Anbumani : உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைப்பு: இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? - அன்புமணி கேள்வி!
Anbumani : மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது 700 மாணவர்கள் வரை ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமித்தால் போதுமானது; அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அதிகபட்சமாக இரு ஆசிரியர்களை நியமித்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை 2-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.