Vinesh Phogat: வினேஷ் போகத் விவகாரத்தில் மீண்டும் பின்னடைவு! 3ஆவது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு! வெள்ளி கிடைக்குமா?
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது உடல் எடையில் 100 கிராம் வரை அதிகரித்ததன் காரணமாக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் கோரி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில் மூன்றாவது முறையாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் உறுதி செய்து உள்ளனர். வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது உடல் எடையில் 100 கிராம் வரை அதிகரித்ததன் காரணமாக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தனது தகுதிநீக்க விவாரம் தொடர்பாக ஒலிம்பிக் விசாரணை கமிட்டிக்கு மேல்முறையீடு செய்து இருந்தார். அதில் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த விவகாரத்தில் இரண்டு முறை விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம், வினேஷ் போகத் தரப்பு, சர்வதேச மல்யுத்த சங்கம், ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்த விசாரணை நடந்தது.
10ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் கேள்விகள் மற்றும் ஆவணங்களை கேட்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம்
29 வயதான வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.
பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து இருந்த நிலையில் அதிக எடை இருந்ததன் காரணமாக மல்யுத்த இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பட்டினி கிடப்பது, தண்ணீர் உள்ளிட்ட திரவ பொருட்களை தவிர்ப்பது மற்றும் இரவு முழுவதும் விழித்திருந்து வியர்வையை வெளியேற்றுவது உள்ளிட்ட தீவிரமான எடை குறைப்பு நடவடிக்கைகளில் வினேஷ் போகத் ஈடுபட்டாலும் அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.
மேல்முறையீடு செய்த போகத்
இருப்பினும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் மேல்முறையீடு செய்தார். அனுமதிக்கப்பட்ட எடையில் இருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் தனக்கு கூட்டு முறையில் வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து உள்ளார்.
இந்த சம்பவம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற கனவுடன் காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வீராங்கணை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்க பதக்கம் அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் 2 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மல்யுத்த விளையாட்டு குடும்ப பின்னணி
இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.
மல்யுத்த விளையாட்டை இவருக்கு அறிமுகப்படுத்தியது, இவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் சிங் போகத். மல்யுத்தத்த விளையாட்டானது ஆண்களுக்கான விளையாட்டு என கருதிய காலட்டத்தில் பல்வேறு எதிர்ப்பையும் மீறி வினேஷ் போகத்தை களமிறங்கிய மகாவீர் சிங் போகத் வெற்றியும் கண்டார்.
வினேஷ் ஒன்பது வயதாக இருந்தபோது தனது தந்தையின் அகால மரணத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினேஷ் மல்யுத்த விளையாட்டில் சிறந்த வழிகாட்டுதல்களுடன் வெற்றி நடை கண்டார்.