MBBS கலந்தாய்வை மத்திய அரசே நடத்துவதற்கு அன்புமணி எதிர்ப்பு
இரு கலந்தாய்வுகளிலும் பங்கேற்பதால் சில குழப்பங்களும், தாமதமும் ஏற்படுவது வழக்கம் தான். அதை தவிர்க்க முடியாது. அது தான் ஜனநாயகம்.
100% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை பறிப்பு ஆகும் அதனை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் மத்திய அரசே நேரடியாக கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருக்கிறது. மாணவர்களின் நலன் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த புதிய கலந்தாய்வு முறை மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர மீதமுள்ள 85% இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இந்தக் கலந்தாய்வின் மூலமாகவே நிரப்பப்படுகின்றன. அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பிலும் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 50% இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களை தமிழக அரசே நேரடியாக நிரப்புகிறது.
இவை தவிர்த்து, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் மூலம் மத்திய அரசு நடத்துகிறது. இந்த நடைமுறைகளில் இதுவரை எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்த முறையை மாற்றி விட்டு, அனைத்து இடங்களுக்குமான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளைநிலை மருத்துவக் கல்வி வாரியம் (Under-Graduate Medical Education Board-UGMEB) மூலம் இனி நடத்தலாம் என்று மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. இதை ஏற்க இயலாது.
கடந்த மே மாதமே இப்படி ஒரு யோசனை முன்வைக்கப்பட்ட போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாடு அரசும் இதை எதிர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அதையேற்று, தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தும் உரிமையை பறிக்கக்கூடாது என்று தமிழக அரசு தேசிய மருத்துவ ஆணையத்திடம் வலியுறுத்தியது. ஆனால், அந்த எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் மூலமாகவே மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான முன்மொழிவை கடந்த 2&ஆம் நாள் மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாநில அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப் படுவதால் கால தாமதம் ஏற்படுவதாகவும், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறியுள்ள மருத்துவ ஆணையம், இதைப் போக்குவதற்காகவே அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசு மூலம் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கமளித்திருக்கிறது. இது ஏற்க முடியாத வாதம்.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பிப்பவர்களில் 80 விழுக்காட்டினர் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப் பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள இடங்களுக்கான கலந்தாய்வுகளில் தான் பங்கேற்கின்றனர். மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டும் நடத்தும் கலந்தாய்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கும் குறைவு தான். இந்த அளவிலானவர்கள் இரு கலந்தாய்வுகளிலும் பங்கேற்பதால் சில குழப்பங்களும், தாமதமும் ஏற்படுவது வழக்கம் தான். அதை தவிர்க்க முடியாது. அது தான் ஜனநாயகம்.
மாணவர் சேர்க்கைகள் மாநில அளவில் நடத்தப்படுவது தான் சிக்கல் இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு நடத்தும் மாணவர் சேர்க்கையிலும் அதே இடஓதுக்கீட்டு முறை தான் கடைபிடிக்கப்படும் என்றாலும் கூட, 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமல்ல. அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 69% செங்குத்து இட ஒதுக்கீடு மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைக்கோட்டு இட ஒதுக்கீடு என ஏராளமான இட ஒதுக்கீடுகள் உள்ளன. இவற்றை தமிழகத்தின் சமூக, கல்விச் சூழலை நன்றாக புரிந்தவர்களால் மட்டும் தான் செயல்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று சேர முயல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில அளவில் கலந்தாய்வு நடந்தால் மட்டும் தான் அத்தகையவர்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியும். ஒற்றைக் கலந்தாய்வால் இதை செய்ய முடியாது.
இவை அனைத்தையும் கடந்து ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு என ஒற்றைத் தன்மையை திணிப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால் கலந்தாய்விலும் பன்மைத்தன்மை தொடர அனுமதிக்க வேண்டும். முதலில் தேசிய அளவில் நீட் தேர்வை அறிமுகம் செய்து மாநில அரசின் அதிகாரத்தையும், உரிமைகளையும் பறித்த மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக ஒற்றைக் கலந்தாய்வு என்ற பெயரில் மாநில அரசுகளின் மீதமுள்ள அதிகாரத்தையும் பறிக்கக்கூடாது.
ஒருபுறம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் பேசிக் கொண்டு படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது. எனவே, 100% மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அனைத்து இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிவாக மட்டுமே வைத்திருப்பதால், அதை கைவிடும்படி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கடுமையாக வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.