தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Chief Minister: சித்தராமையாதான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர்-அதிகாரப்பூர்வ அறிவிப்பு

karnataka chief minister: சித்தராமையாதான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர்-அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
May 18, 2023 12:34 PM IST

கடும் இழுபறிக்கு பின் கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல்வராகிறார் சித்தராமையா துணைமுதல்வர் டி.கே சிவக்குமார் (ANI Photo)
முதல்வராகிறார் சித்தராமையா துணைமுதல்வர் டி.கே சிவக்குமார் (ANI Photo) (Mallikarjun Kharge twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக காங்கிரஸ் கட்சி உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது.

அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் ராகுல் காந்தியையும் அடுத்தடுத்து சந்தித்தனர். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர்.

இதற்கிடையில் நேற்று சித்தராமையாதான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது. ஆனால் இதை நேற்று அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மறுத்திருந்தார்.

முதல்வர் யார் என்பது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்றும், 72 மணி நேரத்தில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்று கூறினார், மேலும், சித்தராமையா மீண்டும் முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்திருந்தார்.

"தற்போது கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆலோசித்து வருகிறார். காங்கிரஸ் முடிவெடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். அடுத்த 48-72 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும்" என்று கூறிய ரந்தீப் சுர்ஜேவாலா, கர்நாடக முதல்வர் தேர்வு குறித்த ஊகங்கள் அல்லது போலியான தகவல்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று கடும் இழுபறிக்கு பின் சித்தராமைய்யா தான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. பெங்களூரில் இன்று இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது. பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்