மனித உடல் கடிகார நேரத்தின் மதிப்பு என்ன? சுவாரஸ்யமான தகவல்கள் – மருத்துவர் விளக்கம்!
மனித உடல் கடிகார நேரத்தின் மதிப்பு என்ன தெரியுமா? உடலின் சிர்கார்டியன் ரிதத்தை தெரிந்துகொள்ளுங்கள். சில சுவாரஸ்யமான தகவல்களுடன் மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் புவியின் சுழற்சிக்கேற்ப தன்னுடைய உடலை, உடல் இயக்கத்தை அமைத்துக் கொள்கின்றன. இதற்காக பிரத்யேக உயிரியல் கடிகாரம் உள்ளது என்பது 18ம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
சில அறிய தகவல்கள்
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிப்பது.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரசத்து உள்ளதாக மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர் ஆகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் சுமார் 30 கோடி மீட்டர் பயணம் செய்வதாக கூறப்படுகிறது.
நுரையீரல் நாளொன்றுக்கு சுமார் 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிசெலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் சுமார் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை சுமார் மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள இயற்கை மின்சாரத்தின் அளவு சுமார் 25 வாட் என்கிறது ஆய்வு.
ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு சுமார் 5 லிட்டர்.
ஓய்வின்றி சுழலும் கடிகாரம்
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்துகொண்டு நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது. நாம் பரபரப்பாக வேலையில் மூழ்கியிருக்கும்போது, திடீரென்று பசிக்க தொடங்கும். கடிகாரத்தில் நேரத்தை பார்த்தால் அது வழக்கமாக தினமும் நாம் சாப்பிடும் நேரமாக இருக்கும்
சரியாக ஒரு மணி ஆனதும் வயிற்றில் மணி அடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதை உற்று நோக்கினால் வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ அதைப்போல நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதுதான் உயிரியல் கடிகாரம்.
தினசரி நிகழும் இந்த மாற்றங்களுக்கு சிர்காடியன் ரிதம் என்று பெயர். அதாவது காலை, பகல், மதியம், இரவு ஆகியன சிர்காடியன் ரிதம் என்றால் இந்த காலை மாலையை முடிவு செய்ய ஓடும் கடிகாரம் தான் உயிரியல் கடிகாரம்.
சமீபத்திய ஆய்வில் வாழ்க்கைமுறை மாற்றங்களால் வரும் நோய்களுக்கெல்லாம் காரணம் உடலின் உயிரியல் கடிகாரமும், சிர்காடியன் இசைவு பாதிக்கப்படுவதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் பசி எடுக்கும், தூக்கம் வரும், விழிப்பு வரும். இது எல்லாம் வெளிப்படையாக தெரிந்த இயக்கங்கள்.
ஆனால் வெளியில் தெரியாத பல செயல்பாடுகள் உடலுக்குள் நடைபெறுகிறது. உதாரணமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீரகம் இயங்க வேண்டும், ரத்தம் எவ்வளவு ஊற வேண்டும். குடலின் உள்சுவரில் உள்ள பொருள் எத்தனை நாளைக்கு ஒருமுறை உதிர்ந்து, வெளியேறி புதிதாக உருவாகவேண்டும் என்பதை இந்த உயிரியல் கடிகாரம் தான் தீர்மானிக்கிறது.
மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் சரியான கால நீரோட்டத்தில் இயங்க காரணமாக இருப்பவை இரண்டு ஜீன்கள். அவை பீரியட் ஜீன் மற்றும் டைம்லெஸ் ஜீன் ஆகும்.
பீரியட் ஜீன் என்பது ஒரு வகையான புரதத்தை உற்பத்தி செய்யும். இது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். செல்லில் இந்த புரதத்தின் அளவு குறைந்தால், இரண்டாவது ஜீனான டைம்லெஸ் ஜீன் சிதையும். இந்த சிதைவு தான் காலம் நகருவதை செல்களுக்கு உணர்த்தும். இதன் மூலம் தான் நமக்குத் தூக்கம், பசி போன்ற வெளிப்படையான உடலியல் இயக்கங்களும், உடலுக்குள் ஏற்பட வேண்டிய இயக்கங்களும் சரிவர நடப்பதற்கு காரணமாக அமைகின்றன.
இந்தப் புரதம் இரவு நேரத்தில் அதிகமாக சுரப்பதையும், பகலில் அதன் அளவு குறைவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சிர்காடியன் ரிதத்தை பொருத்து புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதையும் நிருபித்துள்ளனர்.
பொதுவாக இயற்கைக்கு எதிராக நாம் செயல்படும்போது தான் நம் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
நம் உடலை இயக்கும் உறுப்புகளின் நேரத்தை நாம் அறிந்துகொண்டால் உணவு, தூக்கம், வேலை போன்றவற்றை சரியான நேரத்தில் செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம்.
