‘முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவதில்லை’ முருங்கைக்காய் ரசம்! எப்படி செய்வது என பாருங்க! இதோ ரெசிபி!
‘முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவதில்லை’ என்பது பழமொது. முருங்கைக்காய் ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள். அதன் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முருங்கை மரத்தின் காய், பட்டை, பிசின், கீரை என அனைத்து பாகங்களுமே நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவைதான். முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதை உணவில் தினமுமே சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. காயிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். முருங்கை மரம் வைத்திருந்தால், 80 வயதிலும் தடி ஊன்றாமல் நடக்கலாம் என்பது பழமொழி. ஏனெனில் முருங்கைக்காயை அன்றாடம் உணவில் சேர்க்கும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. முருங்கைக்காயை சாம்பாரில் சேர்த்துதான் சாப்பிட்டு பழக்கம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால், நீங்கள் அதை அனைத்து உணவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவீர்கள். இப்போது முருங்கைக்காயை பொடி செய்து விற்கிறார்கள். நீங்கள் தினமும் எந்த சாம்பார் செய்தாலும் அதில் அந்தப்பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
முருங்கைக்காயின் நன்மைகள்
ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது.
எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
சுவாச பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது.
பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
முருங்கைக்காயில் ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் – 2
தக்காளி – 4 (விழுதாக அரைக்கவேண்டும். மிக்ஸியில் அரைக்கலாம் அல்லது கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளலாம்)
புளி – எலுமிச்சை அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)
பருப்புத் தண்ணீர் – ஒரு டம்ளர்
வர மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 10 பல்
வெல்லம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – ஒரு கொத்து
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிட்டிகை
செய்முறை
முருங்கைக்காயை ஒரு அங்குல நீளத்தில் வெட்டி தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
மிளகு, சீரகம், வரமிளகாயை மிக்ஸியில் நறநறவென்று அரைத்துக்கொள்ளவேண்டும் அல்லது சிறிய உரலில் தட்டி எடுத்துககொள்ளளவேண்டும்.
கடாயில் எண்ணெய்விட்டு, சூடானவுடன், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவேண்டும்.
அது பொரிந்தவுடன், தக்காளி விழுது சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து இடித்து அல்லது அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, வேகவைத்த முருங்கைக்காயை தண்ணீருடனே சேர்க்கவேண்டும். வேகவைத்த முருங்கைக்காயை அந்த தண்ணீருடனே சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அடுத்து புளிக்கரைசல், பருப்புத் தண்ணீரை சேர்க்கவேண்டும்.
பூண்டை நசுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், வெல்லம், உப்பு சேர்த்து ஒரு கொதி திரண்டதும் மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவேண்டும். ருசியான முருங்கைக்காய் ரசம் தயார்.
இதை சூடான சாதத்தில், நெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும் அல்லது வேகவைத்த பருப்பை சூடான சாதத்தில் சேர்த்து, அதில் இந்த ரசத்தை ஊற்றி, நெய்யுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் அல்லது ஊறுகாய் போதும். இதில் வேகவைத்த முருங்கைக்காயையும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். தீபாவளியையொட்டி, எண்ணற்ற பலகார ரெசிபிக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயன்படுத்தி பலன்பெறுங்கள். இனிய, பாதுகாப்பான, ஆரோக்கியமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்