Cancer Report in TN : தமிழகத்தில் புற்றுநோயின் நிலை என்ன தெரியுமா – சுகாதாரத்துறையின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Cancer Report in TN : தமிழகத்தில் புற்றுநோயின் நிலை என்ன தெரியுமா – சுகாதாரத்துறையின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் புற்றுநோயின் நிலை
தமிழத்தில் புற்றுநோய் சிகிச்சையை பரவலாக்காமல் (கிராமப்புறங்கள் அல்லது நகர்புறங்களில் விரிவாக்காமல்) புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்வது மட்டுமே பலனளிக்குமா?
தரமான மற்றும் உரிய சிகிச்சையை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதும் முக்கியமான பணியாக இருக்க வேண்டுமல்லவா?
கடந்தாண்டு 2023ல் தமிழகத்தில் சோதனை முயற்சியாக 4 மாவட்டங்களில் வாய், கர்ப்பபை, மார்பக புற்றுநோய் கண்டறியும் முயற்சியில், புற்றுநோய் வாய்ப்பை உறுதிபடுத்தியும், அதை முழுமையாக உறுதிபடுத்தும் பரிசோதனைகளை செய்ய 62 சதவீத நோயாளிகள் முன்வரவில்லை என்னும் தகவலை தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் ஆய்விற்குப் பின் தெரிவித்துள்ளது.
வாய் புற்றுநோயை உறுதிபடுத்த புற்றுநோய் வாய்ப்புள்ள 15 சதவீதம் நோயாளிகள், மார்பக புற்றுநோயை உறுதிபடுத்த 29 சதவீதம் நோயாளிகள், கர்ப்பபை வாய் புற்றுநோயை உறுதிபடுத்த 49 சதவீதம் நோயாளிகள் மட்டுமே இறுதிகட்ட உறுதிசெய்யும் பரிசோதனைக்கு வந்துள்ளனர்.
ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் புற்றுநோய் அதிகம் இருந்ததால், அந்த மாவட்டங்களும், ஒப்பிட கன்னியாகுமரி மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுகள் நவம்பர் 2023ல் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
மேற்சொன்ன மாவட்டங்களில் ஆலைக் கழிவுகளால் சூழல் அதிக மாசடைந்து காணப்பட்டதாலும், அம்மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருந்ததாலும் அவை பரிசோதனை மற்றும் ஆய்வு மேற்கொள்ள, தமிழக சுகாதாரத்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஆய்வு
இந்த ஆய்வில் சுகாதாரப் பணியாளர்கள் மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து, அங்கு அவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் புற்றுநோய் வாய்ப்புள்ளவர்கள் இறுதிகட்ட, புற்றுநோய் உறுதி பரிசோதனைகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டனர்.
தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம், டிசம்பர் 2023-மே 2024 வரை 8.83 லட்சம் பேர் - வாய் புற்றுநோய், 3.03 லட்சம் பேர் - மார்பக புற்றுநோய், 3.03 லட்சம் பேர் - கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனகளை மேற்கொள்ள திட்டம் தீட்டியிருந்தது.
சுகாதாரப் பணியாளர்கள் ஆரம்பகட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பரிசோதனைகள்
3,25,111 பேர்-வாய் புற்றுநோய்
1,30,250 பேர்-மார்பக புற்றுநோய்
1,00,839 பேர்-கர்ப்பபை வாய் புற்றுநோய்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில்,
1,576 பேருக்கு-வாய் புற்றுநோய்
2,691 பேருக்கு-மார்பக புற்றுநோய்,
5,340 பேருக்கு-கர்ப்பபை வாய் புற்றுநோய் வாய்ப்பை உறுதிசெய்தாலும்,
இறுதிகட்ட பரிசோதனை மூலம் புற்றுநோயை உறுதிசெய்ய,
241 பேர்-வாய் புற்றுநோய்,
783 பேர்-மார்பக புற்றுநோய்,
2602 பேர்-கர்ப்பபை வாய் புற்றுநோய்
மட்டுமே ஆய்விற்கு வந்துள்ளனர்.
உறுதிபடுத்தும் ஆய்வில் கலந்துகொண்டவர்களில் புதிதாக வாய் புற்றுநோய்-2 பேர் (மொத்தம் 241 பேர்), 16 பேருக்கு மார்பக புற்றுநோய், (மொத்தம்-783 பேர்), 23 பேருக்கு கர்ப்பபை வாய் புற்றுநோய் (மொத்தம்-2,602 பேர்) உறுதிபடுத்தப்பட்டது.
மொத்தத்தில் 62 சதவீத புற்றுநோய் வாய்ப்பு உள்ளவர்கள் உறுதிபடுத்தும் பரிசோதனை ஆயவிற்கு வரவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் எவ்வளவோ முயன்றும், இறுதிகட்ட உறுதி செய்யும் பரிசோதனைக்கு 62 சதவீத நோயாளிகள் வரவில்லை.
இதனால் ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயை பரிசோதனை செய்து நோயை குணமாக்கும் முயற்சி வெற்றி பெறாது என தமிழக பொது சுகாதாரத்துறை கவலையுடன் கருத்து வெளியிட்டுள்ளது. புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் மட்டுமே குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என மக்களிடம் அது தெரிவித்தாலும், உண்மை நிலை வேறாக உள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை தடுக்க (உ.ம். புகையிலை பயன்பாடு-வாய் புற்றுநோய்), (மார்பக புற்றுநோயை தடுக்க ஹார்மோன் போன்று செயல்படும் வேதிப்பொருட்களை (Endicrine disruptors) சூழலில் இருந்து தடுக்க, PM 2.5 நுண்துகள்களை காற்றில் குறைத்தல்)
போன்றவற்றில் அரசு தேவையான அக்கறை காட்டாதது.
புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தலும் தரமான, உரிய சிகிச்சை நகர்புறங்களில் உள்ள மிகச்சில அரசு மருத்துவமனைகளில் மட்டும் (அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட புற்றுநோய் சிகிச்சை வாய்ப்பு அல்லது வசதி இல்லை) கிடைக்கும்படி இருக்கும் சூழலில்,
புற்றுநோய் சிகிச்சைக்கு பெருத்த பணச் செலவு இருப்பதாலும்,
புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தாலும், உரிய சிகிச்சை மக்களுக்கு அருகில் கிடைக்காமல் போவதால்,
மக்கள் மீது சுகாதாரத்துறை பழியை போடுவது சரியாக இருக்குமா?
மக்களுக்கு நோய் தடுப்பில் போதிய பங்களிப்பு அல்லது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், புற்றுநோய்க்கான தரமான சிகிச்சை மற்றும் ஆரம்பத்தில் கண்டறியும் வாய்ப்பு கிராமப்புறங்களில் இல்லாமல் இருப்பதும், நகர்புறங்களில் கூட பல அரசு மருத்துவமனைகளில் (அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உட்பட) புற்றுநோய் சிகிச்சை மையங்களை அரசு ஏற்படுத்தாமல் இருக்கும் வரை, புற்றுநோய் காரணிகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாமல் இருந்தால், புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து, நோயை குணப்படுத்துவது அல்லது மக்களை காப்பது இயலாது போகும் என்பதை அரசு மற்றும் சுகாதாரத்துறை உணர்ந்து கொள்ளுமா? தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அவை முன்வருமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்