தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம்.. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை - அன்புமணி!

வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம்.. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை - அன்புமணி!

Divya Sekar HT Tamil
Jun 27, 2024 02:53 PM IST

Vanniyar reservation : இனியும் தாமதம் செய்யாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரசு உடனடியாக பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம்.. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை - அன்புமணி!
வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம்.. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை - அன்புமணி!

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் கட்டாயம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியிருப்பதாகவும், அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு வந்திருப்பதாகவும் சட்ட அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்த எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாத நிலையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தமிழக அரசு துணைக்கு அழைப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பொய் பேசுவது அழகல்ல

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு ஏற்படுத்திய தேவையற்ற சர்ச்சை தொடர்பாக நேற்றிரவு விளக்க அறிக்கை வெளியிட்ட சட்ட அமைச்சர் இரகுபதி, தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தவறுகளை மூடி மறைக்க முயன்றிருக்கிறார். 

முதலாவதாக, பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தோ, அதை பட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாகவோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவுமே தெரிவிக்கவில்லை என்று இரகுபதி கூறியுள்ளார்.

 மன்னன் எவ்வழியோ, மந்திரிகளும் அவ்வழியே என்பதைப் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்ன பொய்யை மறைப்பதற்காக சட்ட அமைச்சர் இரகுபதி அவர்களும் அடுக்கடுக்காக பொய்களை கூறியிருக்கிறார். அமைச்சர் போன்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள் மக்களிடம் பொய் பேசுவது அழகல்ல.

ட்ரெண்டிங் செய்திகள்

அவையில் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்

தமிழக சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கடந்த 24&ஆம் தேதி சில கோரிக்கைகளை வைத்தார். அப்போது சட்ட அமைச்சர் இரகுபதி அவர்கள் முதலிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடுத்தும் குறுக்கிட்டு பேசினர். முதலமைச்சர் பேசும் போது‘‘ ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்.

தமிழக அரசால் கடந்த 24&ஆம் தேதி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட த.நா.ச.பே. எண்: 11 என்ற எண் கொண்ட செய்திக் குறிப்பில் இந்த விவரம் இடம் பெற்றுள்ளது. இந்த செய்திக் குறிப்பு முரசொலி உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப்பட்டு, லட்சக்கணக்கானவர்களால் படிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் அவர்கள் கூறியதற்கு இந்த அளவுக்கு அப்பட்டமான ஆதாரங்கள் இருக்கும் போதே அவ்வாறு முதலமைச்சர் பேசவில்லை என சட்ட அமைச்சர் கூறுகிறார் என்றால் அவரது நேர்மை ஐயத்துக்குரியதாகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதிகள் வீற்றிருக்கும் அவையில் பொய்யான தகவல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தது பெருந்தவறு. இதற்காக அவையில் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் இரகுபதி

அடுத்ததாக வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சில பத்திகளையும், முழுமையான சாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் இல்லாத நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அடிப்படையிலான தரவுகளை மட்டும் சமூக, கல்வி & பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைக்கான காரணங்களாக எடுத்துக் கொண்டு முடிவெடுக்க இயலாது என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அனுப்பிய தகவல்களையும் சுட்டிக்காட்டி அவற்றின் அடிப்படையில் தான் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு வந்திருப்பதாக அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். 

ஒரு மாநிலத்தின் சட்ட அமைச்சராக இருந்து கொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்களையும், இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தேவைகளையும் அறிந்து கொள்ளாமல் அவர் பேசி வருவதால், அவருக்கு சில விளக்கங்களை மிகவும் எளிமையாக தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் எந்த இடத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 68-&ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள pertinent, contemporaneous data என்ற பதத்திற்கு ‘‘நிகழ்காலத்திற்கான, தகுந்த புள்ளிவிவரங்கள்’’ என்பது தான் பொருளே தவிர, அமைச்சர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சாதிவாரி புள்ளி விவரங்கள் என்று பொருள் அல்ல. சட்ட அமைச்சர் அவர்கள் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் என்ற தேவை எங்கிருந்து எழுகிறது?

