TN BSP New President: ஆம்ஸ்ட்ராங் மரணம் எதிரொலி! பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக ஆனந்த் தேர்வு!
TN BSP New President: ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் அவருக்காக ஆஜராகி எல்லா வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்தவர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவராக ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
யார் இந்த ஆனந்த்?
2006ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங் உடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சியில் பயணித்த வழக்கறிஞர் ஆனந்த், 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர்.
ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் அவருக்காக ஆஜராகி எல்லா வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்தவர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார்.
ஏற்கெனவே 11 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவேங்கிடம் என்கவுண்டர்
இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கிடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
பல்வேறு கட்சி நிர்வாகிகள் கைது
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் அதிமுகவை சேர்ந்தவருமான மலர் கொடி மற்றும் தமாகவை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டு உள்ள திமுக வழக்கறிஞர் அருண் என்பவரின் மனைவி உடன் மறைந்த பிரபல தாதாவின் மனைவி மலர்கொடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்தனை குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இவர்களை அக்கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டு உள்ளது.
திமுக நிர்வாகியின் மகன் கைது
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இவரது தந்தையான குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவாக உள்ள அஞ்சலை
இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் பாஜகவை சேர்ந்தவரும், பிரபல ரவுடியுமான அஞ்சலை தலைமைமறைவாகி உள்ளார். அவரை அக்கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த திருமதி அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியததால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் உடனடியாக ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.