தமிழ் செய்திகள்  /  Sports  /  Isl: Chennaiyin Fc Secure Thrilling Comeback 3-2 Win Over Mohun Bagan Sg

Chennaiyin FC: இரண்டாம் பாதியில் ஹாட்ரிக் கோல்கள்! மோகன் பகான் அணியை வீழ்த்திய சென்னையின் எஃப்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 01, 2024 05:47 PM IST

முதல் பாதியில் ஒரு கோல் பின் தங்கியிருந்த சென்னையின் எஃப்சி, இரண்டாம் பாதியில் மூன்று கோல்களுடன் கம்பேக் கொடுத்து மோகன் பகான் அணிக்கு எதிராக வெற்றியும் பெற்றுள்ளது.

மோகன் பகானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி வீரர்
மோகன் பகானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி வீரர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மொத்தம் 30 ஷாட்கள் அடிக்கப்பட்டன. போட்டியில் அடித்த 5 கோல்களும், வெவ்வேறு வீரர்களால் அடிக்கப்பட்டன. இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் 20 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு முன்னேறியிருக்கும் சென்னையின் எஃப்சி, ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேறாமல் உள்ளது.

மோகன் பகான் ஆதிக்கம்

ஆட்டம் தொடங்கியதில் இருந்து முதல் பாதி வரை மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணிக்கு முதல் கோல் ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஜோனி கௌகோ அடித்தார். இதன் பின்னர் முதல் பாதி வரை வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை. முதல் பாதி முடிவதற்கு 10 நிமிடத்துக்கு முன்னர் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்தபோதிலும் அதை கோலாக மாற்றவில்லை.

சென்னையின் எஃப்சி கம்பேக்

இதைத்தொடர்ந்து இரண்டாவது பாதியில் கம்பேக் கொடுத்த சென்னையின் எஃப்சி பக்காவாக பந்துகளை பாஸ் செய்து கோல்களாக மாற்றியது. இதன் விளைவாக முதல் கோல் அடிக்கப்பட்டு அடுத்த 30 நிமிடங்கள் கழித்து ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கு கோல் கிடைத்தது. இந்த கோல் ஜோர்டன் முர்ரேவால் அடிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆட்டத்தை வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சென்னையின் எஃப்சி 80வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தது. இந்த முறை சென்னை வீரர் ரயான் எட்வார்ட்ஸ் அடித்தார். இதனால் மோகன் பகான் அணியை விட ஒரு கோல் முன்னேறியது.

கூடுதல் நிமிடத்தில் கோல் மழை

ஆட்டம் முடிவதற்கு கடைசி 10 நமிடங்கள் மட்டும் இருந்த நிலையில், சென்னை மற்றொரு கோல் அடிக்கவும், மோகன் பகான் இன்னொரு கோல் அடித்து போட்டியை சமநிலை செய்யவும் முயற்சித்தனர்.

இதன் விளைவாக போட்டியின் முழு நேரம் முடிந்த பின்னர் உதிரி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 90+4 நிமிடத்தில் மோகன் பகான் அணியை சேர்ந்த டிமிட்ரி பெட்ராடோஸ், 90+7 நிமிடத்தில் சென்னை எஃப் சி வீரர் இர்பான் யாத்வாத் ஆகியோரும் கோல்கள் அடித்தனர்.

ஏற்கனவே இரண்டாம் பாதியில் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற சென்னையின் எஃப்சி, கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வெற்றியை தன்வசமாக்கியது.

அடுத்த போட்டி

மோகன் பகான் அணி தனது அடுத்த போட்டியில் பஞ்சாப் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னர் சென்னையின் எஃப்சி, ஜம்சட்பூர் எஃப்சி அணியை ஏப்ரல் 4ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்