NEET-UG Row: 'நீட் முறைகேடு’: இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை ஜூலை 1 வரை ஒத்திவைப்பு
NEET-UG Row: நீட் தேர்வு தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

NEET-UG Row: நீட்-யுஜி தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ) 'தோல்வி' குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின் சிறிதுநேரம் கழித்து கூடிய மக்களவையில் மீண்டும் இந்தியா கூட்டணி எம்.பிக்களின் அமளி நீடித்ததால், மக்களவை ஜூலை 1ஆம் தேதியான திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியா கூட்டணியும் நீட் முறைகேடு தொடர்பான விவாதமும்:
இந்த விவகாரங்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஒத்திவைப்பு தீர்மானங்களை முன்மொழிந்தனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் ஜூன் 27அன்று நடைபெற்ற இந்தியா கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானங்களை நகர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஞ்சித் ரஞ்சன் மற்றும் கவுரவ் கோகாய் ஆகியோர் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.