Top cooku Dupe Cooku: மணிமேகலை.. சூசகமாக தகவலளித்த வெங்கடேஷ் பட்.. என்ன செய்கிறது சன் டிவி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cooku Dupe Cooku: மணிமேகலை.. சூசகமாக தகவலளித்த வெங்கடேஷ் பட்.. என்ன செய்கிறது சன் டிவி?

Top cooku Dupe Cooku: மணிமேகலை.. சூசகமாக தகவலளித்த வெங்கடேஷ் பட்.. என்ன செய்கிறது சன் டிவி?

Malavica Natarajan HT Tamil
Oct 01, 2024 07:41 PM IST

Top cooku Dupe Cooku: சன் டிவியின் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி வெற்றிகரமான முடிந்த நிலையில், அதன் அடுத்த சீசன் குறித்து சூசகமான பதிலை அளித்துள்ளார் வெங்கடேஷ் பட். இந்த பதிலால் பல வதந்திகள் உலா வந்த வண்ணமே உள்ளன.

Top cooku Dupe Cooku: மணிமேகலை.. சூசகமாக தகவலளித்த வெங்கடேஷ் பட்.. என்ன செய்கிறது சன் டிவி?
Top cooku Dupe Cooku: மணிமேகலை.. சூசகமாக தகவலளித்த வெங்கடேஷ் பட்.. என்ன செய்கிறது சன் டிவி?

குக் வித் கோமாளியில் பிரச்சனை

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை மீடியா மேசன் நிறுவனம் தயாரித்து வந்தது. ஆனால், இந்த நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் நடுவில் 4வது சீசனின் போது பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இது நிகழ்ச்சியிலும் சிறிதளவு பிரதிபலிக்கத் தொடங்கியது.

இதையடுத்து மீடியா மேசன் நிறுவனம் விஜய் டிவியை விட்டு வெளியேறியது. அத்தோடு நில்லாமல், அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் விஜய் டிவிக்கு எதிராக கருத்துகளையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். இதனால், இவர்கள் இருவரும் மீடியா மேசன் நிறுவனத்துடன் விஜய் டிவியை விட்டு வெளியேறுவார்கள் என நினைத்த சமயத்தில், செஃப் தாமு இந்த விவகாரத்தில் இருந்து பின் வாங்கினார். மேலும், விஜய் டிவி குறித்து பதிவிட்டிருந்த கருத்தையும் அவர் நீக்கினார். இதனால் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவருக்கும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது.

போட்டியாக களமிறங்கிய சன் டிவி

இந்த நிலையில், வெங்கடேஷ் பட் மற்றும் மீடியா மேசன் நிறுவனம் இணைந்து சன் டிவிக்கு சென்றனர். அங்கு இவர்கள் கூட்டணி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற புதிய நிகழ்ச்சியைத் தொடங்கியது.

அதேசமயம், விஜய் டிவியும் புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் குக் வித் கோமாளி சீசன் 5க்கு களமிறங்கியது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக உணவுத் துறை மற்றும் சினிமா மூலம் பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக நியமித்தது. அத்துடன், இதுவரை நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த மணமேகலை, தொகுப்பாளராக ரக்ஷனுடன் இணைந்து களமிறங்கினார்.

இந்த இரு நிகழ்ச்சிகளும் ஆரம்பத்தில் தடுமாறத் தொடங்கினாலும் போகப் போக ரசிகர்களுக்கு பிடித்தவாறு மாறியது.

மெல்ல மெல்ல முன்னேறிய நிகழ்ச்சி

குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிதான் என்றாலும், அதிலிருந்து டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியை வேறுபடுத்திக் காட்ட பங்கேற்பாளர்களை 3 செஃப்களுக்கு கீழ் குழுக்களாக பிரிப்பது, பங்கேற்பாளர்களுடன் செஃப்பும் எலிமினேட் ஆவது போன்ற சில மாற்றங்களை செய்தது.

பின், நாளுக்கு நாள் இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், டிஆர்பிக்காக சில வேலைகளையும் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் ஏற்பட்ட மோதல் வெடித்து பூதாகரமானதால், கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த பேச்சு அதிகளவில் இருந்தது.

இறுதிப் போட்டியில் செக்

இதனை ஈடு செய்யும் விதமாக இறுதிப் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது சன் டிவி. குக் வித் கோமாளியின் வெற்றியாளராக பிரியங்கா தான் வருவார் என ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அவரது வெற்றியை மக்கள் பெரிதாக கவனிக்கவில்லை. மாறாக டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் ஒரே சமயத்தில் இரு வெற்றியாளர்களை அறிவித்தனர். இறுதிப் போட்டிக்காக என்பி மற்றும் சுஜாதா செய்த சமையல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. அத்துடன் சன் டிவியின் வெற்றியாளர்கள் குறித்து பேசக் காரணம் அவர்களுக்கு அளித்த பரிசுத் தொகை. 

வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையாக சன் டிவி 20 லட்ச ரூபாயை வழங்கியது. ஆனால், விஜய் டிவி டைட்டில் வின்னர் பிரியங்காவிற்கு 5 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கியது. மேலும், 2ம் இடம் பிடித்த சுஜிதாவிற்கும், சிறந்த கோமாளாக தேர்ந்தெடுக்கப்பட்ட குரேஷிக்கும் வெறும் 1 லட்ச ரூபாயை மட்டுமே பரிசாக அளித்துள்ளது. இதனால், சன் டிவியின் வெற்றி மக்களால் பெரிதும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி சன் டிவிக்கு நல்ல டிஆர்பியை கொடுத்த காரணத்தால், அடுத்த சீசனை விரைவில் தொடங்கலாம் என்ற பேச்சு வார்த்தை மீடியா மேசனுக்கும் சன் டிவிக்கும் இடையே நடந்து வருகிறதாம்.

சூசகமாக பேசிய பட்

அதேசமயம், நிகழ்ச்சியின் வெற்றி குறித்து பேசிய செஃப் வெங்கடேஷ் பட், இந்த அளவு வெற்றியை கொடுத்த அனைவருக்கும் நன்றி. இதை குடும்ப நிகழ்ச்சியாக நினைத்து வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி. உங்களைப் போல நாங்களும் 2ம் சீசனுக்கு காத்திருக்கிறோம். நடிப்பு கலக்காத உண்மையான நிகழ்ச்சியை மக்களுக்குத் தர நாங்கள் காத்திருக்கிறோம். அந்த நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இப்போது பிறந்துள்ளது.

அடுத்தகட்டமாக, டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னை சிட்டி சென்டரில் நாளை அக்டோபர் 2ம் தேதி நிகழ்ச்சி ஒன்றை அமைத்துள்ளதாகவும், அதில் மக்கள் பங்கேற்கலாம் எனவும் கூறியிருந்தார்.

இதற்கிடையில், விஜய் டிவியில் இருந்து மணிமேகலை முழுவதுமாக ஓரம்கட்டப்பட்ட நிலையில், அவரை சன் டிவிக்கும் இழுக்கும் முயற்சி நடந்து வருகிறதாம். மேலும், டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் 2ம் சீசனுக்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும் எனவும், அதற்கான தொகுப்பாளராக பங்கேற்க மணிமேகலைக்கு அதிக சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அதிகளவில் உலா வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.