பால் திரிஞ்சு போய்விட்டால் கவலைகொள்ளதேவையில்லை; இப்படி எளிதாக செய்யலாம் ரசமலாய்! இதோ ரெசிபி!
பால் திரிஞ்சு போய்விட்டால் கவலைவேண்டாம். அதை பயன்படுத்தி ரசமலாய் செய்ய முடியும். அதன் ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாலையில் நீங்கள் அவசர அவசரமாக டீ போட்டுக்கொண்டிருக்கும்போது, பால் திரிந்துவிட்டால் கவலையே வேண்டாம். எளிதாக ரசமலாய் செய்து மாலை நேர சிற்றுண்டியாக்கிவிடுங்கள். அதை செய்வது மிகவும் எளிது தான். எப்படி செய்வது என்று பார்க்கலாம். ரசமலாய் செய்வதற்கு பால் தான் மிகவும் முக்கியமான ஒன்று, அடுத்து சர்க்கரை, இந்த இரண்டு பொருளை வைத்தே சுலபமாக நாம் ரசமலாயை செய்துவிட முடியும். ரசமலாய் செய்யும்போது திரிஞ்ச பாலை வைத்தும் செய்யலாம் அல்லது பாலை திரித்தும் செய்யலாம். இரண்டுமே சுவையாகத்தான் இருக்கும். ரசமலாய் செய்வது எப்படி என்று பாருங்கள். இது ஒரு பண்டிகை காலங்களின் செய்து அசத்தலாம். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசமலாயை ஒருமுறையாவது கட்டாயம் செய்துவிடுங்கள்.
தேவையான பொருட்கள்
பால் – ஒரு லிட்டர்
எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
சர்க்கரை – இரண்டு கப்
குங்குமப்பூ – கால் ஸ்பூன்
(குங்குமப்பூவை பாலில் ஊறவைத்துவிடவேண்டும்)
முந்திரி – 10
பாதாம் – 10
பிஸ்தா – 10
(முந்திரி, பாதாம், பிஸ்தா மூன்றையும் துருவிக்கொள்ளவேண்டும்)
செய்முறை
பால் திரிந்துவிட்டால் உங்களுக்கு வேலை மிச்சம் அந்தப்பாலை அப்படியே வடித்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பால் திரியவில்லையென்றால், அந்தப்பாலை காய்ச்சி அதில் எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்த்து திரித்து வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
வடிக்கும்போது கவனம் தேவை. வடிகட்டியில் ஒரு வெள்ளைத்துணி போட்டு வடித்து ஏடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் முற்றிலும் வடிந்தவுடன் அதை எடுத்து நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, தட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைந்தவுடன், அதில் உருட்டி, தட்டிவைத்த ரசமலாய் வில்லைகளைச் சேர்க்கவேண்டும். சர்க்கரைக்கு பாகு பதம் தேவையில்லை. சர்க்கரை கரைந்தாலே போதும். அதில் இந்த உருண்டைகளைச் சேர்த்து ஊறவைத்துவிடவேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எஞ்சிய பாலை ஊற்றி நன்றாகத் கொதிக்கவிடவேண்டும். அடுத்து அதில் பாலில் ஊறவைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். அரைகப் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அதில் பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தாவை தூவி விடவேண்டும். குங்குமப்பூ அந்த பாலுக்கு ஒரு அழகான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். அது ரசமலாய்க்கு ஒரு கவர்ச்சியைத் தரும். நன்றாக சுண்டக்காய்ச்சி வந்ததவுடன் கிடைப்பது கீர்.
இந்த கீரில் சர்க்கரைப் பாகில் ஊறவைத்துள்ள உருண்டைகளை சேர்த்து உடனேயும் சாப்பிடலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடும்போது அட்டகாசமாக இருக்கும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்பகள். இதை பண்டிகை காலங்களிலும் செய்யலாம். ஒருமுறை ருசித்தால் கட்டாயம் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
நீங்கள் இதை வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் செய்துகொடுக்கலாம். மாலை நேர தேநீருடன் பரிமாற நினைத்தால், காலையில் செய்து வைத்துவிடவேண்டும். இதை கொஞ்சம் குளுகுளுவென்று பரிமாறினால்தான் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்