ப்ரோட்டின் ரிச் மல்டிக்ரைன் பம்கின் தோசை! பரங்கிக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும்!
ப்ரோட்டின் ரிச் மல்டிக்ரைன் பம்கின் தோசை, பரங்கிக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும். குழந்தைகளுக்கு ஏன் பரங்கிக்காயை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு கொண்டைக்கடலை – ஒரு கப்
மசூர் தால் – ஒரு கப்
கம்பு – ஒரு கப்
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
இட்லி அரிசி – ஒரு கப்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – கால் இன்ச்
பரங்கிக்காய் – ஒரு கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கம்பு, மசூர் தால், கருப்பு கொண்டைக்கடலை, அரிசி, உளுந்து என அனைத்தையும் சேர்த்து ஓரிரவு ஊறவைக்கவேண்டும்.
அடுத்த நாள் காலையில் அதை அலசி வடித்து எடுத்து, அதில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பரங்கிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள எந்த சட்னி, சாம்பார், குருமா என வைத்துக்கொள்ளலாம். சூப்பர் சுவையில் அசத்தும் இந்த மல்டிக்ரைன் புரத பம்கின் தோசை.
பரங்கிக்காய் அமெரிக்காவில் தோன்றிய காய், அறிவியல் ரீதியாக பரங்கிக்காய் ஒரு பழம்தான். ஆனால் அதை நாம் காய் பட்டியலில் வைத்துள்ளோம். அது பழம் என்று அழைக்கப்படுவதற்கு அதன் இனிப்பு சுவையும் காரணமாகும். இந்த இனிப்பு சுவைக்காக இந்த காயை யாரும் விரும்பி உண்ண மாட்டார்கள். ஆனால் இதை பிரதானமாக பல்வேறு உணவுகளில் இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
பரங்கிக்காயின் நன்மைகள்
கண் பார்வையை கூராக்கும்
ஒரு கப் பரங்கிக்காயில் நீங்கள் தினமும் உட்கொள்ள வேண்டிய அளவில் 200 சதவீதம் வைட்டமின் ஏ சத்து உள்ளது. அது கண்ணில் உள்ள கார்னியாவை பாதுகாத்து உங்கள் பார்வையை காக்கிறது. இரவு நேரத்தில கண்கள் நன்றாக தெரிவதற்கு உதவுகிறது. இதில் உள்ள லியூடீன் மற்றும் செக்ஸானின் ஆகிய சத்துக்கள், கண்களை கண்புரை நோய் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களில் இருந்து காக்கிறது.
உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது
இதில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கின்றன.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
ஆரஞ்சு வண்ணமுள்ள உணவுகளில் பொட்டாசியச்சத்துக்கள் அதிகம் இருக்கும். அது உங்கள் ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. எலும்பை வலுப்படுத்துகிறது. உங்களுக்கு சிறுநீரக கற்கள் மற்றும் பக்கவாத நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
உங்கள் சரும பொலிவை அதிகரிக்கிறது
பரங்கிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உங்கள் சருமத்துக்கு நல்லது. வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது. மேலும் இதில் உள்ள புரோவைட்டமின் பீட்டா கரோட்டின், உங்கள் உடல் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய வைட்டமின்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
பரங்கிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் குடல் இயக்கத்தை முறைப்படுத்தி, ஆரோக்கியமாக உடல் எடை இருக்க உதவுகிறது. மேலும் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது
கேன்சர் செல்கள் எளிதில் பல்கி பெருகக்கூடியவை. இதில் உள்ள கரோட்டினாய்டுகள், அவற்றை தடுத்து சில வகை புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
இதுபோன்ற எண்ணற்ற எளிய ரெசிபிக்கள், தகவல்கள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்.டி தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. எனவே நீங்கள் இதுபோன்ற தகவல்களைப் பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்