கறி இட்லி, கறி இட்லி எக் ஃப்ரை; தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கறி இட்லி, கறி இட்லி எக் ஃப்ரை; தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்!

கறி இட்லி, கறி இட்லி எக் ஃப்ரை; தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்!

Priyadarshini R HT Tamil
Dec 01, 2024 01:39 PM IST

கறி இட்லி, கறி இட்லி எக் ஃப்ரை செய்வது எப்படி என்று பாருங்கள்.

கறி இட்லி, கறி இட்லி எக் ஃப்ரை; தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்!
கறி இட்லி, கறி இட்லி எக் ஃப்ரை; தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்!

கறியை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத மட்டன் (கழுத்துக்கறியாக வாங்கவும்) – கால் கிலோ

சின்ன வெங்காயம் – 20

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 12 பல்

சிறிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

திக்கான தேங்காய்ப் பால் – 50 மில்லி லிட்டர்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

ஏலக்காய் – 2

கிராம்பு – 3

பிரியாணி இலை – 1

சோம்பு – முக்கால் ஸ்பூன்

பட்டை – ஒரு சிறிய துண்டு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

கறியை சிறிய துண்டுகளாக வெட்டி (ஜெம்ஸ் மிட்டாயை விட கொஞ்சம் பெரிதாக) அதை சுத்தமாக அலசி தனியாக வைக்கவேண்டும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இக்கறித் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள், உப்பு அனைத்தும் சேர்த்து கறியின் நிறம் மாறும் வரை நன்கு கிளறவேண்டும்.

பின் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் வைத்து 6 விசில் வந்ததும் இறக்கவேண்டும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவேண்டும்.

பின்னர் தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கி, பின் எஞ்சிய மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள கறியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

கறியில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய்ப்பால் சேர்த்து, ஓரிரு நிமிடங்கள் நன்றாக கிளறவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்பால் நன்றாக வற்றும்படி கிளறி இறக்கினால் கறி இட்லிக்கான கமகமக்கும் மட்டன் சுக்கா தயார்.

கறி இட்லி

இட்லி மாவு தட்டில் ஊற்றும் போது அரை கரண்டி மாவு ஊற்றி இந்தச் சுக்காவிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து மாவில் பரவலாக போட்டு அதன் மேல் மீதி மாவை ஊற்றி அவித்து எடுத்தால் சுவையான பூப்போன்ற கறி இட்லி தயார். இதற்கு தேங்காய் சட்னியே போதும். இருப்பினும் இதற்கு மட்டன் குழம்பே மிகச் சிறந்த சைட்டிஷ்.

கறி இட்லி எக் ஃப்ரை

முதலிலேயே வெறும் இட்லிகளை வேக வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (ஃப்ரை இட்லி போல) மேலே கூறிய கறி சமைக்கும் முறையில் தேங்காய்ப் பால் வற்றும் வேளையில் துண்டுகளாக்கிய இட்லியை எடுத்து, சட்டியிலுள்ள சுக்காவில் சேர்த்துக் கிளறவும். அதோடு இரண்டு முட்டைகளை அடித்து ஊற்றி பிரட்டி பெப்பர் தூவி இறக்கினால் கறி இட்லி எக் ஃப்ரை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.