Armstrong Murder: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி!
BSP Armstrong Murder : கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர். அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.