தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Water Management Bengaluru Kerala Affected By Drought What Will Happen In Tamil Nadu What To Do An Analysis

Water Management : வறட்சி பாதிப்பில் பெங்களூரு, கேரளா! தமிழகத்தில் என்னவாகும்? என்ன செய்யவேண்டும்? - ஓர் அலசல்!

Priyadarshini R HT Tamil
Apr 01, 2024 03:24 PM IST

நீர் மேலாண்மையில் கேரள பாதிப்பு பிற மாநிலங்களுக்கு பாடமாக அமையுமா?

Water Management : வறட்சி பாதிப்பில் பெங்களூரு, கேரளா! தமிழகத்தில் என்னவாகும்? என்ன செய்யவேண்டும்? - ஓர் அலசல்!
Water Management : வறட்சி பாதிப்பில் பெங்களூரு, கேரளா! தமிழகத்தில் என்னவாகும்? என்ன செய்யவேண்டும்? - ஓர் அலசல்!

ட்ரெண்டிங் செய்திகள்

நீர்தேக்கங்களில் நீர் இல்லை. நிலத்தடி நீரும் குறைந்து காணப்படுகிறது.

2023ல் மழைப்பொழிவு கேரளாவில் 24 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. 70 சதவீதம் மழைப்பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவ மழை, 34 சதவீதம் கடந்தாண்டு குறைவாக பெய்துள்ளது.

கோடைக்காலமும் கேரளாவில் முன்கூட்டியே தொடங்கி, பிப்ரவரி மாதத்திலேயே பகல் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், இந்த கோடைக் காலத்தில் வறட்சி தாண்டவமாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 வெள்ள பாதிப்பிற்குப்பின் கேரளாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாகவே இருந்து வருகிறது.

2018 வெள்ளத்தின்போது ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட மாற்றமே நிலத்தடி நீர் நிலத்திற்குள் செல்வதில் மாறுதல் ஏற்பட்டு அது குறைந்துபோக காராணமாக உள்ளது. ஆறுகளால் கொண்டு செல்லப்படும் நீரின் அளவிலும் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய எல்நினோ மாற்றம் கேரள வறட்சிக்கு காரணமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக புவிவெப்பமடைதலின் பாதிப்பு கேரளாவிலும் அதிகமாக காணப்படுகிறது.

மழைப்பொழிவிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல நாட்களுக்கு மழை பெய்யாமல் வறண்டும், சில நாட்களில் அதிகமான மழைப்பொழிவும், வெப்ப நாட்கள் அதிகரித்தும், வெப்பம் மிகுந்தும் காணப்படுகிறது.

கேரளாவில் மழைப்பொழிவின்போது நீரைத் தேக்க ஆறுகளின் குறுக்கே 81 அணைகள் இருந்தும், நீர் தட்டுப்பாட்டை கேரளா சந்தித்து வருகிறது.

கேரளாவில் உள்ள நீர்நிலைகள், ஈர நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது, தற்போதைய நிலைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

கற்சுரங்கள் அதிகரிப்பு (Quarrying), காடழிப்பு, விதிமீறிய கணக்கற்ற கட்டிடங்களின் பெருக்கம், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு போன்றவை நீர் உள்வாங்கப்படும் அளவு குறைய காரணமாகிறது.

நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், வெள்ள பாதிப்பிற்கு ஆளாகவும், நிலத்தடி நீர் அதிகம் சேருவது குறையவும் காரணமாக உள்ளது.

மழைப்பொழிவு அதிகமிருந்தால் வெள்ள பாதிப்பிற்கும், மழைப்பொழிவு குறைந்தால், நீரின்றி வறட்சிக்கும் கேரளா ஆளாகிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கேரள அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்கவும், மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை அதிகப்படுத்தவும், சிறு தடுப்பணைகளை அதிகம் ஏற்படுத்தவும், குளங்களை பாதுகாத்து மேம்படுத்தவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தினால் மட்டுமே, கேரள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

தமிழகத்தின் நிலையும் மோசமாகவே உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பில் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசத்தை (15,213) அடுத்து 7,828 நீர்நிலைகள் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்திய நீர்நிலை ஆக்கிரமிப்பில், 22 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது. இது மிக அதிகம்.

பரந்தூர் விமானநிலைய பரப்பில் 26 சதவீதம், (2,605 ஏக்கர் நிலங்கள்) ஈர நிலங்கள். இருப்பினும் தமிழக அரசு, அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் இருப்பது எப்படி சரியாகும்?

பரந்தூர் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழக அரசு உள்ளூர் 13 பஞ்சாயத்துகளின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து, திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கேரள பாதிப்பு தமிழகத்திலும் வர வாய்ப்புள்ளதை கருத்தில்கொண்டு, மற்ற மாநிலங்களும் உரிய பாடங்களை கற்றுக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

சென்னை குப்பை கிடங்களில் கரியமிலவாயுவை விட 28 மடங்கு அதிக புவிவெப்பமடைதல் பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் வாயு 52 சதவீதம் (28,870 டன்/வருடம்) வெளியாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தாமல், தமிழக வெப்ப அலைகள் மற்றும் வறட்சி பாதிப்பை குறைப்பது கடினம். தமிழக அரசு இதற்கு செவிசாய்க்குமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

 

WhatsApp channel

டாபிக்ஸ்