வத்தல் குழம்பு சாதம்; பெயரை சொல்லும்போதே வாயில் எச்சில் ஊறுகிறதா? இதோ ரெசிபி!
வாயில் எச்சில் ஊறும் சுவையில் வத்தல் குழம்பு சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
வத்தல் குழம்பு சாதத்தை நேரடியாக குக்கரில் வைத்தே எளிதாக செய்துவிடலாம். இதற்கு ஃபிரஷ் மசாலா அரைத்து செய்யவேண்டும். இந்த மசாலாப்பொடி உங்கள் வத்தல் குழம்புக்கு அபாரமான மணம் மற்றும் சூப்பர் சுவையைத்தரும். இந்த மசாலாவை நீங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த வத்தல் குழம்புக்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தல் போதுமானது. இதை சுண்டக்காய் வத்தல் மற்றும் மணவத்தல் இரண்டிலும் செய்ய முடியும். இங்கு சுண்டைக்காய் வத்தல் வைத்து செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதே முறையில் மணவத்தல் வைத்து செய்து கொள்ள சுவை அள்ளும். எனவே கட்டாயம் இந்த வத்தல் குழம்பு சாதத்தை செய்து ருசித்துப் பாருங்கள். மழைக்கு இதமானது.
வத்தல் குழம்பு மசாலா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
மல்லி விதைகள் – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 15
(உங்கள் கார அளவுக்கு ஏற்ப இந்த அளவை அதிகரித்து அல்லது குறைத்துக்கொள்ளலாம்)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
வத்தல் குழம்பு பொடி செய்யும் முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் மிளகு, சோம்பு, சீரகம், வெந்தயம், மல்லி விதைகள், கடலை பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து, ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.
சாதம் செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
சுண்டக்காய் வத்தல் – ஒரு கைப்பிடியளவு
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – அரை ஸ்பூன்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 15
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – 2 (விழுதாக அரைத்தது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
(சூடான தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
அரிசி – ஒரு கப்
சாதம் செய்முறை
ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டக்காய் வத்தலை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அதிலே கடுகு, வெந்தயம், கடலை பருப்பு தாளித்து, கறிவேப்பிலை தூவவேண்டும். பின்னர், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன், விழுதாக அரைத்த தக்காளி பழத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இப்போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
அடுத்து தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்துள்ள சுண்டக்காயில் பாதியை சேர்த்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் விட்டு நல்ல மையாக அரைத்து, குக்கரில் சேர்க்கவேண்டும். மசாலாக்களில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.
அடுத்து புளிக்கரைசலை குக்கரில் சேர்த்துவிடவேண்டும். அடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். கொதி வந்தவுடன் அதில் அலசி வைத்துள்ள அரிசியை சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவேண்டும்.
சாதத்தை நன்றாக குலைய விட்டால்தான் இந்த வத்தல் குழம்பு சுவையானதாக இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக தண்ணீர் வைத்துக்கொள்ளலாம். அப்போது நல்ல குழைந்து வரும். உங்கள் குக்கரில் நீங்கள் எவ்வளவு அரிசி மற்றும் தண்ணீர் சேர்ப்பீர்கள் என்ற அளவுக்கு ஏற்ப வைத்துக்கொள்ளவேண்டும்.
குக்கர் ரிலீஸ் ஆனவுடன், அதில் சிறிது கறிவேப்பிலைகளையும், எஞ்சிய சுண்டக்காய் வத்தலையும் தூவி நன்றாக கலந்து அலங்கரித்து பரிமாறினால், சூப்பர் சுவையான வத்தல் குழம்பு சாதம் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தல் போதுமானது. வெள்ளரி பாசிபருப்பு கூட்டும் நன்றாக இருக்கும். குக்கரை திறக்கும்போதே நறுமணம் வீசும். அதற்கு இந்த மசாலாக்கள் தான் காரணம். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்