2. சட்ட அமைச்சர் அவர்கள் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, ‘‘வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மக்கள்தொகை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமுதாயங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, சமூகநிலை போன்ற விவரங்கள் எதுவும் ஆராயப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது உண்மை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் இந்த பகுதியை படித்தாலே, நீதிபதிகள் கோருவது வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலைமை குறித்த விவரங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கும்போது வன்னியர் இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் என்ற தேவை எங்கிருந்து எழுகிறது?

3. ஏதேனும் ஒரு சமுதாயத்திற்கு இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்து புதிதாக வழங்கப்பட்டாலோ அல்லது இப்போதுள்ள இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி வழங்க வேண்டியிருந்தாலோ மட்டும் தான் அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள்தொகை விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், வன்னியர்கள் புதிதாக இட ஒதுக்கீடு கோரவில்லை; இருக்கும் இட ஒதுக்கீட்டின் அளவையும் அதிகரிக்கக் கோரவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் தான் உள் ஒதுக்கீடு கோருகிறது. இதை தீர்மானிக்க மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு 1989&ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது, அதற்கு ஆதாரமாக இருந்த சாதிவாரி மக்கள்தொகை விவரங்களே போதுமானவை. அதற்காக புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை.

4. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இருந்தால் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இப்போது கூறுவதே பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

அரசுக்கு ஆணையம் கோரிக்கை வைத்ததில்லை

5. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத நிலையில், அத்தீர்ப்பின்படி பரிந்துரை அளிக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வேண்டும் என்று கோருவது ஏன்?

6. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றால், அதை ஆணையத்திடம் அப்பணி ஒப்படைக்கப்பட்ட முதல் வாரத்திலேயே தெரிவித்திருக்க முடியும். ஆனால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது 17 மாதங்களுக்குப் பிறகு வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோருவது ஏன்?

7. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க வேண்டும் என்ற செயல்வரம்பு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 12.01.2023 ஆம் நாள் வழங்கப்பட்டது. முதலில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பின் மொத்தம் 3 முறை ஆணையத்திற்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை காலக்கெடு நீட்டிக்கப் படுவதற்கு முன்பும் அதற்கான காரணத்தை அரசிடம் ஆணையம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ஒருமுறை கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆணையம் கோரிக்கை வைத்ததில்லை.

8. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கும்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தமிழக அரசு ஆணையிட்டது. அதன்பின் ஒரு மாதம் கழித்து வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த தரவுகளை ஆய்வு செய்ய போதிய மனிதவளம் இல்லை என்றும், அதற்காக சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2023 பிப்ரவரியில் கேட்டுக் கொண்டது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்படி 17.02.2023ஆம் நாள் முதலமைச்சருக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம் எழுதினார். அதன்படி தரவுகளை தொகுக்கும் பணியை ஒருங்கிணைக்க ஹனீஷ் சப்ரா என்ற வடமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். அப்போது கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற கோரிக்கையை ஆணையம் எழுப்பவில்லை. அதற்கு மாறாக, வன்னியர்களின் பின்தங்கிய நிலைமை குறித்த புள்ளிவிவரங்கள் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வேண்டுமென ஆணையம் கோருவது ஏன்?

வன்னியர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி

9. வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு 1989&ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட போது, அதற்காக எந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. அம்பாசங்கர் ஆணைய அறிக்கையில் இருந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டது. 

இதை மறைத்து விட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதுவும் மத்திய அரசால் நடத்தப்பட்டால் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று சட்ட அமைச்சர் இரகுபதி கூறுவது வன்னியர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அவர்கள் கடைசி வரை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டும்; அவர்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி பிழைக்க வேண்டும் என்று திமுக அரசு கருதுவதையே காட்டுகிறது.

இந்த வினாக்களுக்கு எல்லாம் முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் அவர்களும் பதிலளிக்க வேண்டும்.

பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்றுகின்றனர்

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் சிவசங்கர் அவர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகின்றனர். வன்னியர்களின் பின்தங்கிய நிலைக்கான தரவுகள் இல்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், அமைச்சரோ, வன்னியர்களுக்கு 10.5%க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைப்பதாகக் கூறுகிறார்.

