Sambar Podi : மணமும், சுவையும் நிறைந்த சாம்பார் பொடி! வீட்டில் செய்வதால் எத்தனை நன்மைகள் பாருங்க!
Sambar Podi : சாம்பார் பொடி அரைக்கும்போது எண்ணெய் விட்டு அரைக்கக்கூடாது. எண்ணெய்விட்டு வறுத்து அரைத்தால், சிக்கு வாடை வீசத்துவங்கிவிடும். அதோபோல் பவுடர் அரைக்கும் வரை ஈரப்பதமும் இருக்கக்கூடாது.
வீட்டிலே செய்வதால் நிறம், மணம், சுவை என அனைத்தும் நன்றாக இருக்கும். அடிக்கனமான இரும்பு கடாயை வறுப்பதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறவைக்க அகலமான பாத்திரம் பயன்படுத்த வேண்டும். அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
தேவையான பொருட்கள்
வர மல்லி – 200 கிராம்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
கடுகு – 20 கிராம்
வெந்தயம் – 15 கிராம்
(கடுகு மற்றும் வெந்தயம் வெடித்து நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்)
கடலை பருப்பு – 20 கிராம்
துவரம் பருப்பு – 20 கிராம்
எப்போதும் சாம்பார் பொடிக்கு பயன்படுத்தும்போது பருப்புகளின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதிகம் பயன்படுத்தக்கூடாது. அதிகம் சேர்த்தால் சாம்பாரில் பொடி சேர்த்தவுடன் சாம்பார் பொங்கி, பொங்கி வரும். அதனால் மிளகு, சீரகத்தை விட குறைவான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பருப்புகளின் அளவை குறைத்தால்தான் குழம்பு கொழகொழப்பாக, கெட்டியாக ஆகாமல் இருக்கும்.
இரண்டு பருப்பையும் ஒன்றாக வறுத்துக்கொள்ளலாம். பருப்பு சிவந்து வரவேண்டும்.
சாம்பார் பொடி அரைக்கும்போது எண்ணெய் விட்டு அரைக்கக்கூடாது. எண்ணெய்விட்டு வறுத்து அரைத்தால், சிக்கு வாடை வீசத்துவங்கிவிடும். அதோபோல் பவுடர் அரைக்கும் வரை ஈரப்பதமும் இருக்கக்கூடாது.
மிக்ஸி ஜாரைக்கூட வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம். வறுக்கும்போது குறைவான தீயில்தான் வறுக்க வேண்டும்.
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
(பொடிக்கு மணம் சேர்க்கும். காய்ந்த கறிவேப்பிலை கூட எடுத்துக்கொள்ளலாம்)
வர மிளகாய் – 75 கிராம்
கஷ்மீரி மிளகாய் – 50 கிராம்
(சாம்பார் பொடிக்கு நல்ல நிறம் கிடைக்கும்)
கல் உப்பு – தேவையான அளவு
(தூள் உப்பு பயன்படுத்தக்கூடாது)
கட்டிப்பெருங்காயம் – 15 கிராம்
(பெருங்காயத்தை கடாயில் சேர்த்து வறுக்கும்போது நன்றாக உப்பு வரும் அதை கரண்டியில் குத்தி உடைத்து வறுத்து எடுக்க வேண்டும்)
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கடாயில் குறைவான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
விரலி மஞ்சள் – 100 கிராம்
பின்னர் விரலி மஞ்சளை தட்டி அப்படியே சேர்க்க வேண்டும். மஞ்சளை வறுக்க தேவையில்லை. வீட்டில் மிக்ஸியில் பொடி செய்தால், மஞ்சள் தூளை நேரடியாக சேர்த்துக்கொள்ளலாம். மிஷினில் கொடுத்து அரைக்கும்போது தான் விரலிமஞ்சளை தட்டி சேர்க்க வேண்டும். விரலி மஞ்சள் வீட்டில் அரைபடாது.
அனைத்தையும் நன்றாக ஆறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்தவுடனும் சூடாக இருக்கும். அந்த பொடியையும் ஆறவைத்து, மீண்டும் டப்பாவில் அடைத்துக்கொள்ள வேண்டும்.
காற்றுப்புகாத, ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை 6 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். சில்வர் பாத்திரம் அல்லது கண்ணாடி ஜாரில் சேர்த்து வைக்க வேண்டும்.
இதை புளிக்குழம்பு, கார குழம்பு என அனைத்து வகை சைவ குழம்புகளுக்கும் பயன்படுத்தலாம். சில வகை கூட்டுகள், வறுவல்களுக்குமே பயன்படுத்திக்கொள்ளலாம்.
வீட்டிலே அரைப்பதால் இதன் சுவை, மணம், நிறம் என அனைத்தும் நீண்ட நாட்கள் மாறாது. உங்களுக்கு தேவையான அளவு அரைத்துக்கொள்ளலாம். அதற்கு ஏற்றாற்போல் இந்த அளவிலே பொருட்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்தப்பொடியை சேர்த்து சாம்பார் வைத்தால் ஊரே மணக்கும். கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்