History Of Saree: பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக இருக்கும் சேலை உருவான வரலாறு தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!
History of saree: சேலை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம் மிக்கது. பல நூற்றாண்டு முன்பிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த பாரம்பரியம் பற்றி விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
History Of Saree: சேலை இப்போது நாகரீகமான ஆடையாக இருக்கலாம். ஆனால், அது உலகின் மிகப் பழைமையான பாரம்பரியமிக்க ஆடை வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியைச் சுற்றி செழித்தோங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தில் சேலை போன்ற ஆடைகளின் தோற்றம் அறியப்படுகிறது. சேலை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம் மிக்கது. பல நூற்றாண்டு முன்பிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த பாரம்பரியம் பற்றி விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலையின் பயணம்
சேலையின் பயணம் பருத்தியுடன் தொடங்கியது. இது முதன்முதலில் இந்திய துணைக் கண்டத்தில் கி.மு 5 மில்லினியில் பயிரிடப்பட்டது. சாகுபடிக்குப் பிறகு பருத்தி நெசவுகள் சகாப்தத்தில் பெரியதாக மாறியது. பல ஆண்டுகளுக்கு பிறகு, ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் பணக்கார இந்தியப் பெண்கள் கைவினைஞர்களிடம் விலையுயர்ந்த கற்கள், தங்க நூல்களைப் பயன்படுத்தி அடுக்குகளுக்கு பிரத்தியேகமான சேலைகளை உருவாக்கும்படி கேட்கத் தொடங்கினர். தற்போது பெண்கள் அணியும் சேலை மாறி, சுடிதார், குட்டை சட்டை, கவுன் போன்றவைகளும் ஆண்கள் அணியும் வேட்டி மறைந்து பேண்ட் மற்றும் ஜீன்ஸ் போன்றவைகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இன்றும் விழாக்கள், திருமணங்கள், பாரம்பரிய நிகழ்வுகளில் வேட்டி, சேலைகளுக்குத்தான் மவுசு அதிகம்.
சேலையில் இருக்கும் அழகியல்
இந்தியாவை தவிர்த்து நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் சேலையை அணிவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன என்கின்றனர். 8 முழத் துணியை அழகான மடிப்புகளாக மாற்றி அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு சேலை அணிவதில் பெண்கள் பெருமைகொள்கின்றனர். அதே வேளையில், இன்றைய பாஸ்ட்புட் நாகரிகப் பெண்கள் அவசரதிற்கு சேலை கட்டுவதைத் தவிர்ப்பதும் இருந்தே வருகிறது. எனினும் சேலையில் இருக்கும் அழகியல் மற்ற உடைகளில் இல்லை என்பதும் பல பெண்களின் கருத்தாக உள்ளது.
சேலை ரகங்கள்
சேலையை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் துணிகள் பரந்த அளவிலானவை. பொதுவாக தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, மேற்கு வங்காளத்தில் பல்சுரி பட்டு என பல ரகங்கள் நடைமுறை தயாரிப்பில் இருக்கிறது.
ரூ.38 ஆயிரம் கோடி வர்த்தகம்
தற்போதைய சந்தை நிலவரப்படி உலக அரங்கில் சேலைகள் தயாரிப்பு 38 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மதிப்பு அடுத்த ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சேலை தினம்
தொடக்க காலத்தில் பட்டு சேலைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர். வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஆராய்சியாளர்களின் கூற்றுப்படி, 80 வகையான சேலை ரகங்கள் நடைமுறையில் உள்ளன. அழகான சேலையை உருவாக்கும் நெசவாளர்களின் உழைப்பை கெளரவப்படுத்தும் விதமாகவும் எதிர்வரும் தலைமுறையினர் நமது கலாச்சாரங்களில் ஒன்றான சேலையின் பெருமைகளை அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அன்று சர்வதேச சேலை தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்