காலை 3 முதல் 5 மணி வரை நுரையீரலின் நேரம்
இந்த நேரத்தில் ஓசோன் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் கிடைக்கும் ஆற்றல் உணவின் மூலம் கிடைப்பதை விட மிகச் சிறப்பானது. மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் செய்வதற்கு உகந்த நேரம். இதனால் நுரையீரல் பலம் பெறும்.
காலை 5 மணி முதல் 7 மணிவரை பெருங்குடலின் நேரம்
பெருங்குடலை சுத்தம் செய்யும் நேரம். 7 மணிக்குள் மலம் கழித்து விடும்படி நம் உடலை தயார் செய்துகொண்டால் எந்த நோயும் அருகில் வராது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் உடல் சுத்தமாகும், குடலும் சுத்தமாகும், உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.
காலை 7 மணி முதல் 9 மணி வரை வயிற்றின் நேரம்
காலை உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும்.
சாப்பிட்ட உணவு 2 மணிநேரத்திற்குள் செரிமனமாகும். இந்த நேரத்தில் வயிற்றுக்கு வேலை கொடுப்பதுதான் சரியானதாகும். நேரம் கடந்து சாப்பிடும்போது மற்ற உறுப்புகளின் இயக்கமும் சேர்ந்து தடைபடும். அதாவது சுழற்சி தடைபடும்.
காலை மணி 9 முதல் 11 மணி வரை மண்ணீரலுக்கான நேரம்
காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், ரத்தமாகவும் மாற்றுகிற நேரம். இந்த நேரத்தில் அதிகமான உடல் உழைப்பு மற்றும் திரவ உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 11 மணிக்கு மேல் திரவ வடிவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
காலை மணி 11 முதல் 1 மணி வரை இதயத்தின் நேரம்
இந்த நேரத்தில் படபடப்பு, கோபப்படுதல் கூடாது. கடினமான வேலை எதுவும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்
மதியம் மணி 1 முதல் 3 மணி வரை சிறுகுடல் நேரம்
இந்த நேரத்தில் மதிய உணவு எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.
மாலை மணி 3 முதல் 5 மணி வரை சிறுநீர் பை நேரம்
அன்றைய நாளின் கழிவை உடலில் இருந்து பிரித்து எடுத்து சிறுநீர்ப்பையில் தேக்கி வைக்கும் பணி நடைபெறும்.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகத்தின் நேரம்
இந்த நேரத்தில் இளஞ்சூடான உணவுகள், திரவ வடிவ உணவுகள் சாப்பிடலாம், உடற்பயிற்சி செய்யலாம்.
இரவு 7 மணி முதல் 9 மணிவரை இதயப்பை மற்றும் இதய உறையின் (பெரிகார்டியம்) நேரம்
பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இது இதயத்தின் Shock Absorber. இந்த நேரத்தில் மிதமான, எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
நாள் முழுவதும் நம் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு செயல்பட்டுக் கொண்டிருந்த இதயம் மற்றும் இதயம் சார்ந்த பகுதிகள் ஓய்வெடுக்கும் நேரம்.
உணர்வுகள் தொடர்பாக அதாவது அழுகை, பதற்றம், மன எரிச்சல் கூடாது
இரவு 9 மணி முதல் 11 மணி வரை மனம் தொடர்பான நேரம்
உடலின் வெப்பத்தை சமன் செய்யும் நேரம். எண்ண ஓட்டங்கள் இன்றி, மிகவும் சாந்தமான நிலையில் உறங்கவேண்டும்.
இரவு மணி 11 முதல் 1 மணிவரை பித்தப்பை நேரம்:
இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால் பித்தப்பை இயக்கம் தடைபடும். பித்தப்பை கற்கள் உருவாக வாய்ப்பாக அமையும்.
இரவு 1 மணி முதல் 3 மணிவரை கல்லீரல் நேரம்
கனவுகள் இல்லாத ஆழ்ந்த தூக்கத்தை இந்நேரத்தில் தூங்கிவிட்டால் உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதன் வீரியம் குறைந்து குணமாகிவிடும்.
தலைமை உயிரியல் கடிகாரமான மூளை தனது சிர்காடியன் இசைவை படிப்படியாக இழக்க இதயம், நுரையீரல், சிறுநீரகம், குடல், கண்கள், தசைகள், ரத்த அணுக்கள் என ஒவ்வொரு உறுப்பின் உயிரியல் கடிகாரங்களும் நிலைமாறி ஓய்வின்றி ஓடத்துவங்கியதால் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை ஏற்பட்டு நாம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
90 வயது வரை வாழ்ந்த மனிதன், தற்போது 30 வயதுக்குள்ளேயே உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரியல் கடிகாரம் அறிந்து கடிகாரம் போல இயங்கி, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். பொதுவாக இயற்கைக்கு மாறாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நிச்சயமாக உடல் பாதிப்பை ஏற்படுத்தி ஆயுளைக்குறைத்து நோயைப் பெருக்கும். இயற்கையோடு இணைந்து வாழ்வோம், நோய் வராமல் தடுப்போம்.
நன்றி – சித்த மருத்துவர். காமராஜ், திருச்சி.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்