Coconut Tree : வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் வறட்சி; கருகும் மரங்கள்! அழியும் தென்னை விவசாயிகள் வாழ்வு!
Coconut Tree : தமிழகத்தில் உயர் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக லட்சக் கணக்கில் தென்னைமரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீரின்றி வறண்டு போவதாலும், உயர் வெப்பம் காரணமாகவும், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகா, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள், பல ஆண்டுகளாக பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கருகிப்போவதை காண சகிக்காமல், அவற்றை வெட்டிப் போடும் அவலம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில்,1.6 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள 2.5 கோடி வளர்ந்த தென்னை மரங்கள் வறட்சியாலும், உயர் வெப்பத்தாலும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இவற்றில் 50 சதவீதம் தென்னை மரங்கள் நீரின்றி கருகி அழியும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,
கடந்த 2 ஆண்டுகளாக தென்னை மரங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், நீரின்றியும், உயர்வெப்பம் காரணமாகவும் கருகியதால், அவற்றை வெட்டும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
2 மாதங்களுக்கு முன் ஒரு தென்னைமரத்தின் விலை ரூ.2,500 என இருந்தது. தற்போது வெட்டப்படும் மரக்கட்டைகளுக்கு, ஒரு மரத்திற்கு ரூ.1,000 மட்டுமே கிடைக்கிறது.
நிலத்தடி நீர்மட்டம் வறட்சியின் காரணமாக கணிசமாகக் குறைந்ததால், 6000 லிட்டர் கொண்ட ஒரு லாரி நீரை ரூ.1500 முதல் ரூ.1800 விலை கொடுத்து வாங்கி, தென்னை மரங்களுக்கு ஊற்றினாலும், அவற்றை காப்பாற்ற முடியவில்லை. தென்னை மரக்கட்டைகளை வாங்கும் வியாபாரிகளும், அதிகளவில் அவை விற்பனைக்கு வருவதால் வாங்கத் தயங்குவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்னை மரக்கட்டைகளை வாங்கும் வியாபாரிகள், 2 மாதங்களுக்கு முன் ஒரு தென்னைமரத்திலிருந்து ஒரு டன் மரக்கட்டைகள் (Timber) கிடைத்ததால், அதற்கு 2,500-3,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும், தற்போது வறட்சியின் காரணமாக, 2 தென்னை மரங்கள் கூட ஒரு டன் எடையை எட்டவில்லை என்றும், வெட்டப்பட்ட மறுநாளிலே, அவை போதிய வளர்ச்சியின்றி எளிதில் உடைந்து போவதாகவும், இதனால் கடந்த மாதத்தில், நாளொன்றுக்கு தென்னைமர வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
நாளொன்றுக்கு லாரி லாரியான தண்ணீர் வாங்கி ஊற்றவேண்டிய நிலை உள்ளது. மேலும் லாரி நீரின் விலையும் ரூ.1,200ல் இருந்து ரூ.1,800ஆக அதிகரித்துள்ளது என விவசாயிகள் வேதனையாகக் கூறுகின்றனர்.
நாட்டுரக தென்னை மரங்களாவது சற்று வலிமையுடன் உள்ளது. ஒட்டுரக தென்னைமரங்கள் பலவீனமாக உள்ளதால், எந்த வியாபாரியும், அதை வாங்க முன்வருவதில்லை.
தென்னை வளர்ப்போர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. 1.6 எக்டேரில் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள 2.5 கோடி தென்னை மரங்களை எப்படி காப்பது என தவிப்பதாக தெரிவித்தார்.
தென்னை மரங்களுக்கு நாளொன்றுக்கு 40 லிட்டர் நீர் தேவை. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் மழை ஓரளவாவது பெய்யும் சூழலில், இந்த முறை மழை துளியும் இல்லாததால், மழையின்றி தென்னை மரங்களை காப்பது கடினம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மதுரையிலும் வெப்பம் 43°C எட்டியுள்ளதால், நாளொன்றுக்கு மாட்டுத்தாவணி மற்றும் பரவை சந்தைக்கு வரும் 80-90 டன் காய்கறி மற்றும் பழங்களில், 5-10 டன் உரிய குளிர்சாதன வசதியின்றி வீணாகிறது. குளிர்காலங்களில் அதன் பாதிப்பு 1-2 டன் என மட்டுமே இருக்கும்.
இந்தாண்டு உயர்வெப்பம் கோடையில் முன்கூட்டியே அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறும்போது, பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உயர்வெப்ப அளவை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் 90 முக்கிய நீர்தேக்கங்களில், 10ல் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை.
எனவே, விவசாயிகளின் வேதனையை உணர்ந்து, புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும். நீர் பிரச்னையை சமாளிக்க தமிழக அரசு ரூ.150 கோடி ஒதுக்கியது மட்டுமன்றி, நீர் பிரச்னை ஏற்பட காரணங்களை திறமையாக எதிர்கொள்ளும் திறனை தமிழக அரசு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்