Badam Pisin Paal : உடல் சூட்டை தணிக்கும், இயற்கை குளிரூட்டி பாதாம் பிசின் பால்! ஈசியா செஞ்சு, ருசியாக பருகலாம்!
Badam Pisin Paal : உடல் சூட்டை தணிக்கும், இயற்கை குளிரூட்டி பாதாம் பிசின் பால், ஈசியா செஞ்சு, ருசியாக பருகலாம். இதோ உங்களுக்காக ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
பாதாம் பிசினின் நன்மைகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவையும் அறிந்துகொள்வது அவசியம். பாதாம் மரத்தில் இருந்து வடியும் கம் அல்லது கோந்து அல்லது பிசின் போன்றது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது. பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது. மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். பார்க்க கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது. பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.
பாதாம் பிசினின் நன்மைகள்
உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.
உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
கொழுப்பை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.
வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.
தசைகளை வலுப்படுத்துகிறது.
பருவகால பிரச்னைகளை போக்குகிறது.
கருவுறுதலுக்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் உதவுகிறது.
சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்த உதவுகிறது.
உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த பாதாம் பிசினில் எளிதாக பால் தயாரித்து பருகலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பாதாம் பிசின் பால் செய்ய தேவையான பொருட்கள்
பாதாம் பிசின் – 2
தேங்காய் துருவல் – கால் கப்
முந்திரி – 4
பாதாம் – 4
நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன்
மாதுளை முத்துக்கள் – 2 ஸ்பூன்
செய்முறை
பாதாம் பிசினை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்துவிடவேண்டும். நன்றாக ஊறியபின் அது ஜெல்லிபோல் அடுத்தநாள் காலையில் மலர்ந்திருக்கும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் கால் கப், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக அரைத்து பால் பிழிந்துகொள்ளவேண்டும். அதை வடிகட்டி, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஊறவைத்த பாதாம் பிசின் மற்றும் மாதுளை முத்துக்களை தூவி பரிமாறினால், சூப்பர் சுவையில் பாதாம் பிசின் பால் தயார்.
இதை வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் பருகினால், வெயிலால் உடல் அடைந்த சூட்டைத்தணிக்கும். சுவையானதாகவும் இருக்கும்.
குறிப்பு
பாதாம் பிசினை வீட்டில் வைக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். இது கற்கண்டுபோல் இருப்பதால் கற்கண்டு என்று குழந்தைகள் சாப்பிட்டு விடுவார்கள். எனவே இதை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவேண்டும். அதேபோல், இதை ஊறவைத்துதான் பயன்படுத்தவேண்டும்.
பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். கோடை காலங்களில் உடல் வெப்பநிலை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.
குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுக்கிறது. மேலும் எலும்பு, மூட்டுகள், தசைகளை குளிரில் இருந்து காக்கிறது. உடலை குளிர்விக்கும் பானங்களில் கலந்து இது பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.
இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் எடுத்தால் மூச்சுத்திணறல், நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையுடன் இதனை உட்கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்