‘வாசிப்புத்தான் சுவாசிப்பு’ என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த என்ன செய்யவேண்டும்? இதோ வழிகாட்டி!
‘வாசிப்புத்தான் சுவாசிப்பு’ என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த என்ன செய்யவேண்டும் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
குழந்தையிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அது எப்படி என்று பாருங்கள். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், அவர்களின் கற்பனை திறன், உருவாக்கும் திறன் மற்றும் அறிவை வளர்க்க உதவும். வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது சிறப்பான ஒன்று. குழந்தைகளுக்கு இந்த டிஜிட்டல் உலகத்திலும் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுப்பது மிகவும் தேவையான ஒன்று. வீடியோ கேம்களும், ஐபேட்களும் அவர்களின் கவனத்தை நாள் முழுவதும் ஈர்க்கக்கூடியவைதான், என்றாலும் புத்தகங்கள் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் நீங்கள் அவர்களின் ஆர்வத்தை தூண்டவேண்டும். ஆனால் அது மிகவும் சிரமமான ஒன்றுதான். ஆனாலும் அதற்கு சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கடைபிடித்தால் அவர்கள் நன்றாக படிப்பதற்கும், கற்பதற்கும், அவர்களின் கற்பனை மற்றும் உருவாக்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் உதவும்.
குழந்தைகளுடன் பெற்றோரும் ஒன்றாக சேர்ந்து வாசிக்கவேண்டும்
உங்கள் குழந்தைகளை அதிக புத்தகங்கள் படிக்க வைப்பதற்கு, குடும்பமாக சேர்ந்து வாசிப்பது நல்லது. பொதுவாகவே குழந்தைகள் பெரியவர்களும், மற்றவர்களும் செய்வதை தாங்களுமே செய்ய முயல்வார்கள். எனவே அவர்கள் முன் நீங்கள் படித்தால் அவர்களும் உங்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
அப்படியே அவர்களின் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தூண்டப்படும். எனவே குடும்பமாக சேர்ந்து அமர்ந்து வாசிக்கும் நேரம் என்ற ஒன்றை வீட்டில் ஒதுக்குங்கள். அவர்களும் சேர்ந்து படிக்க விரும்புவார்கள். அது காலையிலே உணவு முடித்தபின்னர் அல்லது தூங்கச் செல்வதற்கு முன்னர் அல்லது சோம்பலான மதிய வேளையில் என பல்வேறு நேரங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
வீட்டில் ஒரு அறையில் அல்லது ஒரு இடத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளின் அடிப்படையில் புத்தகங்களை அடுக்கி வைக்கலாம். அந்த இடத்தில் அமர்ந்து படிக்க அமரும் வசதி மற்றும் நல்ல வெளிச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தி வைக்கலாம்.
பேசிக்கொண்டே கதை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்
குழந்தைகளின் கற்பனை வளத்தை வளர்தெடுக்கும் வகையிலும், ஆர்வத்தை தூண்டும் வகையிலும், நீங்கள் கதைகளை சொல்லிக்கொண்டே அவர்களிடம் பேசிக்கொண்டே வாசிக்க வைக்கலாம். புத்தகத்தை சத்தமாக படிப்பதோடு மட்டுமின்றி, அவர்களிடம் புத்தகத்தில் கேள்விகளை கேட்கலாம் அல்லது அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் அவர்களை சொல்ல வைக்க முயற்சிக்கலாம்.
இப்படி அவர்களிடம் பேசிக்கொண்டே வாசிப்பில் ஈடுபடும்போது, வாசிப்பும், பேச்சும் என அவர்களின் சிந்தனை திறனை தூண்டுவதாகவும் இருக்கும்.
உண்மையுடன் கதைகளை தொடர்புபடுத்தி பேசவேண்டும்
இது எப்போதாவதுதான நடக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன், ஒரு மியூசியம் அல்லது மிருககாட்சி சாலைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால், அது தொடர்பான புத்தகங்களை தேர்ந்தெடுங்கள். மிகவும் சிறிய குழந்தைகள் என்றால் அவர்களுக்கு படத்துடன் கூடிய புத்தகத்தை தேர்ந்தெடுங்கள்.
அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செல்ல இருக்கும் இடம் குறித்து படிப்பது அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும். அந்த பயணத்தை மேலும் அழகானதாக்கும். அந்த இடம் குறித்து உங்கள் குழந்தையின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளை பகிர்ந்துகொள்ளச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
புத்தகத்தை படித்த பின்னரும், அந்த இடத்திற்கு சென்று வந்தபின்னரும் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும்படி செய்யுங்கள். அது அவர்களின் கற்பனை திறன் அதிகரிக்க உதவும்.
அவர்களுக்கு பிடித்த தலைப்புகளை வைத்து புத்தங்களை படிக்க பழக்கவேண்டும்
உங்கள் குழந்தைகளுக்கு யானைகள், டைனோசர்கள் பிடிக்கும் என்றால் அது தொடர்பான புத்தகங்களை நிறைய வாங்கிக்கொடுங்கள். அவர்கள் படித்து மகிழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அந்த புத்தகங்கள் எளிதாக பிடித்துவிடும். உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த புத்தகங்களை அவர்கள் வாசிக்க வேண்டியது அவசியம்.
உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள நூலகம் மற்றும் புத்தக கடைகளுக்கு அழைத்துச்செல்வது கட்டாயம். நூலகத்தில் அவர்கள் அவ்வப்போது புத்தகங்களை எடுக்க வைப்பதும் கட்டாயம். அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை அவர்களே பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் வாசிக்கும் பழக்கத்தை நேசிக்கவே துவங்கிவிடுகிறார்கள்.
இ-புத்தகங்களை பயன்படுத்துவதும் நல்லது
உங்கள் குழந்தையை ஐபேட்டில் கோக்கோமெலன், பெப்பா பிக் பார்க்கும் குழந்தைகளாக மட்டுமே வைக்காதீர்கள். அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அவர்கள் புத்தகங்கள் வாசிக்கவும், படிக்கவும் பழக்குங்கள். நிறைய இ புத்தகங்கள் உள்ளன. அவற்றில் அனிமேஷன் படங்களும் உள்ளன.
எனவே குழந்தைகள் படிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கும். அதில் சத்தங்களும் கேட்கும், விளையாட்டுகளும் இருக்கும். இவையெல்லாம் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை மேலும் தூண்டுவதாக இருக்கும். எனவே டிஜிட்டல் மற்றும் புத்தகங்களுக்கு இடையே சமமாக கொண்டு செல்லுங்கள். வாசிக்கும் பழக்கத்தை திரை நேரம் ஆக்கிரமித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்
அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருங்கள், முன்னுதாரணமாகவும் இருங்கள், அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்குங்கள். நாவல் அல்லது செய்தித்தாள் அல்லது உணவு புத்தகம் எதுவாகினும் அவர்களிடம் உட்கார்ந்து அவர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆர்வத்தை தூண்டி, வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுப்பது முக்கியம்.
நீங்கள் படிப்பது குறித்து அவர்களுடன் உரையாடலாம். அவர்களிடம் சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடன் சேர்ந்து அவர்களும் புத்தகங்களை தேர்ந்தெடுக்கட்டும். குழந்தைகள், பெரியவர்களின் பழக்கங்களையும் அப்படியே கடைபிடிக்க முயல்வார்கள். எனவே நீங்களும் வாசிக்க துவங்கினால் அவர்கள் தாங்களாகவே வாசிக்கும் பழக்கத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்