தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Rajya Sabha Elections 2024: Cong Wins 3 Seats, Bjp Bags 1 In Karnataka

Rajya Sabha elections 2024: ’கர்நாடகாவில் காங். வேட்பாளருக்கு வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ!’ அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்!

Kathiravan V HT Tamil
Feb 27, 2024 08:11 PM IST

”எஸ்.டி.சோமசேகர் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றி வாக்களித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ன செய்ய முடியும், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம் என பாஜக கூறி உள்ளது”

கர்நாடகாவில் நடைபெற்ற ராஜ்ஜியசபா தேர்தலில் வாக்களிக்கும் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
கர்நாடகாவில் நடைபெற்ற ராஜ்ஜியசபா தேர்தலில் வாக்களிக்கும் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் (DK Shivakumar-X)

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அஜய் மாக்கன், டாக்டர் சையத் நசீர் ஹுசைன், ஜி.சி.சந்திரசேகர் ஆகியோர் முறையே 47, 46 மற்றும் 46 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். பாஜக வேட்பாளர் நாராயண பண்டகே மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

குறிப்பாக “காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர், அவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தது. இங்கே, அவர்கள் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இயக்கங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர், எங்கள் எம்.எல்.ஏ.க்களை அவர்களின் தந்திரோபாயங்களுக்கு இரையாக அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவரான நசீர் ஹுசைன் தனது வெற்றி குறித்து கூறினார். 

இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குபேந்திர ரெட்டி உள்பட 5 பேர் போட்டியிட்டனர். இதில் திடீர் திருப்பமாக பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான எஸ்.டி.சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கனுக்கு வாக்களித்தது பெரும் சர்சையையும், பாஜக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வெற்றி குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "இது காங்கிரஸின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வாக்காளர்களுக்கும், முதல்வர், கட்சி தொண்டர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். 

காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில்,  இது இந்தியாவுக்கு ஒரு தீர்க்கமான வெற்றி. சட்டமன்ற உறுப்பினர்களை விற்பதன் மூலமும் வாங்குவதன் மூலமும் ஜனநாயக வழிமுறையை ஊழல் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு தீர்க்கமான தோல்வியாகும். இது கொள்கைகள், இலட்சியங்கள், ஒழுக்கம் மற்றும் எண்களின் வெற்றி என கூறி உள்ளார்.

முன்னதாக "எனது தொகுதியில் தண்ணீர் மற்றும் பிற நிர்வாகங்களுக்கு நிதி வழங்குவதாக எனக்கு உறுதியளிப்பவர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பேன்" என்று பாஜக எம்.எல்.ஏ சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு முன்பு கூறியிருந்தார். பாஜக தனது எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. 

எஸ்.டி.சோமசேகர் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றி வாக்களித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ன செய்ய முடியும், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்" என்று பாஜக தலைமை கொறடா தொட்டனகவுடா ஜி.பாட்டீல் கூறி உள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்