Prajwal Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! மன்னிப்பு கேட்டார் பிரஜ்வல் ரேவண்ணா!’ மே 31இல் விசாரணைக்கு ஆஜர் ஆவதாக உறுதி!
Prajwal Revanna: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருமான 33 வயதான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை கிளப்பியது.
பாலியல் வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பிய பாலியல் வீடியோக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் கர்நாடக அரசியலில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்ட வீடியோ
அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, நாட்டை விட்டு வெளியேறி சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, வரும் மே 31 ஆம் தேதி தனக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகப் போவதாகக் கூறி உள்ளார்.
தாய், தந்தை, தாத்தாவிடம் மன்னிப்புக் கோரினார்
அந்த வீடியோவில் “ முதலில் தாய், தந்தை, தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் இருக்கும் இடத்தை தெளிவுபடுத்தவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். லோக்சபா தேர்தல் முடிந்ததும், பல்வேறு காரணங்களுக்காக என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எஸ்ஐடி அமைக்கப்பட்டது. எனது வெளிநாட்டுப் பயணத்திற்கும் இந்த வழக்குகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம். எஸ்ஐடி எனக்கு நோட்டீஸ் கொடுத்து அதற்கு என் வழக்கறிஞர் மூலம் பதில் அளித்ததை மட்டுமே நான் அறிந்தேன்.
எனக்கு எதிராக வதந்தி பரப்பப்பட்டது
“ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராக வதந்திகளைப் பரப்பிய பிறகு, நான் மன உளைச்சலுக்கு ஆளானேன், நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது வாழ்க்கையை முடிக்க அரசியல் சதி நடக்கிறது, அதை நான் எதிர்கொள்வேன்” என்று பிரஜ்வல் ரேவண்ணா கூறினார்.
என் மீது நம்பிக்கை வையுங்கள்
கடவுளின், மக்களின், குடும்பத்தினரின் ஆசீர்வாதம் என் மீது இருக்கட்டும். மே 31 வெள்ளிக்கிழமை கண்டிப்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன் ஆஜராவேன். வந்த பிறகு இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்" என்றும் அந்த வீடியோவில் ரேவண்ணா கூறி உள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவின் பின்னணி
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருமான 33 வயதான பிரஜ்வால், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை கிளப்பியது.
ஹாசன் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கு மறுநாள் ஏப்ரல் 27 அன்று பிரஜ்வால் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், இன்னும் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிபிஐ மூலம் சிறப்பு புலனாய்வுக் குழு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தகவல் கேட்டு இன்டர்போல் ஏற்கனவே 'ப்ளூ கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் மே 18 அன்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.