Gulf of Mannar : வெள்ளையான வண்ண பவளப்பாறைகள் – மன்னார் வளைகுடாவில் அதிர்ச்சி சம்பவம்!
Gulf of Mannar : தமிழகத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமானதால் பவளப்பாறைகள் பாதிப்பு என்ற ஆய்வுத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புப் பகுதியில் (Gulf of Mannar Marine Biosphere Reserve), கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமானதால், அப்பகுதியில் பவளப்பாறைகளின் ஆரம்ப கட்ட பாதிப்பு அல்லது அழிவு (Mass Bleaching) ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதனால், தமிழக வனத்துறை நீருக்கடியில் அதன் பாதிப்பை அறிய ஆய்வுகளை (Survey) மேற்கொள்ள உத்தரவை பிறப்பித்துள்ளது.
மார்ச், 2024ல் அமெரிக்க கடல்சார்ந்த சூழல் நிறுவனம் (NOAA) மன்னார் வளைகுடா பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பம் கோடையில் அதிகமாகும் என கணித்து, அங்கு பவளப்பாறைகைள் பரவலாக அழியும் வாய்ப்பை கருத்தில்கொண்டு அப்பகுதிக்கு "சிவப்பு எச்சரிக்கை"விடுத்திருந்தது.
ஆனால் NOAA நிறுவனம் மே, 2024, கடைசி வாரம், ஜுன் முதல் வாரம் இடையில் பாதிப்பு இருக்கும் என கணித்திருந்த நிலையில், ஏப்ரல் 3ம் வாரத்திலேயே பாதிப்பு துவங்கிவிட்டது.
இதுகுறித்து, Gulf of Mannar Biosphere Reserve இயக்குநர் ஜெகதீஷ் S.பாகன் கூறுகையில், ‘ஏப்ரல் 3ம் வாரத்திலேயே பவளப்பாறைகளின் பாதிப்பு மன்னார் வளைகுடாவின் சிலபகுதிகளில் தொடங்கிவிட்டது என்றும், NOAA எச்சரிக்கை காரணமாக, மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளின் அழிவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI), சென்னையை சேர்ந்த தேசிய நீடித்த கடற்கரை மேலாண்மை மையம் (National Centre for Sustainable Coastal Management-NCSCM) உதவியுடன், கள ஆய்வு, பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்ய இருப்பதாகவும், NCSCM நிறுவனம் மூலம் பவளப்பாறைகளை சுற்றியுள்ள வெப்ப உயர்வை அளக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
MODIS செயற்கைக்கோள் புள்ளிவிவரங்கள் மூலம், மன்னார் வளைகுடா பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பத்தை ஏப்ரல்-ஜுன் 2024 வரை அளந்து, தேவையான பணிகளை மேற்கொள்ள மேற்கூறப்பட்ட 2 நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.
SDMRI அதிகாரிகள் கூறுகையில், "மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 11 தீவுகள் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஏப்ரல் 22-27 இடைப்பட்ட காலத்தில் பவளப்பாறைகளின் பாதிப்பை அறிய விரைவு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளனர்.
இதுவரை தூத்துக்குடி, மண்டபம், பாக் ஜலசந்தி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பவளப்பாறைகள் 29°C வெப்பம் வரை பிரச்னைகளின்றி இருக்கும் என இருக்கையில், தற்போதைய கடல் மேற்பரப்பு வெப்பம் 33°C தாண்டி உள்ளதாக ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதனால் பவளப்பாறைகளின் அழிவு (Bleaching) தொடங்கிவிட்டது என்றும், போரைட்ஸ் வகை (Porites) பவளப்பாறைகளில் அழிவு பெருமளவு நடந்து அவை வெள்ளை நிறமாக மாறியுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுவரை 50 சதவீதம் போரைட்ஸ் வகை பவளப்பாறைகள் அழிந்துள்ளதாகவும், அதில் 10 சதவீதம் முழுவதும் அழிந்ததாகவும், 90 சதவீதம் கொஞ்சமாக அழிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
10-20 சதவீதம் பிற வகைப் பவளப்பாறைகளும் கொஞ்சமாக அழிந்துபோயுள்ளது. Favites, Dipsastraea, Goniastrea, Platygyra வகை பவளப்பாறைகள் இவற்றுள் அடக்கம்.
