Exclusive : எச்சரிக்கை மக்களே! மழைக் காலத்தில் மலேரியா எப்படி பரவுகிறது? – விளக்கும் மருத்துவர்!
மழைக் காலத்தில் மலேரியா எப்படி பரவுகிறது என்று மருத்துவர் விளக்குகிறார். திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் மழைக்காலத்தில் வரும் காய்ச்சல்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களையும் தொடர்ந்து இந்த கட்டுரையின் மூலம் உங்களுக்கு விளக்குகிறார்.

தீபாவளி முடிந்து மழையும், பனியுமான ஒரு குளிர் காலம் நிலவத்துவங்கிவிட்டது. இப்போது தொற்று கிருமிகளுக்கு கொண்டாட்டமான காலம் எனலாம். எளிதாக தொற்றும் வாய்ப்பு காற்றில் உள்ளது. நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் மக்களை எச்சரிக்கிறார். மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல்கள் மற்றும் அதை தீர்க்கும் சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து மருத்துவர் ஒரு தொடராக இங்கு விளக்குகிறார். மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. சுத்தமில்லாத தண்ணீரின் வழியே, டைஃபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.
குறிப்பாக குழந்தைகள், உடல் பலகீனமான நிலையில் இருப்பவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை உட்கொண்டு வாழ்பவர்கள் என அனைவரும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்
காய்ச்சல் என்றால், உடனே மருந்து கடைகளுக்கு சென்று காய்ச்சலுக்கு ஒரு செட் மாத்திரை, சளி, இருமலுக்கு ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று கேட்டு வாங்கி பயன் படுத்தக்கூடாது. எதனால் திடீர் காய்ச்சல் வந்தது என்றும், அது என்ன வகை காய்ச்சல், எதனால் சளி, இருமல் தொற்றுகள் ஏற்பட்டது என்றும் ஆராய்ந்து அறியவேண்டும்.