தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Body Of Fisherman: பாகிஸ்தானில் இறந்த இந்திய மீனவரின் உடல்.. ஒரு மாதத்துக்குப் பின் தாயகம் கொண்டுவரப்படுவதாக தகவல்!

Body Of Fisherman: பாகிஸ்தானில் இறந்த இந்திய மீனவரின் உடல்.. ஒரு மாதத்துக்குப் பின் தாயகம் கொண்டுவரப்படுவதாக தகவல்!

Marimuthu M HT Tamil
Apr 27, 2024 10:18 AM IST

Body Of Fisherman: பாகிஸ்தான் சிறையில் இறந்தவர், மகாராஷ்டிர மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தின் தஹானு தாலுகாவில் உள்ள கோரட்பாடா குக்கிராமத்தில் வசித்த வினோத் லக்ஷ்மண் கோல் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோரட்பாடாவில் வினோத் கோலின் குடும்பம்
கோரட்பாடாவில் வினோத் கோலின் குடும்பம்

ட்ரெண்டிங் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலத்தின், பால்கர் மாவட்டத்தின் தஹானு தாலுகாவில் உள்ள கோரத்பாடா குக்கிராமத்தில் வசிப்பவர், வினோத் லக்ஷ்மண் கோல் (45). குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகில் பணிபுரிந்த அவர், 2022ஆம் ஆண்டு, அக்டோபரில் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக பாகிஸ்தான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வினோத் கோல், மார்ச் 8ஆம் தேதி, குளிக்கும் போது மயங்கி விழுந்து பாகிஸ்தான் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் மார்ச் 17ஆம் தேதி, பாகிஸ்தானில் உள்ள சிறையில் அவர் உயிரிழந்தார்.

மார்ச் 17அன்று மற்ற இந்தியக் கைதிகளுக்கு அவரது மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த சிறைவாசிகள், கோரட்பாடாவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறை ஊழியர்களின் அதிகாரப்பூர்வமற்ற உதவியுடன்,வினோத் கோலின் மரணச் செய்தியைத் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் இறந்த மீனவர் வினோத் கோலின் உடல் தங்களுக்கு அனுப்பப்படாது என்று அஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் எம்.எல்.ஏ.வை உதவிக்கு அணுகினர். அவர் இந்த விஷயத்தை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் சகாக்களுடன் பேசிய அவர்கள், மீனவர் வினோத் கோலின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர்.

அவரது உடல் ஏப்ரல் 29ஆம் தேதி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாகிஸ்தானில் கைதிகளுக்காக பணிபுரியும் சமூக அமைப்பின் பிரதிநிதி ஜதின் தேசாய் தெரிவித்துள்ளார்.

ஒரு இந்திய கைதியின் மரணம் குறித்து இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது பெயர் வினோத் லக்ஷ்மன் என்று குறிப்பிட்டதாகவும் தேசாய் கூறினார். ஆரம்பத்தில், அவர் குஜராத்தில் வசிப்பவர் என்று கருதி அரசு அதிகாரிகள் அவரது குடும்பத்தினரைத் தேட முயன்றனர்.

இந்த முயற்சிகள் தோல்வியுற்றபின், அவர் ஒரு மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனவும், மகாராஷ்டிராவை சேர்ந்த கைதிகளின் பட்டியலில் அவரது பெயர் இருப்பதையும் அறிந்தனர். 

அவரது உடல் அமிர்தசரஸில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசாய் கூறினார். அங்கிருந்து அது மகாராஷ்டிராவின் தஹானுவுக்கு கொண்டு வரப்படும்.

வினோத் கோலுக்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மகள்களில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. ஆதார் அட்டையில் இறந்த வினோத்தின் வயது 57 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது உறவினர்கள் அது தவறு என்றும்; அவருக்கு 45 வயதுதான் ஆகிறது என்றும் கூறுகின்றனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 300 மீனவர்களில், 35 கைதிகள் விடுவிக்கப்பட்டு ஏப்ரல் 30அன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

35 பேரில் ஐந்து பேர் பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானுவைச் சேர்ந்தவர்கள். மே முதல் வாரத்தில் மீனவர்கள் தங்கள் வீடுகளை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மீனவர் ஒருவர் பாகிஸ்தான் சிறையில் மார்ச் 17ஆம் தேதி இறந்து, அவரது உடல் ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 29ஆம் தேதி வருகிறது என்பதே இருநாடுகளுக்கும் இடையில் இருக்கும் தூதரகப்பணிகளின் யதார்த்தம் ஆகும்.  

IPL_Entry_Point

டாபிக்ஸ்