 அப்படியானால் அதற்கான புள்ளிவிவரங்கள் அவரிடம் இருப்பதாகத் தான் பொருள். ஒருபுறம் புள்ளிவிவரங்கள் இல்லை என்று முதலமைச்சர் கூறுகிறார்; ஆனால், புள்ளிவிவரங்கள் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். அந்த புள்ளிவிவரங்களைத் தானே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோருகிறது. அதை ஆணையத்தில் வழங்கி வன்னியர்க்கு இடஒதுக்கீடு வழங்க என்ன தடை?

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது அப்பட்டமான பொய். தமிழ்நாட்டில் இன்று 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அடிப்படையே அம்பாசங்கர் ஆணையம் அளித்த அறிக்கை தான். 1980&ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 50% ஆக உயர்த்தி எம்.ஜி.ஆர் அரசு பிறப்பித்த உத்தரவு செல்லுமா? என்பதை தீர்மானிக்க உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணையம் 1983&84ஆம் ஆண்டில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்தி சாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள், பின்தங்கிய நிலைமை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. 

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார்

அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த உண்மைகளையெல்லாம் அறியாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். அவரை சுற்றியுள்ளவர்கள் பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்றுகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

நிறைவாக, பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் காலங்களில் மட்டும் 10.50% இட ஒதுக்கீடு குறித்து பேசி மக்களை பா.ம.க. ஏமாற்றி வருவதாக சட்ட அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். அவரது அறியாமையை நினைத்து பரிதாபப்படுகிறேன். அதிமுகவிலும் அமைச்சர் பதவி, திமுகவிலும் அமைச்சர் பதவி என்று பசுமை கண்ட இடங்களுக்கெல்லாம் பாய்ந்து, பாய்ந்து பதவி பெற்ற இரகுபதி போன்றவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் நடத்தி வரும் சமூகநீதி போராட்டத்தின் ஆதியும் தெரியாது; அந்தமும் தெரியாது. அதனால், யாரோ எழுதிக் கொடுத்த கதையை கிளிப்பிள்ளை போன்று திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.

திமுக செய்த ஏமாற்று வேலைகளின் பட்டியல் மிக நீளமானது

2019&ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது அறிக்கை வெளியிட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பிறகு அதுகுறித்து வாயைத் திறக்க மறுக்கிறார். 

இடைத்தேர்தலின் போது வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேசி விட்டு, அதன்பிறகு பேசாமடந்தையாக மாறுவது தான் ஏமாற்று வேலை. அது தான் திமுகவின் முழுநேரத் தொழில்; அது திமுகவின் குருதியிலும், மரபணுவிலும் கலந்த ஒன்று. 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக வாரி வழங்கி விட்டு, அவற்றையெல்லாம் நிரப்ப மறுக்கும் திமுக தான் மக்களை ஏமாற்றும் மோசடிக்கு முழு நேர குத்தகைதாரர் என்பது அமைச்சர் இரகுபதிக்கு தெரியாதா?

நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, பயிர்க்கடன் ரத்து, 5.5 லட்சம் பேருக்கு அரசு வேலை, தமிழ்நாட்டில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% ஒதுக்கீடு, மின்சாரக் கட்டணம் குறைப்பு, மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு, பேருந்து கட்டண குறைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் என திமுக செய்த ஏமாற்று வேலைகளின் பட்டியல் மிக நீளமானது. 

திமுக செய்ததெல்லாம் துரோகம் தான்

மோசடியின் மொத்த உருவமாக இருந்து கொண்டு, சமூகநீதிக்காக சமரசமின்றி போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சி மீது குறை கூற சட்ட அமைச்சர் இரகுபதிக்கோ, திமுகவுக்கோ எந்தத் தகுதியும் கிடையாது. சமூகநீதி சார்ந்த விஷயங்களில் வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம் தான். அதற்கு திமுக செய்ய வேண்டிய பரிகாரம் இட ஒதுக்கீடு தான்.

அதில் இனியும் தாமதம் செய்யாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரசு உடனடியாக பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.