Murder : கோவில்பட்டியில் பயங்கரம்.. தொழில் போட்டியால் விபரீதம்.. மீன் வியாபாரி உட்பட 2 பேர் கொலை - மூவர் கைது!
Kovilpatti Murder : கோவில்பட்டியில் தொழில் போட்டி காரணமாக மீன் வியாபாரி உட்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தை கொண்டான் பிரதான சாலை, காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை(49). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வந்தார். இவரது நண்பரான கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜா என்ற டீலக்ஸ் ராஜா (55) வெள்ளத்துரையின் கடையில் உதவிகளை செய்து வந்தார்.
சரமாரியாக அரிவாளால் தாக்கி கொலை
வெள்ளத்துரை, அவரது நண்பரான மகாராஜா ஆகிய 2 பேரும் வியாழக்கிழமை இரவு கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 1:30 மணிக்கு கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், வெள்ளத்துரையையும், மகாராஜாவையும் சரமாரியாக அரிவாளால் தாக்கி கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வெள்ளத்துரையை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வெள்ளத்துரை உயிரிழந்தார். மகாராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
தொழில் போட்டி காரணமாக கொலை
அதில் 3 பேர், வெள்ளத்துரை மற்றும் மகாராஜாவை வெட்டிக் கொலை செய்வதும், அரிவாளுடன் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக இக்கொலைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கு குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக இனாம் மணியாச்சியை சேர்ந்த கார்த்திக் (32),கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த சேர்மக்கனி (32), மந்தித்தோப்பு ஊராட்சியைச் சேர்ந்த மாரிராஜ் (31) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெள்ளத்துரையின் மீன் கடையில் இருந்து அதே வரிசையில் 4 கடை தள்ளி இருக்கும் கார்த்திக் என்பவரின் மீன் கடை உள்ளது. அக்கடையின் உரிமையாளர் கார்த்தி, அதே கடையில் வேலை செய்து வந்த சேர்மக்கனி, மாரிராஜ் ஆகியோர் இரட்டை கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
தப்ப முயன்ற மூவர் கைது
கொலையாளி மூவரையும் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், மூவரும் பேருந்தில் மதுரைக்கு தப்பிச் செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் பிடிக்க தனிப்படை போலீசார், மதுரைக்கு விரைந்தனர். இந்த நிலையில், மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் செல்லும் பேருந்தில் இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி வெள்ளத்துரையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவில்பட்டியில் தொழில் போட்டி காரணமாக மீன் வியாபாரி உட்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.