PM Modi: மன் கி பாத்தின் 111வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் மோடி: கேரள கார்தும்பி குடை, அரக்கு காபி குறித்து புகழாரம்
PM Modi: மன் கி பாத்தின் 111ஆவது எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் நிகழ்ச்சியில் பேசிய அவர் கேரளாவின் கார்தும்பி குடை, அரக்கு காபி குறித்து புகழாரம் சூட்டினார்.
PM Modi: 2024 மக்களவைத் தேர்தல் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார். இந்நிலையில் அவர் வெகுநாட்களாகத் தொடர்ந்து வந்த ‘மன் கி பாத்’ எனப்படும் ’மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் 111ஆவது எபிசோடில் இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.
'மன் கி பாத்' டாப் 10 அப்டேட்ஸ்:
1. பிரதமர் மோடியின், "மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி சில மாதங்கள் இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக வெகுநாட்களுக்குப் பின் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ‘’மனதின் குரல்.. நாட்டுக்காக, சமுதாயத்திற்காக செய்த பணி. தன்னலமற்ற உணர்வுடன் செய்த பணி.. சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய பணிகள் தடையின்றி தொடர்ந்தன.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக அமைப்பு மீதும் தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை மீண்டும் வலியுறுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நான் இன்று நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2024 மக்களவைத் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாக இருந்தது. 65 கோடி மக்கள் வாக்களித்த உலகின் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய தேர்தல் இதுவரை நடந்ததில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் செயல்முறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன''எனப் பிரதமர் மோடி கூறினார்.
‘ஹூல் திவாஸ்’ பற்றி பிரதமர் மோடி:
2. பிரதமர் நரேந்திர மோடி, "இன்று ஜூன் 30 மிகவும் முக்கியமான நாள். நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் இந்த நாளை ஹூல் திவாஸ் என்று கொண்டாடுகிறார்கள். அந்நிய ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை கடுமையாக எதிர்த்த வீர சித்து மற்றும் கன்ஹு ஆகியோரின் தைரியத்துடன் இந்த நாள் தொடர்புடையது.
3. "வீர் சித்து மற்றும் கன்ஹு ஆயிரக்கணக்கான சந்தாலி தோழர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களை தங்கள் முழு பலத்துடனும் எதிர்த்துப் போராடினர். இது எப்போது நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?. இது 1855இல் நடந்தது. அதாவது 1857இல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஜார்க்கண்டின் சந்தால் பரகானாவில் நமது பழங்குடி சகோதர சகோதரிகள் வெளிநாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியபோது இது நடந்தது’’ எனப் பேசினார்.
பாரிஸ் ஒலிம்பிக்:
4: பிரதமர் மோடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பேசியதாவது, "அடுத்த மாதம் இந்நேரத்திற்குள், பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கும். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த நீங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டோக்கியோவில் எங்கள் வீரர்களின் செயல்திறன் ஒவ்வொரு இந்தியரின் இதயங்களையும் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து, எங்கள் விளையாட்டு வீரர்கள் தங்கள் முழு இதயத்துடனும் ஆன்மாவுடனும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராகி வருகின்றனர்’’ என்றார்.
5. பிரதமர் மோடி, "அனைத்து வீரர்களையும் ஒன்றிணைத்தால், அவர்கள் சுமார் 900 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக சில விஷயங்களை நீங்கள் பார்க்கலாம். துப்பாக்கி சுடுதலில் நமது வீரர்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்திய துப்பாக்கி சுடும் அணியில் எங்களது இந்திய மகள்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த முறை, எங்கள் அணியின் வீரர்கள் மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றம் ஆகியப் பிரிவுகளில் போட்டியிடுவார்கள். இதில் அவர்கள் இதற்கு முன்பு பங்கேற்கவில்லை’’ என்றார்.
இந்தி மொழியில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப குவைத் அரசு முடிவு:
6. குவைத் அரசு தனது தேசிய வானொலியில் இந்தியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ’’குவைத் வானொலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இதில் இந்திய கலாசாரத்தின் பல்வேறு கலாசார நுகர்வுகள் பற்றி பேசப்படுகின்றன. கலை உலகம் குறித்த நமது திரைப்படங்களும், விவாதங்களும் அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. குவைத்தின் உள்ளூர் மக்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த அற்புதமான முயற்சியை எடுத்த குவைத் அரசுக்கும் மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
7.துர்க்மெனிஸ்தான்ன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அதில், "இந்த நிகழ்ச்சியில், உலகின் புகழ்பெற்ற 24 கவிஞர்களின் சிலைகளை துர்க்மெனிஸ்தான் அதிபர் திறந்து வைத்தார். இந்த சிலைகளில் ஒன்று குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் சிலை. இது குருதேவுக்கு கிடைத்த கவுரவம், இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம். ஜூன் மாதத்தில் இரண்டு கரீபியன் நாடுகளான சுரினாம், செயிண்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் ஆகியவை தங்களது இந்திய பாரம்பரியத்தை முழு உற்சாகத்துடன் கொண்டாடின. சூரினாமில் உள்ள இந்திய சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதியை இந்திய வருகை தினம் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். இந்தியுடன், போஜ்புரி மொழியும் அவ்விடம் பரவலாக பேசப்படுகிறது’’ என்றார்.
சர்வதேச யோகா தினம் குறித்து பிரதமர் மோடி:
8. சர்வதேச யோகா தினம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘’இந்த மாதம், உலகம் முழுவதும் 10ஆவது யோகா தினத்தை முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்றேன். காஷ்மீரில், இளைஞர்களுடன், சகோதரிகள் மற்றும் மகள்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.
கேரள கார்தும்பி குடை பற்றி பேசிய பிரதமர் மோடி:
9. பிரதமர் நரேந்திர மோடி, "இன்று மனதின் குரலில், ஒரு சிறப்பு வகையான குடை பற்றி நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இந்த குடைகள் நமது கேரளாவில் தயாரிக்கப்பட்டவை. கேரள கலாசாரத்தில் குடைகளுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அங்குள்ள பல மரபுகள் மற்றும் சடங்குகளில் குடைகள் ஒரு முக்கியப் பகுதியாகும். ஆனால், நான் பேசும் குடை கேரளாவின் அட்டப்பாடியில் தயாரிக்கப்பட்ட 'கார்தும்பி குடைகள்'. இந்த குடைகளை கேரளாவின் நமது பழங்குடி சகோதரிகள் செய்கிறார்கள். இன்று, நாடு முழுவதும் இந்த குடைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 'வட்டாக்கி கூட்டுறவு விவசாயச் சங்கம்' மேற்பார்வையில் இந்த குடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சமூகம் நமது பெண் சக்தியால் வழிநடத்தப்படுகிறது’’ என்றார்.
அரக்கு காபி குறித்து பேசிய பிரதமர் மோடி:
10. இந்தியாவில் பல தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பெரும் தேவை உள்ளது என்றும், இந்தியாவில் எந்தவொரு உள்ளூர் தயாரிப்பும் உலகளவில் செல்வதைப் பார்க்கும்போது, பெருமைப்படுவது இயற்கையானது என்றும் பிரதமர் மோடி கூறினார். "அப்படி ஒரு பொருள் தான் அரக்கு காபி. ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் அரக்கு பள்ளத்தாக்கில், அரக்கு காபி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதன் சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. ஒருமுறை விசாகப்பட்டினத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன், இந்த காபியை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு நினைவிருக்கிறது. அரக்கு காபி பல உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் இந்த காபி பிரபலமாக இருந்தது’’ என்றார்.
டாபிக்ஸ்