தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mango Pickle: கூகுளில் அதிகம் தேடப்பட்ட மாங்காய் ஊறுகாய்.. இப்படி செஞ்சா சூப்பரா இருக்கு

Mango Pickle: கூகுளில் அதிகம் தேடப்பட்ட மாங்காய் ஊறுகாய்.. இப்படி செஞ்சா சூப்பரா இருக்கு

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 13, 2023 12:44 PM IST

ப்ரிட்ஜே தேவை இல்லை.. தண்ணீர் படாமல் வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுபோகாது. அவ்வப்போது நல்ல வெயிலில் வைத்து எடுத்தால் மட்டும் போதும்.

மாங்காய் ஊறுகாய்
மாங்காய் ஊறுகாய் (free pik)

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

மாங்காய்

பெருங்காயம்

உப்பு

மிளகாய்தூள்

கடுகு

வெந்தயம்

நல்லெண்ணெய்

கருப்பட்டி

செய்முறை

ஒரு கிலோ அளவு சுத்தமாக கழுவிய மாங்காயை தண்ணீர் இல்லாமல் காய வைக்க  வேண்டும். இல்லை என்றால் மேல் பகுதியில் சுத்தமான துணியை வைத்து துடைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் கொட்டைகளை நீங்கி விரும்பிய அளவில் நறுக்கி கொள்ள வேண்டும்.

நறுக்கிய மாங்காயில் 3 ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரவு முழுவதும் நன்றாக ஊற விட வேண்டும். பின்னர் காலையில் மாங்காய் தண்ணீர் விட்டு உப்புடன் ஊறி இருக்கும். மாங்காயை மட்டும் தனியாக எடுத்து நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். மீண்டும் மாலையில் நன்றாக காய்ந்த மாங்காயை அதே உப்பு நீரில் கலந்து விட்டு ஊற விட வேண்டும். இப்படி 3 முதல் 4 நாட்கள் நன்றாக காய வைத்து ஊற வைக்க வேண்டும்.

4 ஸ்பூன் வெந்தயம், 8 ஸ்பூன் கடுகு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடுகு வெந்தயம் நன்றாக சிவந்து மணம் வரும்போது எடுத்து நன்றாக ஆற வைத்து பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது வாணலியில் கொஞ்சமாக நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கிலோ மாங்காவிற்கு 150 கிராம் அளவிற்கு தனி மிளகாய் தூளை அதே எண்ணெய்யில் சேர்க்க வேண்டும். (அவரவர் தேவைக்கு ஏற்ற காரம் சேர்க்கலாம்) எண்ணெய் லேசாக ஆறிய பிறகு அந்த எண்ணெய்யை ஊறுகாயில் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பின்னர் ஒரு கிலோ மாங்காய்க்கு 300 முதல் 500 மில்லி நல்லெண்ணெய்யை சூடாக்கி ஆற விட வேண்டும். எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வரும் போது அதையும் மாங்காய் உடன் கலந்து விட வேண்டும். இப்போ ஏற்கனவே வறுத்து அரைத்த வெந்தயம் கடுகு பொடியையும் சேர்க்க வேண்டும்.

பின்னர் 200 கிராம் அளவு கருப்பட்டியை தட்டி அதில் கொஞ்சமாக நீர் தெளித்து காய்ச்ச வேண்டும். கருப்பட்டி கரையும் அளவிற்கு நீர் தெளித்தால் போதுமானது. கெட்டியான கருப்பட்டி பாகு வரும்போது அதையும் மாங்காய் உடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் சுமார் ஒரு வாரத்திற்கு இந்த மாங்காய் ஊறுகாய் மேல் ஒரு துணி போர்த்தி வெயிலில் வைத்து காய வைக்க வேண்டும். ஊறுகாய் ஊற ஊற எண்ணெய் ஈர்த்து கொண்டால் தேவைப்பட்டால் மேலும் கொஞ்சமாக எண்ணெய்யை சூடாக்கி ஆற வைத்து சேர்த்து கொள்ளலாம். அவ்வளவு தான் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ருசியாக மாங்காய் ஊறுகாய் ரெடி..

ப்ரிட்ஜே தேவை இல்லை.. தண்ணீர் படாமல் வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுபோகாது. அவ்வப்போது நல்ல வெயிலில் வைத்து எடுத்தால் மட்டும் போதும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்