இந்த தீபாவளிக்கு ஸ்பெஷல் காரம்! செட்டிநாட்டு சீப்பு ரோல்! மொறுமொறுவென அதிரடி கிளப்பும்!
இந்த தீபாவளிக்கு ஸ்பெஷல் காரம், செட்டிநாட்டு சீப்பு ரோல், மொறுமொறுவென அதிரடி கிளப்பும். இந்த காரத்தை தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்.
தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடைகள் என அனைத்தும் தயாராகிவிட்டது. பரபரப்பாக பலகாரங்கள் செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறீர்களா? வீடே ஒரே புத்தாடைகள், பட்டாசு, பலகார மணம் வீச துவங்கிவிட்டதா? பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வயிறு கோளாறுகளை சரிசெய்யும் தீபாவளி லேகியத்தை நாம் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது. அதையும் அளவாக செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் மற்ற பலகாரங்களைச் செய்யலாம். தீபாவளி பண்டிகைக்கு காரம் என்றாலே வெறும் முறுக்கு, தட்டைதான். இதோ இந்த தீபாவளிக்கு இந்த செட்டிநாட்டு சீப்பு ரோல்ஸ் செய்து பாருங்கள். இதை செய்வதும் எளிது. உங்களுக்கு நல்ல கார சுவையையும் தரும். இந்த தீபாவளிக்கு வித்யாசமான ஸ்வீட், காரங்களை நீங்கள் செய்ய விரும்பினால், இதுபோல் செய்துகொள்ளுங்கள். இறுதி நேர பரபரப்பிலும் இதை எளிதாக செய்துவிடலாம். வழக்கமான கார வகைகளில் இருந்து இது வித்யாசமான சுவை தருவதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 200கிராம்
கடலை மாவு - 50 கிராம்
உளுந்து மாவு - 50 கிராம்
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
திக்கான தேங்காய் பால் – அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தாராளமாக
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் உளுந்து மாவு சேர்த்து, அதனுடன் உப்பு மற்றும் வெண்ணெயை சேர்த்து கையால் நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.
அதில் வெதுவெதுப்பாக சூடாக்கிய தேங்காய் பாலை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதிய அளவு இல்லையென்றால், சூடான தண்ணீரை ஊற்றி முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவேண்டும்.
முறுக்கு பிழியும் குழலை எடுத்து தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து மாட்டி அதில், பிசைந்த மாவை வைத்து, ஒரு தட்டின் மீது நேராக ஒரு கோடு போல பிழிந்து அதை கத்தியால் சிறு சிறு துண்டமாக வெட்டி, பின் அதனை உருட்டிக்கொள்ளவேண்டும். ரோல்போல் செய்து கொள்ளளவேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் தாராளமாக எண்ணெய் சேர்த்து, அது சூடானவுடன், ரோல்களை அதில் போட்டு, சீராக, நன்றாக இருபுறமும் பொன்னிறமாகும் வரையில் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதில் மேலும் ருசி சேர்க்க சிறிது ஓமத்தை மாவுடன் சேர்த்து பிசையலாம். இதை சீப்பு சீடை என்றும் சொல்வார்கள், சோழி வடிவத்திலும் இதை செய்வார்கள். இதை காரைக்குடி செட்டிநாட்டு மக்கள் தீபாவளிக்கு செய்து அசத்துவார்கள். இது அவர்களின் பாரம்பரிய பலகாரம் ஆகும். செட்டிநாடு மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு அங்கம் என்று இந்த சீப்பு சீடை அல்லது சீப்பு ரோல்ஸை கூறலாம்.
பொதுவாக இதுபோன்ற காரங்கள் செய்யும்போது பெருங்காயத்தூள் சேர்க்கப்படும். ஆனால் பெருங்காயத்தூள் சேர்த்தால் கடித்து சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும். எனவே, பெருங்காயத்தூளுக்குப் பதில், ஓமம், சீரகம் என எதையாவது ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்