அதிவேகமாக வளரக்கூடிய Acropora (இவைதான் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்கனவே, காப்பாபைகஸ் அல்வாரெசி எனும் ஊடுறுவும் கடல்பாசியின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளபோதும், அரசு அதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை) 2022 CAG அறிக்கைப்படி, 2 சதவீதம் ஊடுறுவும் கடல்நாசி காப்பாபைகஸ் அல்வாரெசி மட்டுமே நீக்கப்பட்டுள்ளது) Montipora, Pocillopora வகை பவளப்பாறைகளிலும், லேசான அழிவு (Bleaching) தொடங்கிவிட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெகதீஷ் S.பாகன் மேலும் கூறுகையில், "அடுத்த 2 முதல் 3 வாரம் மிக முக்கியமானது என்றும் (வெப்பம் மேலும் உயரலாம்), தீவிர கண்காணிப்பு அதுவரை தொடரும் என்றும், மழை விரைவில் பெய்யாவிடில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பாதிப்பு மேலும் உயரலாம்" என அவர் கூறியுள்ளார்.
NOAA மற்றும் International Coral Reef Initiative Network -நிபுணர்கள், உலகில் 4ம் பெரிய பவளப்பாறைகளின் அழிவு தொடங்கியிருப்பதாகவும், 2023 தொடக்கத்திலிருந்து இதுவரை 53 நாடுகளில், பவளப்பாறைகளின் அழிவு நடந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பவளப்பாறைகள் வெள்ளை நிறமாக மாற முக்கிய காரணம், வெப்ப உயர்வு காரணமாக பாசிகள் (Algae)-பவளப்பாறைகளுக்கு நிறத்தைக் கொடுப்பவை, பவளப்பாறைகளை விட்டு வெளியேறும் சூழல் எற்படுவதால், அவை உணவின்றி, வெள்ளை நிறமாக மாறுகின்றன.
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க, புவிவெப்பமடைதல் அதிகமாவதும், ஒரு முக்கிய காரணம்.
24.4.24 அன்று தமிழகத்தில், ஈரோட்டில் 42°C ஆக பதிவாகியுள்ளது. (இது வழக்கத்தை விட 5°C அதிகம்)
தமிழக அரசு, கடலில் கார்பன் சேமிப்பை அதிகமாக்க "நீல கார்பன் திட்டத்தை" நடைமுறைப்படுத்தி,அலையாத்திக் காடுகள் (Mangroves), கடல்புற்கள், உப்பங்கழிகள் (Saltmarshes), பவளப்பாறைகளை மேம்படுத்த திட்டங்கள் தீட்டிவந்தாலும், (Carbon Credits to Industries), கார்பன் உமிழ்வை குறைக்க தொழிற்நிறுவனங்களுக்கு உதவும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தாலும், (முதற்கட்டமாக இதற்கு 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது) வெப்ப உயர்வு காரணமாக (புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தாமல்) பவளப்பாறைகளின் அழிவு, ஊடுறுவும் கடல்பாசி (காப்பாபைகஸ் அல்வாரெசி) காரணமாக பவளப்பாறைகளின் அழிவு ஆகியவற்றை இவற்றை கட்டுப்படுத்தாமல், பருவநிலை மாற்ற பாதிப்புகளை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
தமிழக அரசின் கோடைக்கால மின்தேவை இந்தாண்டு வெப்ப உயர்வால் 21,000 MW தாண்டும் என கணிக்கப்பட்ட நிலையில், நிலக்கரி மின்சாரம் மூலம் (மிக மோசமான புவிவெப்பமடைதல் பிரச்னையை ஏற்படுத்தும்) தமிழக அரசு மின்உற்பத்தித்தை கூட்ட நினைப்பது எப்படி சரியாகும்?
(இந்தியாவில் 50 சதவீதம் கார்பன் வழித்தடம் ஆற்றல் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தின்போது உருவாகிறது)
(கடந்த 23.4.24 அன்று, 5,365 MW சூரிய மின்உற்பத்தி மூலம் மின்சாரம் பெற்றது. 10 சதவீதம் சற்று ஆறுதலான விசயம்)
ஈரநிலங்களை காக்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்தும், 27 சதவீதம் ஈரநிலங்கள் உள்ள பகுதியில் பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க முற்படுவது எப்படி சரியாகும்?
சுருக்கமாக, புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தாமல், தமிழகத்தின் வெப்ப உயர்வையும், தமிழக கடல் மேற்பரப்பு (மன்னார் வளைகுடா பகுதி) வெப்பத்தையும் கட்டுப்படுத்தாமல், பவளப்பாறைகளை அழிவிலிருந்து காப்பது கடினம் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
நன்றி. மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்