CM Stalin On CAA: தமிழர்களுக்கு எதிரானது! தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு இடம் இல்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin On Caa: தமிழர்களுக்கு எதிரானது! தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு இடம் இல்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

CM Stalin On CAA: தமிழர்களுக்கு எதிரானது! தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு இடம் இல்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

Kathiravan V HT Tamil
Mar 12, 2024 02:02 PM IST

”CITIZENSHIP AMENDMENT ACT: இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்”

முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.  இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.  அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம். 

ஏற்கெனவே எதிராக தீர்மானம்!

இதன் காரணமாகத்தான்,  கழக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம்.  தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.   

மக்களை திசைத்திருப்பும் நோக்கம்!

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை.  இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். 

தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு இடமில்லை!

எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட  தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சிஏஏ சட்டம் பின்னணி!

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.  

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம், 2019 (சிஏஏ) செயல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி வகுத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்ட விதிகள் வெளியிடப்பட்டவுடன், மோடி அரசாங்கம் இப்போது வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 வரை இந்தியாவிற்கு வந்த துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கத் தொடங்கும். இதில் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோர் அடங்குவர்.

குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. ஆனால் அதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதுவரை விதிகள் அறிவிக்கப்படாததால், சட்டம் அமலுக்கு வரவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.