்கலைகளை பிரதிபலிப்பதாய் மாறியது. 1688ஆம் ஆண்டு லண்டனுக்கு அடுத்த மாநகராட்சியாக ’மெட்ராஸ்' உதயமானது.

’வணக்கம் வாழ வைக்கும் சென்னை’

1996ஆம் ஆண்டு ’மெட்ராஸ்’ மாநகரம் ‘சென்னை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சென்னை இந்தியாவின் 4ஆவது பெரியநகரமாகவும் உலக அளவில் முக்கியமான 35 மாநகரங்களில் ஒன்றாகவும் சென்னை விளங்குகிறது. ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு, நிதிசேவை, மருத்துவம், மென்பொருள் ஏற்றுமதி, இயந்திய பாகங்கள் தயாரிப்பு ஆகியவைகளே சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. 

தெற்காசியாவின் 'டெட்ராய்ட்’ 

உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சென்னையில் தொழிற்சாலைகளை நிர்வகித்து வருவதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் 60% ஆட்டோ மொபைல் பாகங்கள் சென்னையில்தான் உருவாக்கப்படுகின்றன. இதனால் தெற்காசியாவின் டெட்ராயாடாக சென்னை விளங்குகிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கும் சென்னை, எலக்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் மையமாகவும் திகழ்கிறது. 

இந்தியாவின் மருத்துவ தலைநகர்

மருத்துவ சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகவும் சென்னை விளங்குவதால் வெளிநாட்டவரும் சென்னைக்கு வந்து மருத்துவ சிகிச்சைகளை பெற்றுச் செல்கின்றனர். வரும் 2025ஆம் ஆண்டில் சென்னையின் பொருளாதாரம் 150 பில்லியன் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் வரலாறு ஒரு மீன்பிடி கிராமமாக அதன் தாழ்மையான தொடக்கத்திலிருந்து சலசலப்பான பெருநகரமாக அதன் தற்போதைய நிலைக்கு, நகரம் நீண்ட தூரம் வந்துள்ளது. இந்த ’சென்னை தினம்’ குறிப்பிடத்தக்க பயணத்தின் காலமாற்றத்தின் நீண்ட நினைவுட்டலை அசைபோடும் வாய்ப்பை வழங்குகிறது. ’வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு ஹேப்பி பர்த் டே’

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.