Chennai Temperature : சென்னையின் வெப்பநிலை இன்னும் உயரக்கூடும்! ஏன் தெரியுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Chennai Temperature : சென்னையின் வெப்பநிலை இன்னும் உயரக்கூடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது ஏன் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?
சென்னை வெப்பம்
2030க்குள் சென்னையின் வெப்பநிலை 2°C அல்லது அதற்கு மேலும் கூடுதலாக அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Energy Efficient Habitat Workshop நிகழ்வில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் சென்னையின் ஆற்றல் பயன்பாடு அதிகமாவது, கான்கிரீட் கட்டடங்களின் அடர்த்தி அதிகமாவதால் 2030ல் சென்னையின் வெப்பநிலை 2°C அதிகமாகும் என தமிழக சுற்றுச்சூழல் துறையால் நடத்தப்பட்ட விழாவின்போது தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு
அமெரிக்காவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் - Coldwell Banker Richard Ellis நிறுவனம் செய்த ஆய்வில் சென்னையின் வீடு, வணிகம், தொழிற் நிறுவனங்கள், வர்த்தகம் (Retail) - இவற்றின் கட்டிடங்களின் பரப்பு அதிகமாவதால், 2030ல் சென்னையில் அதன் பரப்பு அடுத்த 6 ஆண்டுகளில் 2022ல் 246 மில்லியன் சதுரஅடி இருந்தது, 2030ல் 380 மில்லியன் சதுரஅடியாக அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
வீடு, தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தால் (Centralized Air Conditioning) 1°C வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும், சாலைகளின் விரிவாக்கம் மற்றும் பிடுமண் (Bitumen) பயன்பாடு காரணமாக மேலும் 1°C வெப்பம் அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
நிபுணர்கள் சென்னையின் இத்தகைய சூழல் காரணமாக "வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கான பசுமைத் திட்டம்" உடனடித் தேவை என வலியுறுத்துகின்றனர்.
கட்டிடங்கள் கட்டுபவர்கள் கண்ணாடி, கான்கிரீட் பரப்புகளுக்கு பதிலாக மண் கலந்த தரை (Mud-based floor) பயன்பாட்டை அதிகப்படுத்தி வெப்ப உயர்வை கட்டுப்படுத்த முன்வர தமிழக அரசு திட்டமிடல் வேண்டும்.
நீர்நிலைகளை அதிகரித்தல், பசுமைப்பரப்பை அதிகப்படுத்துதல், நீர்இருப்பு பகுதிகளை (Waterfronts) அதிகப்படுத்தினால் சென்னையின் வெப்பத்தை 3°C குறைக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
IIT சென்னை, ராஜ்பவன் அருகில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் மேற்சொன்ன காரணிகளை அதிகப்படுத்தியதால் அங்கு வெப்பம் தணிந்து காணப்படுவது பிற இடங்களிலும் பின்பற்ற முன்உதாரணமாகத் திகழவேண்டும். தமிழக அரசு கண்டுகொள்ளுமா?
சென்னையில் இரண்டாம் விமான நிலையம் பரந்தூரில் 25-27 சதவீத பரப்பு நீர்நிலையாக இருந்தபோதிலும், உள்ளூர் மக்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் சட்ட ரீதியான தீர்மானங்கள் மூலம் எதிர்த்த போதிலும், தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முற்படுவது சூழல் பாதுகாப்பு விஷயத்தில், அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. சென்னையின் வருங்கால வெப்ப உயர்வைப் பற்றி தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
நிபுணர்கள், சென்னையில் மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு கார்பன் வரி விதிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். ஒரு டன் கரியமில வாயு வெளியீட்டிற்கு ரூ.1,600 (20 டாலர்) வரி விதித்தால், (உலக நடைமுறை விதிகளுக்கு ஏற்ப) ஆண்டிற்கு 240 கோடி வரியாக தொழில் நிறுவனங்கள், கட்டிடங்கள் வாயிலாக எளிதில் பெற முடியும்.
உண்மையில் சட்டத்தின்படி - Polluter Pays – தொழிறல் நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்று மக்களின் சுகாதாரம் மற்றும் நலனைக் காப்பது அரசின் கடமை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
மேற்கூரைகளை சூரியவெப்ப தகடுகள் மூலம் அலங்கரிப்பதும் அரசு செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். அது வெப்ப உயர்வை கட்டுப்படுத்தும்.
சென்னையில் வீடுகளின் பரப்பு 2022ல் 130 மில்லியன் சதுரஅடியாக இருந்தது, 2030ல் 195 மில்லியன் சதுரஅடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையின் 3ம் மாஸ்டர் திட்டத்தில் கட்டிட அனுமதியின்போது பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டை குறைக்க திட்டங்கள் தீட்டப்படும் என CMDA செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
நீடித்த கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த பசுமை மற்றும் நீலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே புவிவெப்பமடைதலை (சென்னை உட்பட) கட்டுப்படுத்த முடியும்.
கொடுமை என்னவெனில் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டிற்கு அதிக காரணமாக இருக்கும் பணக்கார வர்கத்தைக் காட்டிலும், அதன் வெளியீட்டிற்கு குறைந்த காரணமாக இருக்கும் ஏழை வர்க்கமே புவிவெப்பமடைதல் பாதிப்பிற்கு அதிகமாக உள்ளாகின்றனர்.
அலுவலக பயன்பாடு-2022-79 மில்லியன் சதுரஅடி- 2030ல் 119 மில்லியன் சதுரஅடியாக,
தொழிற்நிறுவனங்கள் 2022ல்-31 மில்லியன் சதுரஅடி-2030ல் 54 மில்லியன் சதுரஅடியாக,
Retail நிறுவனங்கள்-2022ல் 6 மில்லியன் சதுரஅடி-2030ல் 12 மில்லியன் சதுர அடியாக, உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீர்நிலைகள் உள்ள (25-27% பரப்பு-1 ஏக்கர் ஈரநிலம் 81-216 மெட்ரிக் டன் கார்பனை உள்வாங்கும் திறன் கொண்டது) பரந்தூரில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சென்னைக்கு அருகே விமான நிலையம் அமைக்க திட்டத்தை உறுதிபடுத்தியது சென்னயின் வெப்பத்தைக் குறைக்க துளியும் உதவாது.
அரசு புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் உரிய பாடங்களை கற்க முன்வருமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்