Fish Gravy : சுவையான நகரை மீன் குழம்பு! மசாலா அரைத்து வித்யாசமான முறையில் செய்வது எப்படி?
Fish Gravy : சுவையான நகரை மீன் குழம்பு! மசாலா அரைத்து வித்யாசமான முறையில் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
நகரை மீன் – அரை கிலோ
மாங்காய் – 4 துண்டு
மசாலா அரைக்க
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் துருவல் – அரை கப்
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
கல் உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
புளிக்குழம்பு பொடி – 2 ஸ்பூன்
(உங்களிடம் புளிக்குழம்பு பொடி இல்லாவிட்டால், மிளகாய் தூள், மல்லித்தூள் தலா ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்)
எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பு வடகம் – ஒரு ஸ்பூன்
(தாளிப்பு வடகம் இல்லாவிட்டால், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்)
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 10 பல் (இடித்தது)
வர மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கியது)
(பொதுவாக மீன் குழம்பை மண் சட்டியில் செய்தால் சுவை அள்ளும். அதோபோல் சாப்பிடுவதற்கு 4 முதல் 8 மணி நேரம் முன்னதாக செய்தால் இன்னும் நல்லது)
கெட்டி புளிக்கரைசல் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, புளிக்குழம்பு பொடி, மஞ்சள் தூள் என அனைத்தையும் ஒன்றான்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிப்பு வடகம் அல்லது தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, இடித்த பூண்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் வர மிளகாயை முமுதாக சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும்.
பின்னர் அரைத்த மசாலா விழுது மற்றும் புளித்தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன், அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் மாங்காயை சேர்க்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் மீனை சேர்த்து 2 அல்லது 3 நிமிடத்தில் இறக்கிவிடவேண்டும்.
ஏனெனில், அதற்குள்ளே மீன் நன்றாக வெந்துவிடும். சங்கரா மீன், நகர மீன் போன்றவை மீன் குழம்புக்கு ஏற்றது. நல்ல சுவையை கொடுக்கும். மேலும் இதன் விலையும் குறைவு.
சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மீன் இந்த உலகிலேயே மிகச்சிறந்த உணவாக உள்ளது.
மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.
மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்டலையில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உலகில் இளம் வயது மரணத்துக்கு பெரும்பாலான காரணமாக இருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள். மீன் இதயத்துக்கு இதமான உணவாக உள்ளது.
உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை போக்க மீன்கள் உதவுகின்றன. இது மன நிலை, மன சோர்வு, குறைவான பலம் மற்றும் வாழ்வில் ஆர்வமின்மை ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மீன்களில் இருந்து அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. மீன் எண்ணெய்களிலும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9