தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bbc India: Bbc On Tax Evasion - Shocking Income Tax Information Here!

BBC India: வரி ஏய்ப்பில் பிபிசி - அதிர வைக்கும் வருமான வரி துறை தகவல் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 18, 2023 01:12 PM IST

பிபிசி ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரி செலுத்தவில்லை. பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் தில்லி மும்பையில் உள்ள அலுவலகங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடந்தது. ஊழியர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டனர். வருமான வரித்துறை கடந்த 2012ம் ஆண்டு முதல் பிபிசியின் கணக்கு வழக்கு ஆவணங்களை சரிபார்த்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி ஆய்வு 3 நாட்களுக்கு பின் 16ம் தேதி இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.

இதுதொடர்பாக மத்திய வருமான வரித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"வருமான வரி சட்டம் 1961 பிரிவு 133ஏ விதிகளை மீறியிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, டெல்லி, மும்பையில் உள்ள சர்வதேச செய்தி நிறுவன (பிபிசி) அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த நிறுவனம் ஆங்கிலம், இந்தி மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஆங்கிலம் தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளின் செய்தி சேவையில் பிபிசி ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரி செலுத்தவில்லை. பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வெளிநாடுகளை சேர்ந்த தற்காலிக ஊழியர்களுக்கு பிபிசி நிறுவனம் ஊதியம் வழங்கியிருக்கிறது. சட்டவிதிகளின்படி இந்த ஊதியத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால்,பிபிசி முறையாக வரி செலுத்தவில்லை. வரிஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிபிசி ஊழியர்கள் அளித்த வாக்குமூலம் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட உள்ளன.

வருமான வரித் துறை ஆய்வின்போது பிபிசி நிறுவனம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனினும், அதன் செய்தி சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு நடத்தப்பட்டது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியா: மோடிக்கான கேள்வி என்ற ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்ட நிலையில் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து மத்திய அரசு ஆவணப்படத்தை வெளியிட் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த பிப்.14 ம் தேதி திடீரென பிபிசி நிறுவனத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலில் வருமான வரித்துறை சோதனை என்று தகவல் பரவிய நிலையில் பிபிசியில் நடந்தது வருவாய் வரித்துறை ஆய்வு என்று தெரிவிக்கப்பட்டது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்