Prajwal Revanna: ‘பிரஜ்வல் ரேவண்ணா நாளை ஜெர்மனியிலிருந்து பெங்களூரு வர விமான டிக்கெட் முன்பதிவு’
Prajwal Revanna: ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு வர பிரஜ்வல் ரேவண்ணா விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.யும், தப்பியோடியவருமான பிரஜ்வல் ரேவண்ணா வியாழக்கிழமை பெங்களூருக்கு திரும்ப உள்ளார் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூருக்கு ஒரு விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அவர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை அடைய வாய்ப்புள்ளது என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி., பெங்களூருவில் மே 31-ம் தேதி நடைபெறும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் கலந்து கொள்ளப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா பெங்களூரில் தரையிறங்கியவுடன் மாநில காவல்துறையினர் அவரை கைது செய்வார்கள் என்றும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பு ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
'எனக்கு எதிராக சதி'
குற்றம் சாட்டப்பட்டவர் வெளியிட்ட வீடியோவில், தனது வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிந்ததாகவும் அவர் கூறினார். பிரஜ்வல் ரேவண்ணா கூறுகையில், "ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராக வதந்திகளை பரப்பிய பிறகு, நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன், நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது வாழ்க்கையை முடிக்க ஒரு அரசியல் சதி நடக்கிறது, அதை நான் எதிர்கொள்வேன்" என்று பிரஜ்வால் மேலும் கூறினார்.
நடந்து வரும் மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் வாக்களிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ரேவண்ணா பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆபாச வீடியோக்கள் ஏப்ரல் மாதம் வெளிவந்தன. அவர் தனது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அதே மாதம் ஜேர்மனிக்கு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவரது கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்ட ரேவண்ணாவுக்கு எதிராக முதல் எஃப்.ஐ.ஆர் ஏப்ரல் 28 அன்று பதிவு செய்யப்பட்டது, பாதிக்கப்பட்ட ஒருவர் முன்வந்ததை அடுத்து, அதன் பின்னர் அவர் மீது மேலும் மூன்று பாலியல் பலாத்கார எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் கர்நாடக அரசியலில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
தாய், தந்தை, தாத்தாவிடம் மன்னிப்புக் கோரினார்
அந்த வீடியோவில் “ முதலில் தாய், தந்தை, தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் இருக்கும் இடத்தை தெளிவுபடுத்தவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். லோக்சபா தேர்தல் முடிந்ததும், பல்வேறு காரணங்களுக்காக என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எஸ்ஐடி அமைக்கப்பட்டது. எனது வெளிநாட்டுப் பயணத்திற்கும் இந்த வழக்குகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம். எஸ்ஐடி எனக்கு நோட்டீஸ் கொடுத்து அதற்கு என் வழக்கறிஞர் மூலம் பதில் அளித்ததை மட்டுமே நான் அறிந்தேன்" என்றார்.
டாபிக்ஸ்