தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Former Karnataka Cm Bs Yediyurappa Booked Under Pocso, Faces Allegation Of Sexual Assault

BS Yediyurappa: மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! போக்சோ வழக்கு - அரசியல் சதி இல்லை என எடியூரப்பா கருத்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 09:20 AM IST

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

ட்ரெண்டிங் செய்திகள்

பாலியல் தொல்லை புகார்

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு தனது தாயாருடன் பாதிக்கப்பட்ட பெண் எடியூரப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னை தனி அறைக்கு இழுத்து சென்று பாலியல் தொல்லை அளித்தார்.

இதைத்தொடர்ந்து அறையை விட்டு வெளியே வந்த பெண், நடந்தததை தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல்

பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியதாகவும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என எடியூரப்பா மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.

அரசியில் சதி இல்லை

தன்மீதான புகார் குறித்து எடியூரப்பா கூறியதாவது: "என் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது அறிந்தேன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் அவர்கள் அடிக்கடி வந்ததை கவனித்தேன். நான் அவர்களை பெரிதாக பொருப்படுத்தவில்லை. பின் ஒரு நாள் அழுதுகொண்டிருப்பதை கவனித்து, விசாரிக்க சொன்னேன். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை என்னிடம் கூறினார்கள். இதை கேட்ட பின்னர் போலீஸ் கமிஷனரை தயாநந்தாவை அழைத்து அவர்கள் சொல்வதை கேட்டு, தேவையானதை செய்து கொடுக்குமாறு தெரிவித்தேன்.

ஆனால் அவர்கள் அப்போதே என்னை எதிர்த்து பேசினார். இதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் என நினைத்து போலீஸ் கமிஷனரை விசாரிக்க சொன்னேன். இதை திரித்து தற்போது என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்படி இதை எதிர்கொள்வேன். ஒருவருக்கு உதவி செய்தால் இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தேன்.

இதை அரசியல் சதியாக நினைக்கவில்லை. ஒரு பெண் புகார் அளித்துள்ளார். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்"

இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடாகவின் மூத்த அரசியல் தலைவர்

கர்நாடகா மாநில அரசியலில் மூத்த தலைவராக இருந்து வரும் எடியூரப்பா தற்போது பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். 2008 முதல் 2011, 2018 மற்றும் 2019 முதல் 2021 வரை என மூன்று முறை கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவி வகித்துள்ளார்.

2021ஆம் ஆண்டில் அரசியல் அழுத்தம் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார். இதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பொறுப்பெற்றார்.

இதன்பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், ஆட்சியை இழந்தது. 

நாடாளுமன்ற தேர்தலில் தாக்கம்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எடியூரப்பா மீதான இந்த பாலியல் தொல்லை வழக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிகிறது.  

கர்நாடகா மாநில பாஜகவின் தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இருந்து வருகிறார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்