தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Sundar Pichai: 'உன்னைப் பெற்றதால் பெருமை கொள்ளுது நாடு’: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் பிறந்தநாள் பகிர்வு!

HBD Sundar Pichai: 'உன்னைப் பெற்றதால் பெருமை கொள்ளுது நாடு’: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் பிறந்தநாள் பகிர்வு!

Marimuthu M HT Tamil
Jun 10, 2024 09:50 AM IST

HBD Sundar Pichai: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரையினைப் படிக்கலாம்.

HBD Sundar Pichai: 'உன்னைப் பெற்றதால் பெருமை கொள்ளுது நாடு’: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் பிறந்தநாள் பகிர்வு!
HBD Sundar Pichai: 'உன்னைப் பெற்றதால் பெருமை கொள்ளுது நாடு’: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் பிறந்தநாள் பகிர்வு! (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு மற்றும் கல்வி:

சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரையில் ஜூன் 10ல், 1972ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை. தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், ஐஐடி வளாகத்தில் உள்ள ’வனவாணி’ பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், உலோக அறிவியல் துறையில் முதுலகலைப்பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்டன் மேலாண்மைப் பள்ளியில் எம்.பி.ஏ முடித்தார்.

கூகுளில் நுழைந்த தமிழன் சுந்தர் பிச்சை: 

ஆரம்பத்தில் வெளிநாட்டிற்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, மெக்கன்சி & கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் மேலாண்மை ஆலோசனைத் துறையில் பணியாற்றினார். இதற்கிடையில் மேலாண்மைத் துறையிலும் சாதிக்க, எண்ணி மீண்டும் கல்வியைத் தொடர்ந்தவர். 2002ஆம் ஆண்டு எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பின் சுந்தர் பிச்சை 2004ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார்.

கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய சுந்தர் பிச்சை:

கூகுள் நிறுவனத்தில் குரோம், மற்றும் குரோம் ஓ.எஸ் போன்ற கூகுளின் மென்பொருள் தயாரிப்பில் தலைமை வகித்தார், சுந்தர் பிச்சை. இதைத்தொடர்ந்து கூகுள் டிரைவின் முக்கியப் பொறுப்பில் இடம்பெற்றார். பின், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உட்பட பல புதிய தயாரிப்புகளின்போதும், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதையடுத்து 2013-ம் ஆண்டில் ஆண்ட்ராய்டை நிர்வகிக்கும் பணி, சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் தான் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ், கூகுள் நிறுவனத்தைக் கொண்டு வர, தலைமை செயல் அதிகாரியாக லாரி பேஜ் முடிவு செய்தார். இதையடுத்து ஆல்பா பெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லாரி பேஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் தான், கூகுள் நிறுவனத்தில் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுந்தர் பிச்சை தலைமைசெயல் அதிகாரியாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சமநிலையைக் கொண்டுவந்த சுந்தர் பிச்சை:

இதைத்தொடர்ந்து 2017-ல் ஆகஸ்ட் மாதம், பாலினப் பாகுபாடற்ற பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற கூகுளின் கொள்கையை எதிர்த்த, கூகுள் பணியாளரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார், சுந்தர் பிச்சை. 

இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தனர். இதையடுத்து கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சையே பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்தே உலகின் முதல் தொழில் நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு, சுந்தர் பிச்சையின் வசம் வந்தது. 

இப்படி மதுரையில் பிறந்து உலக இளைஞர்களைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த, சுந்தர் பிச்சை இன்று தனது 52ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

சுந்தர் பிச்சை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால், பலருக்கு நம்பிக்கை நாயகனாகத் திகழலாம் என்பதற்கு உதாரணம். சுந்தர் பிச்சையின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்