Cucumber Pachadi : ஆரோக்கியம், கழிவு நீக்கம், குளிர்ச்சி என உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் வெள்ளரிக்காய் பச்சடி!
Cucumber Pachadi : ஆரோக்கியம், கழிவு நீக்கம், குளிர்ச்சி என உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் வெள்ளரிக்காய் பச்சடியை எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வெள்ளரியில் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன் அதில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். வெள்ளரியுடன் தேன், சாமந்தி அல்லது லாவண்டர் பூக்களை அரைத்து அதை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெரும். வெள்ளரியை ஃபிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து, அதை வெட்டி, கண்களில் வைத்தால் உடலை குளுமையாக்கும். முகத்துக்கு பொலிவுதரும். கண்களில் கருவளையங்களை குணமாக்கும். வெள்ளரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஃபோலேட் மற்றும் சிங்க் ஆகியவை நோய் எதிர்க்க உதவுகிறது. வெள்ளரி சாப்பிடும்போது மன ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் கற்றல், கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது உங்கள் மன தைரியத்தை அதிகரித்து, மனஅழுத்தத்தை சமநிலைப்படுத்தி, நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கும். சவாலான நேரங்களில் இந்த வெள்ளரி சாப்பிட மனம் அமைதிபெறும்.
வெயிலால் ஏற்படும் வேனிற் கட்டிகளுக்கு வெள்ளரி மிகவும் சிறந்தது. இதை பேஸ்டாக்கி உங்கள் சருமத்தில் பூசினால், வேனிற்கட்டிகளை போக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெள்ளரி, கற்றாழை, தயிர் ஆகியவற்றை அரைத்து வேனிற்கட்டிகள் அல்லது வியர்குரு உள்ள இடத்தில் தடவவேண்டும். வெள்ளரியை பாலுடன் அரைத்தும் பூச பலன் கிட்டும். வெள்ளரி செரிமானம் மற்றும் வளர்சிதைக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக கால்சியம் அதற்கு உதவுகிறது. வெள்ளரியில் உள்ள கால்சியச்சத்து செரிமானத்துக்கு மட்டுமல்ல, எலும்புகள் வலுப்பெறவும் உதவுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும், அமைப்புக்கும் உதவுகிறது.
வெள்ளரியில் உள்ள வைட்டமின் பி1, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரியில் உள்ள பொட்டாசியச்சத்துக்கள் தசை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றுகிறது. உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது. இயற்கை எலக்ட்ரோலைட் பானமாகும். வறட்சி, நோய் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காலங்களில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது. வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்கிறது. குறிப்பாக இன்றைய கடும் வெயிலுக்கு ஏற்படும் சன் ஸ்ரோக்கில் இருந்து விடுபட உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த வெள்ளரியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் பச்சடி செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெள்ளரி – 2
கெட்டி தயிர் – ஒரு கப்
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கடுகு – கால் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – அரை ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வர மிளகாய் – 1
செய்முறை
தயிரை அடித்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். கையில் விஸ்க் வைத்து அடிக்கவேண்டும். மிக்ஸியில் சேர்க்கக்கூடாது.
தேங்காய் துருவல், சீரகம், கடுகு, பச்சை மிளகாய் என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் அரைத்த விழுது மற்றும் நறுக்கிய வெள்ளரிகளை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவேண்டும்.
பச்சை வாடை போனவுடன், இறக்கி ஆறவைத்துவிடவேண்டும். தனியாக ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு சேர்த்து பொரிந்தவுடன், உளுந்து சேர்த்து சிவந்தவுடன், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதங்கிய வெள்ளரி, தேங்காய் மசாலாவில் சேர்க்கவேண்டும்.
அனைத்தும் நன்றாக ஆறியவுடன், அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கலக்கவேண்டும். சூப்பர் சுவையான வெள்ளரி பச்சடி தயார். இதை சாதம், சப்பாத்தி, பூரி, பரோட்டா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்