HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 2009!’ அத்வானியை பதம் பார்த்த மன்மோகன்! மீண்டும் காங்கிரஸ் ஆட்சி!
“Lok sabha Election 2009: தமிழ்நாட்டை பொறுத்தவரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுபோர் முக்கிய பிரச்னையாக வெடித்தது. இலங்கை உள்நாட்டு போரை நிறுத்த வலியுறுத்தி திமுக தலைவரும், அன்றைய முதலமைச்சருமான கருணாநிதி நடத்திய உண்ணாவிரதம் பெரும் பேசு பொருள் ஆனது”

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இந்திய குடியரசு
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி
2004 தேர்தலில் பாஜகவை விட வெறும் 7 இடங்களை மட்டுமே கூடுதலாக வென்ற காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 138 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட சோனியா காந்தி, பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார்.