தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mosquito Borne Diseases : மழைக்காலத்தில் கொசுவால் பரவக்கூடிய 7 காய்ச்சல்கள் – தடுப்பு முறைகள்!

Mosquito Borne Diseases : மழைக்காலத்தில் கொசுவால் பரவக்கூடிய 7 காய்ச்சல்கள் – தடுப்பு முறைகள்!

Priyadarshini R HT Tamil
Aug 20, 2023 12:33 PM IST

கொசுவால் பரவக்கூடிய காய்ச்சல்கள் என்னென்ன? அவற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? இவற்றிற்கு முறையாக சிகிச்சையளிக்காவிட்டால், அவை உயிரே வாங்கிவிடும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மலேரியா

ஆண்டுதோறும் பல மில்லியன் பேர்களை தாக்கும் மலேரியா கொசுவால் பரவக்கூடிய நோயாகும். இது ஜீனஸ் ப்ளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இது கொசுவின் மூலம் மக்களுக்கு பரவுகிறது. இதனால் காய்ச்சல், தலைவலி, தசை வலி, குளுமை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. கடுமையாகும்போது, மூச்சுத்திணறல், அறிவாற்றல் குறைவு, உறுப்பு செயலிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. முறையாக சிகிச்சை கொடுக்காவிட்டால் இறப்பை ஏற்படுத்தும்.

டெங்கு

ஏடிஸ் கொசு டெங்குவை பரப்புகிறது. இந்த கொசுக்கள் தேங்கியிருக்கும் நீரில் முட்டையிட்டு பெருகுகின்றன. கட்டுமான இடங்கள், தண்ணீர் தொட்டிகள், நீச்சல் குளங்கள், தாவரங்கள், நீண்ட நாட்களாக போடப்பட்ட குப்பைகள் இவற்றில் எல்லாம் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் அதிக காய்ச்சல் இருக்கும். தசை வலி, மூட்டு வலியும் இருக்கும். கண்களில் எரிச்சல், காய்ச்சல் ஏற்படும். ஏற்கனவே டெங்கு வந்தவர்களுக்கு மீண்டும் வந்தால் உயிரிழப்பு ஏற்படும்.

சிக்குன் குனியா

ஏடிஸ் இஜிப்தி கொசு சிக்குன்குனியாவை பரப்புகிறது. சிக்குன்குனியா வைரஸ்களும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் அரிதானது. காய்ச்சல், மூட்டு வலி, வீக்கம் ஏற்படும். தசை தளர்தல், தலைவலி, தடிப்புகள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஒரு வாரத்தில் குணமடைந்தாலும், மூட்டு வலி பல மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை நீட்டிக்கும்.

ஷிகா வைரஸ்

ஏடிஸ் கொசுதான் இவற்றையும் பரப்புகிறது. நரம்பு மண்டல கோளாறுகள் மற்றும் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது. கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பத்துக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். டெங்குவைப்போலவே, காய்ச்சல், தலைவலி, தடிப்பு, மூட்டு வலி, கண் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

மஞ்சள் காய்ச்சல்

இதையும் ஏடிஸ் கொசுக்கள்தான் பரப்புகின்றன. மிதமான காய்ச்சல், குளிர், பசியின்மை, மயக்கம், முதுகு வலி, தலைவலி, சோர்வு, கடுமையான மஞ்சள் காமாலை மற்றும் உடலின் உள்ளே ரத்தக்கசிவு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. மஞ்சள் காய்ச்சல் 5 நாளில் குணமாகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 30 ஆயிரம் உயிர்களை காவு வாங்குகிறது.

வெஸ்ட் நைல் வைரஸ்

பாதிக்கப்பட்ட க்யூலெக்ஸ் கொசுக்களிடம் இருந்து பரவுகிறது. இந்த வைரஸால், காய்ச்சல் முதல் நரம்பு மண்டல கோளாறுகள் வரை ஏற்படுகிறது. இதில் வயதானவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுமே கடுமையான பாதிக்கப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

ஜாப்பானிய என்சிபாஃலிட்டிஸ்

மூளையில் ஏற்படும் தொற்று க்யூலக்ஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. பலருக்கு அறிகுறிகள் தெரியாது. கடுமையானால் மூளையில் வீக்கம் ஏற்படும். கோமா நிலை அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே சென்றால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொசு கடிக்காமல் பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முழுகை, முழு கால், முழு உடலையும் மூடி ஆடை அணிய வேண்டும்.

வீட்டைச்சுற்றி எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசு வலைகள், கொசுக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி கொசுக்களை அழிக்க வேண்டும்.

வீட்டுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை தடுக்க வேண்டும்.

இவற்றை மனதில் கொண்டு செயல்பட்டால் கொசுவிடம் இருந்தும், அவற்றினால் பரவும் நோய்களிடம் இருந்தும் நம்மை காத்துக்கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்