Kambu koozh : குளுகுளு கம்மங்கூழ்! கோடையின் வெப்பத்தை தணிக்கும் வழிகளுள் ஒன்று! இதோ ரெசிபி!
Kambu koozh : கோடையை குளிர்விக்கும் கம்மங்கூழ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கம்பு – ஒரு கப்
முதல் நாள் இரவு தயாரிக்கவேண்டியது என்ன?
(இதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதில் அளவாக தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கம்பு வெந்தவுடன் இறக்கி ஓரிரவு மூடி வைத்துவிடவேண்டும்)
அடுத்த நாள் காலையில் கூழ் செய்யவேண்டும்.
கூழ் செய்ய தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
மாங்காய் துருவல் – ஒரு கப்
கறிவேப்பிலை – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சீரகம் – கால் ஸ்பூன்
மோர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதல் நாளே கிண்டி புளிக்க வைத்த கம்மங்கூழை எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் துருவல், கறிவேப்பிலை மற்றும் நன்றாக கசக்கிய சீரகம் சேர்த்து அதில் வேகவைத்துள்ள கம்பை சேர்க்கவேண்டும்.
இதில் மோர் அல்லது தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு கூழாக கரண்டி வைத்து கரைத்துக்கொள்ள வேண்டும்.
சூப்பர் சுவையில் கம்மங்கூழ் ரெடி. இது வெயில் காலத்துக்கு உடலை குளுமையாக்க உதவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு துவையல் இருந்தால் போதும் அல்லது சின்னவெங்காயம், வற்றல், மாங்காய் ஊறுகாய் என எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ள சுவை அள்ளும்.
கம்பில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.
கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது - கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானம் பொறுமையாக நடைபெற உதவுகிறது.
இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்க முடியும். எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது – இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.
அல்சர் மற்றும் அசிடிட்டிக்கு மருந்தாகிறது – வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது – சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணமாக இதன் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உள்ளன.
சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்தை வழங்குகிறது – சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து கிடைக்காமல் போகிறது. கம்பு அந்த குறையை போக்கி, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது – கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.
எலும்பை வலுவாக்குகிறது – கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்து உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது.
கொழுப்பை குறைக்கிறது – கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.
ஊட்டச்சத்து நிறைந்த குழந்தை உணவு – கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.
உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது.
குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.
டாபிக்ஸ்