தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramzan: தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய ரம்ஜான் கொண்டாட்டம்; சிறப்புத்தொழுகை செய்த இஸ்லாமியர்கள்

Ramzan: தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய ரம்ஜான் கொண்டாட்டம்; சிறப்புத்தொழுகை செய்த இஸ்லாமியர்கள்

Marimuthu M HT Tamil
Apr 11, 2024 09:56 AM IST

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. இந்நிலையில் இன்று பிறை தென்படும் என கணித்த அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11ஆம் தேதியான இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி, ஈகைப் பெருநாளான ரம்ஜான் என்னும் ரமலான் பண்டிகை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையினை ஒட்டி, காலை முதலே இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் புதிய துணிகளை அணிந்துகொண்டு, மசூதிகளுக்கு சென்றனர். அங்கு சிறப்புத் தொழுகை செய்த அவர்கள், ஒருவரையொருவர் கட்டித்தழுவி, ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை மாறி மாறி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டினை பொறுத்தவரை, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் - பேகம்பூர், ராமநாதபுரத்தின் கடற்கரை கிராமங்கள், தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளிலும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த சிறுவர்கள், சிறுமிகள், பெரியோர்கள், தாய்மார்கள் அனைவரும் சிறப்புத் தொழுகை செய்தனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், விழுப்புரம், நாகை, புதுச்சேரியிலும் இஸ்லாமியர்கள் கூட்டாக சேர்ந்து சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

ரமலான் பண்டிகை என்றால் என்ன? எப்படி கொண்டாடப்படுகிறது?

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், ரமலான் மாதம் ஆகும். இறைதூதர் முகமது நபி, முதன்முதலாக குரானை அறிந்துகொண்ட மாதத்தை நினைவு கூரும் விதமாக, உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள், நோன்பினை நோற்கிறார்கள். நிலவின் பிறைக்காட்சியினை வைத்து ரமலான் நோன்பினை முடிக்கிறார்கள். இந்த நோன்புக்காலம் சராசரியாக, 29 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை இருக்கலாம்.

இந்த நோன்பின்போது அதிகாலையில் இருந்து சூரிய மறைவு வரை, இஸ்லாமியர்கள் உணவு, நீர் மற்றும் எச்சிலை விழுங்கக்கூட செய்யாதவகையில் கடுமையான நோன்பு இருக்கின்றனர். மேலும் இந்த காலத்தில் புகைப்பிடித்தல், பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை முழுமையாகப் படிக்க முயற்சிக்கின்றனர்.

சரியாக நோன்புக்காலம் முடிந்ததும், சிறப்புத்தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள், ரமலானின்போது அண்டை வீட்டார், நண்பர்களை சந்தித்து உணவு மற்றும் இனிப்புகளை வழங்குகின்றனர். தொண்டு நிறுவனங்களுக்குப் பணம் கொடுக்கின்றனர்.

ரமலான் திருநாள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் பண்பைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது இனிய ரம்ஜான் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதையும், கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய நாளில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், தமிழ்நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

ரமலான் பண்டிகை தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அளித்துள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘’புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்''என்றுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்