Betel Leaves Payasam : வெற்றிலையில் பாயாசம் செய்ய முடியுமா? ஆமாம்! இதோ ரெசிபி! கட்டாயம் செய்து அசத்துங்கள்!
Betel Leaves Payasam : வெற்றிலையில் பாயாசம் செய்ய முடியுமா? கஷாயம் மட்டும் செய்ய பயன்படுவது அல்ல. இதோ பாயாசம் செய்வது எப்படி என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டாயம் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
வெற்றிலை கஷாயம் மட்டுமே செய்ய பயன்படுத்தப்படுவது கிடையாது. அதில் பாயாசமும் செய்ய முடியும் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா? இன்றைய காலத்தில் நாம் எண்ணற்ற புதிய டிஷ்களை உருவாக்கி வருகிறோம். மேலும் அவை வித்யாசமாகவும், சுவை, ஆரோக்கியம் நிறைந்தவையாகவும் உள்ளன.
அவற்றில் வெற்றிலை பாயாசம் என்பது முற்றிலுமே வித்யாசமானது. இதை எப்படி செய்வது என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செய்து கட்டாயம் மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
பாதாம் பிசின் – 4 துண்டுகள் (முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும்)
முந்திரி – கால் கப்
பாதாம் – கால் கப்
பிஸ்தா – கால் கப்
பால் – அரை லிட்டர்
வெற்றிலை – 10
சர்க்கரை – ஒரு கப்
ரோஜா குல்கந்து – ஒரு ஸ்பூன்
ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்
உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா – கால் கப்
செய்முறை
பாதாம் பிசினை முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும். முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றையும் முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும்.
பின்னர் அடுத்த நாள், வெற்றிலையை மிக்ஸியில் அரைத்து சாறு பிழிந்து கொள்ளவேண்டும்.
ஊறவைத்துள்ள பாதாம், முந்திரி, பிஸ்தாவில், பாதாமின் தோலை நீக்கிவிட்டு, அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு நல்ல பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும் பால் கொதித்தவுடன் அதில் வெற்றிலை சாறை சேர்க்கவேண்டும்.
இரண்டும் கொதித்து வந்தவுடன், ரோஜா குல்கந்து (இது முற்றிலும் உங்கள் விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் வேண்டாம்) மற்றும் அரைத்து வைத்துள்ள ட்ரை ப்ரூட்ஸ் பேஸ்ட்டை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து சர்க்கரை சேர்த்து நன்றாக பாயாசத்தை கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்தவுடன், ஏலக்காய்ப் பொடி, உடைத்த நட்ஸ்கள், ஊறவைத்துள்ள பாதாம் பிசின் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.
தேவைப்பட்டால் குங்குமப்பூவை பாலில் கலந்து சிறிது நேரம் ஊறவிட்டு, அதையும் இறுதியாக சேர்த்து இறக்கி ஆறவைக்கவேண்டும்.
அது ஆறியவுடன் அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்தான மிதமான சில்லென்ற பதத்துடன் வெற்றிலை பாயாசம் தயார்.
இதை சிறிய பவுலில் சேர்த்து பரிமாறவேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார். சூப்பர் சுவையானதாக இருக்கும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள வெற்றிலை முதல் பாதாம் பிசின் வரை அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவைதாக் என்பதால், இந்த பாயாசம் ஆரோக்கியமானதும் ஆகும்.
வழக்கமான பாயாசங்களை சாப்பிடாமல் இதுபோன்ற வித்யாசமான பாயாசங்கள் செய்து அசத்துங்கள்.
வெற்றிலையில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்
100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.
ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கின்றன. வெற்றிலையும் அதில் ஒன்றுதான். இதில் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலை என்பது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் உணவு வகைகளுள் ஒன்று. இது ஒரு சிறிய இலைதான். இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது பல மில்லியன் இந்தியர்களின், சுவை அரும்புகளையும், இதயத்தையும் கொள்ளை கொண்டது.
இந்தியாவில், திருமணங்கள் முதல் திருவிழாக்கள் வரை வெற்றிலை என்பது முக்கியமான ஒன்றாகும். இது இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தது. இது சுவை நிறைந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்தது.
ஆராய்ச்சிகளின் அடிப்படையில் 15 முதல் 20 மில்லியன் வரை இந்தியர்கள், வெற்றிலையை உட்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் 55,000 எக்டேர் வரை பயிரிடப்படுகிறது. இது 9,000 மில்லியன் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 66 சதவீதம் வரை மேற்கு வங்கத்தில் இருந்து பெறப்படுகிறது.
வெற்றிலை செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது.
பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
செரிமான மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது.
மனஅழுத்தத்தைப் போக்குகிறது.
நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.
டாபிக்ஸ்