தமிழ் செய்திகள்  /  Sports  /  India Vs Australia: In The 2nd Test, Aussies Beat India And Are Amazing!

Ind vs Aus: 'Happy Sunday'-2வது டெஸ்டிலும் இந்தியா அசத்தல் வெற்றி!

Manigandan K T HT Tamil
Feb 19, 2023 01:50 PM IST

Border-Gavaskar test: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணியின் புஜாரா, பரத்
இந்திய அணியின் புஜாரா, பரத் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகிறது.

2வது டெஸ்ட் ஆட்டம் டெல்லியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 83.3 ஓவர்களில் 262 ரன்களில் ஆட்டமிழந்தது. 1 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று காலையிலேயே அஸ்வின், ஜடேஜாவின் சுழலில் சிக்கி அனைத்து வீரர்களும் மளமளவென சீட்டுக் கட்டு சரிவதைப் போல அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் வீரர்கள்
இந்திய அணியின் வீரர்கள் (ANI)

இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து எளிய இலக்கை எட்டிப் பிடிக்க களத்தில் குதித்து இந்திய அணி.

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் களம் புகுந்தனர். ரோகித் நிதானமாக விளையாட, மறுபக்கம் 2வது ஓவரிலேயே 1 ரன்னில் நடையைக் கட்டினார் ராகுல். 2 சிக்ஸர், 3 ஃபோர் என ரோகித்தும் வேகமாக அடித்து ஆடி 31 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டின் தூணான புஜாரா களமிறங்கி நிதானமாக ஒரு ஒரு ரன்னாக சேர்த்தார். அவ்வப்போது பவுண்டரிகளையும் அவர் விளாச தவறவில்லை.

அதேநேரம், இன்றைய ஆட்டத்தில் விளையாடி 20 ரன்களை எடுத்ததன் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ரன்களைக் கடந்த வீரர் ஆனார்.

ரன் அவுட்டான கோலி
ரன் அவுட்டான கோலி (PTI)

அவர் டி.முர்பி பந்துவீச்சை கிரீஸை விட்டு வெளியே வந்து அடிக்க முயன்றபோது ஸ்டிம்ப்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.

பின்னர் ஸ்ரேயஸ் ஐயரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். பின்னர் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ஸ்ரீகர் பரத் களமிறங்கி விளையாடினார். பரத் 23 ரன்களும், புஜாரா 27 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணி நாக்பூர் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

குறைந்தது மூன்று டெஸ்ட் ஆட்டங்களிலாவது ஜெயித்தால் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் ஆட்டம் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்