சென்னை ஸ்பெஷல் வடகறி; இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சொர்க்கம்!
சென்னை ஸ்பெஷல் வடகறி; இட்லி, தோசைக்கு நல்ல தொடுகறி!
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – அரைக்கிலோ
தக்காளி – 2 (நீளமாக மெலிசாக நறுக்கியது)
காரமான பச்சை மிளகாய் – 10 (நீள வாக்கில் நறுக்கியது)
வெங்காயம் – கால் கிலோ (நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பூண்டு – 1 முழு பூண்டு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
ஸ்டார் சோம்பு – 1
சோம்பு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை –
கடலை பருப்பை இரண்டரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல அரைத்துக்கொள்ளவேண்டும். (மசியவோ, பருப்பு பருப்பாகவோ அரைக்கக் கூடாது. சம்பா ரவை பக்குவத்தில் அரைத்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் மிகுந்த ருசியாக இருக்கும்)
இரண்டு வகைகளில் இந்த வடையை செய்யலாம் - சிறு வடையாக தட்டி எண்ணையில் முக்கால் பாகம் பொரித்து எடுப்பது ஒரு வகை அல்லது இதை சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவிட்டு எடுப்பது ஒரு வகை. வடையை பொரித்து செய்தால் தான் ருசி பிரமாதமாக இருக்கும்.
வடை செய்யும்போது அதில் சிறிது உப்பு மட்டும் சேர்க்கவேண்டும். இந்த வகைகளில் செய்த வடைகளை ஒன்றும் பாதியுமாக உடைத்துக் கொள்ளவேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் மசாலா பொருட்களை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவேண்டும். பின்னர் அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் இதில் தக்காளி சேர்க்க நன்றாக குழைய வதக்கவேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்கவிட்டு, அதில் உடைத்து வைத்த வடைகளை போடவேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால் ஆறிய பின் குழம்பு கெட்டியாகிவிடும். கிட்டத்தட்ட முக்கால் லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்க்கலாம். வடை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு காரம் சரி பார்க்கவேண்டும்.
அதன் பின்னர் இன்னும் சிறிது நேரம் கொதிக்க விட்டு, கொத்துமல்லித்தழை தூவி இறக்கிவிடவேண்டும். ருசியான மெட்ராஸ் வடைகறி தயார். இது இட்லி, தோசை, செட் தோசை, மசால் தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் அனைத்திற்கும் நல்ல காம்போவாக இருக்கும்.
பின் குறிப்புகள் –
இதற்கு வடை அரைத்த பின் மிக்ஸியில் இருக்கும் தண்ணீரைக் கறியில் சேர்க்கவேண்டும். இது வடகறியை கெட்டியாக்க உதவும். ஒரிஜினல் வடகறியில் தேங்காய் சேர்ப்பது இல்லை. காரம் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவேண்டும். பச்சை மிளகாய் நல்ல காரமாக இருந்தால் 6 பச்சை மிளகாய்களே போதுமானது. உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதை மாற்றிக்கொள்ளலாம்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்